புதுக்கோட்டையில் நடைபெற உள்ள 5-ஆவது புத்தகத் திருவிழாவில் 60-க்கும் மேற்பட்ட முன்னணிப் பதிப்பகங்க ளுடன் 100 அரங்குகள் தயாராக உள்ளது. ரூ. 3 கோடிக்கும் அதிகமாக புத்தகங்கள் விற்பானை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புத்தகத் திருவிழா குறித்து புதுக்கோட்டையில் புதன்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. விழா ஒருங்கிணைப் பாளர்களான தங்கம்மூர்த்தி, நா.முத்துநிலவன், அ.மணவாளன், ஆர்.ராஜ்குமார், எஸ்.டி.பாலகிருஷ்ணன், எம்.வீரமுத்து, எம்.முத்துக்குமார், டி.விமலா ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டி:
புதுக்கோட்டை மாவட்ட நிருவாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 5-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை வருகின்ற ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7-ஆம் தேதிவரை புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடத்துகிறது.
புத்தகத் திருவிழாவிற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வருகை தரும் வாசகர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு குடிநீர், கழிப்பறை, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு ள்ளது. மழையை சமாளிக்கும் வகையில் பந்தல் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
ஓவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் நடைபெறும் சிறப்பு சொற்பொழிவுகள், அறிவியல் நிகழ்ச்சிகள், கோளரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 60-க்கும் மேற்பட்ட முன்னணிப் பதிப்பகங்களுடன் 100 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. கீழடி உள்ளிட்ட சிறப்பு அரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 முதல் 30 சதவிகிதம் வரை கழிவுகளில் புத்தகங்கள் விற்பனைக்காக காத்திருக்கின்றன.
புத்தகங்களின் விற்பனை இலக்காக ரூபாய் 3 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உள்ளாட்சி அமைப்பகள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு விடுதிகளின் சார்பில் புத்தகங்கள் வாங்குவதற்கும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களையும் வாகனங்களில் அழைத்துவந்து கண்காட்சியை பார்வையிடவும், புத்தகங்களை வாங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாது அருகில் உள்ள மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புத்தகத் திருவிழாவிற்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள், வாசகர்கள் வருகைதர உள்ளனர். இவ்வாறு பேட்டியின் போது புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.