Close
செப்டம்பர் 20, 2024 4:00 காலை

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா விழிப்புணர்வு புத்தகப் பேரணி

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புத்தகத்திருவிழா பேரணியை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா விழிப்புணர்வு புத்தகப் பேரணியை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்ட நிருவாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும், 5 -ஆவது புத்தகத் திருவிழா புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் ஜுலை 29 முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்புத்தக திருவிழாவில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் இலட்சக் கணக்கான புத்தகங்கள் இடம் பெறும் வகையில் 80 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் தினந்தோறும் மாலை வேலையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் அறிஞர் பெருமக்களின் சொற்பொழிவும் நடைபெறவுள்ளது.
இதில் குழந்தைகள், ஆன்மீகம், அரசியல், அறிவியல், விருது பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகள் உள்ளிட்ட தலைப்புகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இப்புத்தகத் திருவிழா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு புத்தகப் பேரணியை, புதுக்கோட்டை நீதிமன்ற அலுவலக வளாகத்திலிருந்து, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  (27.07.2022) கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் புத்தகத் திருவிழா குறித்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த செந்தில் கணேஷ் – ராஜலெட்சுமி தம்பதியினர் பாடிய விழிப்புணர்வு பாடல்கள் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது.

நீதிமன்ற வளாகத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணியானது, கீழ ராஜவீதி, நகர்மன்றம் வழியாக சென்று திலகர் திடலை அடைந்தது. இவ்விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள் அனைவரும் மிதிவண்டியில் பின்னால் அமர்ந்திருப்பவர் கையில் புத்தகங்களை ஏந்தி நகரை வலம் வந்து புத்தகத் திருவிழா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் பொன்னமராவதி கிளை அறிவியல் இயக்கம் சார்பில் மாணவ, மாணவியர்கள் ஸ்கேட்டிங் மூலம் இவ்விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர். இந்த விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் அனைவரும் நகர்மன்றத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவை பார்வையிட்டு தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கி பயன்பெறலாம் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் துணை காவல் கண்காணிப்பாளர் லில்லி கிரேஸ், நகராட்சி ஆணையர் நாகராஜன், பொன்னமராவதி பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், புத்தக திருவிழா ஒருங்கிணைப்பு குழுவினர்  கவிஞர் தங்கமூர்த்தி, முத்துநிலவன், பாலகிருஷ்ணன், வீரமுத்து, மணவாளன், ராஜ்குமார், கீதா, விமலா, வரதராஜன், கணேசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top