புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ், மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் பராமரிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் (12.07.2022) நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய அரசால் ஜல்சக்தி அபியான் மற்றும் அமிர்த சரோவர் திட்டங்கள் மூலம் நீர் ஆதாரங்களை மேம்பாடு செய்தல், நீர் ஆதாரங்களை பெருக்கிடவும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மத்திய அரசின் கண்காணிப்பு அலுவலர் ரிச்சா குப்தா மற்றும் மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் (நீர் வள ஆதாரம்) டாக்டர் சுமன் சின்கா ஆகியோர்களது முன்னிலையில் அனைத்துத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும், ஜல்சக்தி அபியான் மற்றும் அமிர்த சரோவர் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்திடவும், நீர் வளத்தை பெருக்கிடவும் குடிநீர் ஆதாரங்களை மேம்பாடு செய்திட எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடன் விரிவாக விவாதிக்கப்பட்டது.
அதன்படி ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, வேளாண் மற்றும் உழவர்நலத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகம், வனத்துறை உள்ளிட்ட துறைகளின் வாயிலாக நீர் ஆதாரங்களை மேம்பாடு செய்தல், நீர் ஆதாரங்களை பெருக்கிடவும் திட்டங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதனைத்தொடர்ந்து, அரிமளம் ஊராட்சி ஒன்றியம், கடையங்குடியில் பொதுப்பணித்துறை ஹால்வொர்த் அணைக்கட்டு, திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், திருவுடையார்பட்டி தடுப்பணை, புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முள்@ர் கிராமத்தில் வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பண்ணைக்குட்டை, அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், பரம்பூர் ஊராட்சி, பிலியம்பட்டியில் மேம்படுத்தப்பட்டுள்ள குடிநீர் ஊருணி ஆகியவை குறித்து மத்திய அரசின் கண்காணிப்பு அலுவலர் மற்றும் மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் (நீர் வள ஆதாரம்) ஆகியோர் பார்வையிட்டு நீர்வள ஆதாரத்தை பெருக்கிட செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, இணை இயக்குநர் (வேளாண்மை) (பொ) சக்திவேல், செயற்பொறியாளர் (நீ.வ.ஆ.து.) கனிமொழி, செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) செல்வம், குடிநீர் வடிகால் நிர்வாகப் பொறியாளர் அயினான் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.