Close
நவம்பர் 22, 2024 6:01 காலை

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் உயர்மின்னழுத்தக் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை

எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மின்கோபுரம் கட்டப்படுவதை எதிர்த்து முன்னாள் எம்.எல்.ஏ கே.குப்பன் தலைமையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எண்ணூர், கத்திவாக்கம் பகுதி மீனவர்கள்.

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் உயர் மின்னழுத்தக் கோபுரங்கள் அமைக்கப்படுவதை எதிர்த்து எண்ணூர், கத்திவாக்கம் பகுதி மீனவர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன் தலைமையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலை ஆற்றில் செல்லும் தண்ணீர் எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் கடலில் கலக்கிறது.  இப்பகுதியில் மீனவர்களின் ஒரு பிரிவினர் இந்த ஆற்று முகத்துவாரத்தில் மீன்பிடித்தொழிலில் நீண்டகாலமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வடசென்னை அனல் மின் நிலையத்தில் இரண்டு அலகுகளில் மின்னுற்பத்தி நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சீராக விநியோகம் செய்வதற்கு வசதியாக மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் சில மின்கோபுரங்கள் கொசஸ்தலை ஆற்றில் அமைக்கப்பட உள்ளது.

இதற்கென ஆற்றில் மேடு பகுதியை உருவாக்கி தூண்கள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இவ்வாறு செயற்கையாக மேடுகள் ஏற்படுத்தப்படுவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது பாதிப்பு ஏற்படும் எனக் கூறி பல்வேறு தரப்பினரும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் எண்ணூர், கத்திவாக்கம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் திருவொற்றியூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கே.குப்பன், 7 -ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.கார்த்தி ஆகியோர் தலைமையில் வியாழக்கிழமை முகத்துவாரப் பகுதியில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பைபர் இழை படகுகளில் சென்ற மீனவர்கள் ஆற்றில் பயணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டம் குறித்து கே.குப்பன் கூறியதாவது:
மின்சாரத்தை சீராக விநியோகம் செய்ய வேண்டும் எனில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

சுற்றுச் சூழல் விதிமுறைகளுக்கு மாறாக அனல் மின் நிலையத்தில் குளிரூட்டப்படும் சுடுநீர் சாம்பலுடன் ஆற்றில் கலந்து விடப்படுகிறது. இதனால் மீன் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இப்பகுதி மீனவர்களின் நலனில் மின்வாரியம் அக்கரை செலுத்திடும் வகையில் திட்டங்களை அறிவிக்க வேண்டும். வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டால் இதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்து தரவேண்டும் என்றார் குப்பன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top