புதுக்கோட்டை மாவட்ட தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம், தனியார் பள்ளி கூட்டமைப்பு அலுவலகத்தில் தனியார்பள்ளி தலைவர் அஷ்ரப் அன்சாரி தலைமையில் நடைப்பெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய ஆர்.டி.இ கல்வி கட்டண நிலுவை சென்ற ஆண்டு மற்றும் இந்த ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை உடனே வழங்க வேண்டும்.
ஆர்.டி.இ 25 சதவீத இட ஒதுக்கீட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் குறைந்தபட்சம் 2 பிரிவுகளுக்கு 15 மாணவர்களுக்கு சேர்க்கைசெய்ய அனுமதி வழங்க வேண்டும்.
ஒப்புதல் மற்றும் அங்கீகார புதுபித்தல் கோப்புகளை பரிசீலித்து காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும்.
ஒன்றியங்களில் செயல்படும் வட்டார கல்வி அலுவலர்கள் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் ஒரே விதமாக செயல்பட வேண்டும். ஒன்றியத்திற்கு ஒன்றியம் பல்வேறுவிதமாக செயல்படுவதால் நர்சரி பள்ளிகள் நிர்வாகம் பாதிக்கப்படுகிறது. இதனை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
டிடிசிபி அனுமதி பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்.கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன் அக்கல்வியாண்டில் செலுத்தப்பட்ட பள்ளிவாகன சாலைவரியை இக்கல்வியாண்டிற்கு செலுத்தியவாறு கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்.
தனியார் கல்லூரிகளுக்கு கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்வதைப்போல தனியார் பள்ளிகளுக்கும் உரிய வகையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
மாற்றுச்சான்றிதழ் இல்லாமல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை செய்வதை அனுமதிக்ககூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா நோய் தொற்றிலிருந்து விரைவில் விடுபட்டு பூரண நலம்பெற பிரார்த்தனை செய்யப்பட்டது.
முன்னதாக செயலாளர் முத்துகருப்பன் வரவேற்றார். நிறைவாக பொருளாளர் மேசியா சந்தோஷம் நன்றி கூறினார்.