40 ஆண்டுகளாக குடியிருந்துவரும் ஆம்பூர் நால்ரோடு பகுதி மக்களுக்கு மனைப்பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்து ஆம்பூர்பட்டி நால்ரோடு கிராமத்தில் 40 ஆண்டு காலமாக குடியிருந்துவரும் ஏழைகளுக்கு குடிமனைப்பட்டா வழங்க வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சண்முகம் தலைமை வகித்தார்.
சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.சங்கர் கண்டன உரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் கே.சண்முகம், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா, சங்கத்தின் மாவட்ட துணைச்செயலாளர் எம்.ஜோஷி, ஒன்றியச் செயலாளர் ஏ.இருதயம், தலைவர் வி.முத்துக்குமார் உள்ளிட்டோர் பேசினர்.
விராலிமலையை தாலுகா, ஆம்பூர்பட்டி நால்ரோடு கிராமத்தில் 40 ஆண்டுகாலமாக குடியிருந்துவரும் ஏழைகளுக்கு வகைமாற்றம் செய்து குடிமனைப்பட்டா வழங்க வேண்டும். போரம்பூர் கிராமம், மலம்பட்டியில் நத்தம் இடத்தில் அரசாங்கத்தால் பல ஆண்டுகளுக்கு முன்பாக வழங்கப்பட்ட பட்டாக்களை கிராம, வட்டக் கணக்கில் போக்குவரத்து செய்ய வேண்டும்.
மலம்பட்டியில் வீடு கட்டி குடியிருப்போர் அனைவருக்கும் குடிமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் இலுப்பூர் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.