Close
செப்டம்பர் 20, 2024 6:35 காலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த நீட் தேர்வில் கேள்வித்தாளில் குளறுபடி… மன உளைச்சலுக்கு ஆளான மாணவர்கள்

புதுக்கோட்டை

நீட் தேர்வு

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு  17.7.2022 பிற்பகலில்  நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் முறையாக இந்த வருடம் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது.

புதுக்கோட்டையில்  உள்ள மையங்களிலும் அறந்தாங்கியில் உள்ள  மையங்களிலும் நீட் தேர்வானது  பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது.  எனினும் தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் முன்னதாகவே வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தனர் 1.30 மணிக்கு பிறகு தேர்வு மையத்திற்குள் யார் வந்தாலும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை ஒட்டி பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டி ருந்தன.

அதில், கம்மல்கள், வளையல்கள் அணிய கடைபிடிக்கப்பட்டுள்ளது. இதே போல் செல்போன் கொண்டு வர அனுமதி இல்லை. வாட்ச் போன்றவற்றுக்கும் அனுமதி இல்லை என்ற கட்டுப்பாடுகள் முக்கியமானவை.

தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டில் தேர்வு அறையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. தேர்வர்களுக்கு தேர்வு மையம் சார்பில் என் 95 முக கவசம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த முக கவசம் அணிந்துதான் தேர்வு எழுத வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

நுழைவாயிலில் தேர்வர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படும். இதில் காய்ச்சல் அறிகுறி இருந்தால் அந்த தேர்வர்கள் தனி அறையில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5:20 மணிக்கு நிறைவடைந்தது

இந்நிலையில், அறந்தாங்கியில் நீட் தேர்வு நடந்த ஒரு மையத்தில் நீட் தேர்வு எழுதத் தயாராக இருந்த மாணவர்களிடம்  நீலம் மற்றும் கருப்பு வர்ணங்களில் 2 கவர்கள் கொடுக்கப்பட்டன. அதில்  நீலவர்ண கவரை பிரித்த மாணவர்கள் அதிலிருந்த கேள்விகளுக்கு (பாட்டணி, ஸுவாலஜி)  பதில்களை எழுதிக்கொண்டிருந்தனர்.

புதுக்கோட்டை
நீட் கேள்வித்தாள் இரு வர்ண கவர்

சுமார் 40 நிமிடங்கள் கடந்த பின்னர், தேர்வு அறைக்குள் இருந்த கண்காணிப்பாளர், தேர்வுஎழுதிக்கொண்டிருந்த மாணவ, மாணவிகளிடம் அவர்கள் எழுதிக்கொண்டி ருந்த கேள்வித்தாளை பாதியிலேயே வாங்கிக் கொண்டு, கருப்பு கலர் கவரில் உள்ள கேள்வித்தாளை பிரித்து அதிலுள்ள வினாக்களுக்குத்தான் விடை எழுத வேண்டுமென கூறினர்.

இதனால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த மாணவ, மாணவிகள் கண்ணீர் விட்டு அழுதனர். வேறு வழியின்றி வேறு வினாத்தாளுக்கு விடை எழுத வேண்டி கட்டாயத்தால்,  மன உலைச்சலுடன் எழுதிவிட்டு வெளியே வந்தனர்.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத மாணவிகள் கூறியதாவது: 180 கேள்விகள் ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது. நாங்களும் கடந்த 2 ஆண்டுகளாக பயிற்சி எடுத்த பின்னர்  நம்பிக்கையுடன் தேர்வு எழுத வந்தோம்.

ஆனால், வினாத்தாள் குளறுபடியால்  சுமார் 70 கேள்விகளுக்கு நாங்கள் விடை எழுதிய பின்னர் அது இல்லை எனக்கூறி  வேறு கவரில் இருந்த வினாத்தாளுக்கு விடை எழுத வேண்டும் என்றதால் நாங்கள் நிலை குலைந்து போனோம்.   அந்த வினாத்தாளுக்கு நாங்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் பதற்றத்துடனேயே விடை எழுதிவிட்டு வந்தோம்.  எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது  என வேதனையுடன் கூறினர். இந்த சம்பவத்தால் பெற்றோர்களிடமும் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.

.

.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top