Close
செப்டம்பர் 20, 2024 6:29 காலை

திருமயம்- ஆலங்குடியில் புதிய அரசு கலை,அறிவியல் கல்லூரிகளை காணொலி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்

புதுக்கோட்டை

திருமயத்தில் முதல்வர் திறந்து வைத்த புதிய அரசு கலைக்கல்லூரியை விளக்கேற்றி தொடக்கி வைத்த சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்  (7.7.2022) தலைமைச் செயலகத்தில், 2021-22 மற்றும் 2022-23-ஆம் ஆண்டுகளுக்கான உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கையில் அறிவித்தவாறு 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

2021-2022 ஆம் ஆண்டிற்கான உயர்கல்வித் துறையின் மானியக் கோரிக்கையின் போது, தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான உயர்கல்வி வழங்குவதற்கும், மாணவர் சேர்க்கை விகிதாச்சாரத்தை அதிகப்படுத்தும் நோக்கில், 2022-2023 ஆம் ஆண்டிற்கான உயர்கல்வித் துறையின் மானியக் கோரிக்கையின்போது, புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, திருமயம் ஆகிய 2 தொகுதிகளில் இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என  முதலமைச்சர் அறிவித்தார்.

அதன்படி, புதிதாக தொடங்கப்பட்டுள்ள திருமயம் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஆலங்குடி புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆலங்குடி சந்தைபேட்டை தொழில்பழகுநர் பயிற்சி நிலைய கட்டடத்திலும், நடப்பு கல்வியாண்டு மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது.

நடப்பாண்டுக்கான வகுப்புகள்  அனைத்து வசதிகளுடன் கூடிய, தற்காலிக கட்டடங்களில் செயல்படவுள்ளன.அதனடிப் படையில் முதலமைச்சர் ஸ்டாலின் (07.07.2022) வியாழக்கிழமை புதிதாக தொடங்கி வைக்கப்பட்டுள்ள திருமயம் மற்றும் ஆலங்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முன்னிலையில்  நடைபெற்றது.

திருமயத்தில் நடைபெற்ற நிகழ்வில், அத்தொகுதியின் எம்எல்ஏவும்,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சருமான எஸ்.ரகுபதியும்,  ஆலங்குடியில் நடைபெற்ற நிகழ்வில் அத்தொகுதியின் எம்எல்ஏவும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதனும்  பங்கேற்று தற்காலிக கட்டடங்களில் இயங்கிவரும் கல்லூரிகளில்  குத்துவிளக்கேற்றி பொதுமக்களுக்கு இனிப்புவழங்கி கொண்டாடினர்.

புதுக்கோட்டை
ஆலங்குடியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று விளக்கேற்றிய அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்

உயர்கல்வியினை அனைவரும் பெறும் வகையிலும், சமத்துவம் மற்றும் சமூகநீதிக்கு உட்பட்டு அனைத்து பிரிவினரையும் கல்வியின் எல்லைக்குள் கொண்டு வரும் வகையிலும், கொள்கைகள் வகுக்கப்பட்டு, தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

இலவச கல்வித் திட்டம், முதல் தலைமுறை பட்டதாரி சலுகைகள், போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணாக்கர்களுக்கு நிதியுதவி போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு  முதலமைச்சர் செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது என்று நிகழ்சிகளில் பேசிய அமைச்சர்கள் குறிப்பிட்டனர்.

இந்நிகழ்ச்சிகளில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா , மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன்.

திருமயம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம.சுப்புராம், ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு(எ)சிதம்பரம், கல்லூரி முதல்வர்கள் நாகராஜன் (திருமயம்), எஸ்.சேதுராமன் (ஆலங்குடி), முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் துரைராஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top