Close
செப்டம்பர் 19, 2024 11:05 மணி

புதுக்கோட்டை மாவட்ட மன நல சிகிச்சை மையத்தில் குணமடைந்த கர்நாடகம் மாநிலத்தைச் சேர்ந்த நபர் அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்டார்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட மன நல மைய மருத்துவர் ரெ. தெய்வநாயகம் தலைமையிலான மருத்துவ குழுவினர்

புதுக்கோட்டை மாவட்ட மன நல சிகிச்சை மையத்தில் மன நலம் பாதிக்கப்பட்டு மன நல சிகிச்சை மூலம்  குணமடைந்த கர்நாடகம் மாநிலத்தைச் சேர்ந்த நபர் அவரது குடும்பத்தினருட ன் அனுப்பி வைக்கப்பட்டார்.

தமிழ்நாடு அரசு, மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையம் செயல்படுகிறது.  இம்மையத்தில் ஆதரவற்று சாலைகளில் உலாவும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒருங்கிணைந்த மனநல மருத்துவம் மற்றும் மறுவாழ்வு சேவைகள் வழங்கப்படுகிறது.

மாவட்ட மனநல சிகிச்சை மையத்தில்  மாவட்ட மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் தலைமையில், மனநல மருத்துவர் முத்தமிழ்செல்வி, மனநல பணியாளர்கள் முருகானந்தம், சதீஷ்கண்ணா, அஞ்சலிதேவி, பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர் சிலம்பரசி மற்று செவிலியர்கள்   ஒருங்கிணைந்து  சிகிச்சைக்கு  அளித்து வருகின்றனர்.

இதன் மூலம் பலரும் மன நோயிலிருந்து  குணமடைந்த பின்னர், அவர்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றனர். அவ்வாறு  குணமடைந்து செல்லும் நபருக்கு அவர் வசிக்கும் மாவட்டத்தில்   வீட்டிற்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனை யில் தொடர் சிகிச்சை பெற உறவினர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. இதுவரை புதுக்கோட்டை மாவட்ட மனநல சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்ட 155 க்கும் மேற்பட்டோருக்கு மறுவாழ்வு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாவட்ட மன நல மீள் சிகிச்சை மையத்தில் மன நலம் பாதிக்கப்பட்ட கர்நாடகம் மாநிலத்தைச் சேர்ந்த நபர் மன நல சிகிச்சை மூலம்  குணமடைந்த பின்னர்  அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கவிதாராமு  கூறியதாவது:

புதுக்கோட்டையில் கடந்த 29.10.2021 அன்று ஆதரவற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில்  இருந்த மஞ்சுநாத் என்பவர்  மாவட்ட நிர்வாகத்தால் மீட்கப்பட்டு, புதுக்கோட்டை  அரசு பழைய மருத்துவமனை வளாகத்தில் உள்ள மனநல மீள் மையத்தில் தனியார் மூலம் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தேவையான உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை தேவைகள் வழங்கப்பட்டதுடன், உடனடியாக ஒருங்கிணைந்த பொது மருத்துவம் மற்றும் மனநல சிகிச்சைக்கான மதிப்பீடு செய்யப்பட்டு தேவையான அவசர சிகிச்சை வழங்கப்பட்டது. கொரோனா பரிசோதனை, காசநோய் உள்ளிட்ட தொற்று நோய்களை கண்டறிவதற்கான பரிசோதனை மற்றும் சர்க்கரை , உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய்களை கண்டறிவதற்கான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மனநலமருத்துவர், மனநல செவிலியர், உளவியலாளர், மனநல சமூக பணியாளர் கொண்ட குழுவால் அவருடைய மனநல பிணிக்கான உளவியல் பரிசோதனை களும் செய்யப்பட்டு ஒருங்கிணைந்த மனநல மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.

இதன்பயனாக, பிறர் உதவியின்றி, தன்னுடைய அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதோடு, மையத்தில் உள்ள மற்றவர்களுக்கும் அக்கறையுடன் உதவிசெய்யும் அளவிற்கு அவருடைய மனநிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

இதனையடுத்து மஞ்சுநாத் தனது உறவினர்கள் மற்றும் சொந்த ஊர் பற்றிய விவரங்களை மருத்துவர்களிடம் தெரிவித்தார். பின்னர் அவரது உறவினர்கள் கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டம், மல்லன்குரு என்ற கிராமத்தில் வசிக்கிறார்கள் என்பது மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து கடந்த 08.07.2022 அன்று மஞ்சுநாத், கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டம், மல்லன்குரு என்ற கிராமத்தில் அவரது உறவினர்களுடன் மீண்டும் சேர்த்து வைக்கப்பட்டார் என ஆட்சியர் தெரிவித்தார்.

இது குறித்து மஞ்சுநாத்தின்  குடும்பத்தினர் கூறியதாவது: கடந்த இரண்டு வருடங்களாக  மஞ்சுநாத்தை பல இடங்களிலும் தேடி வந்த நிலையில்,  புதுக்கோட்டை மாவட்ட மன நல மீள் மையத்தில் சிகிச்சை பெற்று  முழுமையாக குணமடைந்து தங்களுடன் மீண்டும் சேர்த்து வைக்கப்பட்டுள்ளார். இதற்காக   தமிழ்நாடு அரசுக்கும் மாவட்ட  ஆட்சியருக்கும், மாவட்ட  மன நல மீள் மைய மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும்   நன்றி கூறுவதாகவும்  தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top