புதுக்கோட்டை பிரகதம்பாள் உடனுறை கோகர்ணஸ்வர் கோவில் ஆடிப்பூர தேரோட்டத்தின்போது தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்தனர்.
திருகோகர்ணம் குடவரைக் கோயில் ஆகும். ஏழாம் நூற்றாண்டு (கி.பி. 600 முதல் 630 வரை) என மதிப்பிட்டிருக் கிறார்கள். குடவரைக் கோயில்கள் என்பவை, செயற்கையான கட்டுமானங்கள் இல்லாமல், முழுமையான பாறைப் பகுதியை அப்ப டியே குடைந்து மண்டபங்கள், இறைவன் திருமேனிகள் என்று உருவாக்கப்பட்டவை.
திருகோகர்ணம் கோகர்ணேசுவரரின் கருவறை, மலைச் சரிவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. நடுவில் தனி அறையில் பெரிய சிவலிங்கம் வடிக்கப்பட்டிருக்கிறது. இக்கோயிலில் சித்திரை திருவிழா, ஆனி திருவிழா, ஆடிப்பூரம் மற்றும் சித்ரா பௌர்ணமி கிரிவலமும் பிரசித்தி பெற்ற நிகழ்வுகளாகும்.
இந்நிலையில், ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 9.30 மணியளவில் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இதற்காக சுவாமி அம்பாள் உற்சவர்களை வைக்கப்பட்ட தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்த போது, எதிர்பாராத விதமாக முன் பக்கமாகக் கவிழ்ந்தது.
இவ்விபத்தில் தேரில் அருகில் இருந்த ஏறத்தாழ 15 பேர் சிக்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் பொதுமக்கள் தேரின் அடியில் சிக்கியவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவசர கால ஊர்தி மூலம் அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, எம்எல்ஏ டாக்டர் முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர், வட்டாட்சியர், இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விபத்துக்காக கூறப்படும் காரணங்கள்:
சுமார் 20 லட்சம் செலவில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்ன புதுப்பிக்கப்பட்டதாகும். கொரோனா காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக ஓடாமல் தேர் நிலையிலேயே நின்றிருந்தது. இத்தேரை வெள்ளோட்டம் பார்த்திருக்க வேண்டும். அதைச்செய்யாமல் தேரோட்டம் நடத்தியதுடம், தேரின் மேல் தளத்துக்கு ஏற்ப உற்சவர் சிலைகள் வைக்கும் பீடம் சரியான உயரத்தில் அமைக்காததும், அதற்காக பலகைகள் பலமில்லாமல் இருந்ததும் இந்த விபத்துக்கு காரணம் என பக்தர்கள் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.