புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளிடை யே வட்டார அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றது.
44-ஆவது சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் 28.07.2022 முதல் 10.08.2022 வரை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி பள்ளி மாணவ, மாணவியர்களிடையே செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வட்டார அளவிலான சதுரங்க போட்டிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களிலும், வட்டாரத்திற்கு ஒரு பள்ளிகள் வீதம் 13 பள்ளிகளில் நடத்தப்பட்டது.
இதில், புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி, கந்தர்வக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மரமடக்கி அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி.
மணமேல்குடி அரசு மேல்நிலைப்பள்ளி, அரிமளம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, இலுப்பூர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பொன்னமராவதி புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 13 பள்ளிகளில் (20.07.2022) நடைபெற்றது.
இப்போட்டிகளில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 2,045 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்று, சதுரங்க விளையாட்டு விளையாடினார்கள். வட்டார அளவிலான இப்போட்டிகளில் வெற்றிபெற்ற 117 மாணவர்கள், 117 மாணவியர்கள் என மொத்தம் 234 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு 25.07.2022 அன்று நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.
மேற்காணும் போட்டிகள் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு, பொறுப்பு ஆசிரியர்கள் மேற்பார்வை யில் நடத்தப்பட்டன. அதன்படி புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டிகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எஸ்.எம்.குமரன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராஜ், பள்ளித் துணை ஆய்வாளர் குருமாரிமுத்து ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டனர்.