புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் உலக மக்கள்தொகை நாளினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில், புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், குடும்பநலம் குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் பிரசார வாகனத்தினை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்.எஸ்.ரகுபதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஆண்டு தோறும் ஜுலை 11 ஆம் நாள் உலக மக்கள்தொகை நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்ட குடும்பநல செயலகத்தின் சார்பில் குடும்பநல பிரசார விழிப்புணர்வு வாகனத்தின் மூலம் கருத்தடை முறைகள் குறித்தும், தாய்சேய் நலம் குறித்து துண்டுப் பிரசுரங்கள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் மூலமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இதில், செவிலியர் கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி பழைய தலைமை மருத்துவமனை வளாகத்தில் இருந்து புதுக்கோட்டை மாவட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்றது.
.முன்னதாக, சட்டத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் உலக மக்கள்தொகை தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அனைத்து அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் ஆகியோர் உலக மக்கள்தொகை தின உறுதி ஏற்றுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்துதமிழக முதலமைச்சர் தொடங்கி வைக்கப்பட்ட ‘மீண்டும் மஞ்சள்பை” திட்டத்தின் கீழ் குடும்பநல வாசகங்கள் அடங்கிய மஞ்சள்பை, குடும்பநல வாசகங்கள் கொண்ட ஒட்டுவில்லைகள், அந்தார, சாயா எனும் கருத்தடை முறை விளக்க வண்ண சுவரொட்டிகள் அமைச்சர் அவர்களால் வெளியிட்டார்.
மேலும் உலக மக்கள்தொகை நாளினை முன்னிட்டு செவிலியர் கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சட்டத்துறை அமைச்சர் அவர்கள் சான்றிதழ்களும் மற்றும் பரிசுகளை வழங்கி, மரம் வளர்ப்போர் சங்கத்தின் துணையுடன் மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.
பின்னர் குடும்பநல பிரசார விழிப்புணர்வு ஊர்தி மற்றும் மாவட்ட காசநோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே பொருத்தப்பட்ட காசநோய் கண்டறியும் நடமாடும் வாகனம் துவக்கி வைத்து, முதலமைச்சரால் ஏழை, எளிய மக்களுக்காக மருத்துவத்துறையில் திட்டங்கள் அனைத்தையும் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி .
இந்நிகழ்வில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா , இணை இயக்குநர் (ஊரக நலப் பணிகள்) மரு.ராமு, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், துணை இயக்குநர் (குடும்பநலம்) மரு.என்.மலர்விழி, நகர்மன்றத் துணைத் தலைவர் லியாகத் அலி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.