Close
செப்டம்பர் 20, 2024 5:47 காலை

பகிர்தல் அறம் என்பதை  உலகுக்கு கற்றத்தந்தது தமிழ்ச் சமூகம்தான் என்றார் ஆர்.பாலகிருஷ்ணன்

புதுக்கோட்டை

புதுகை புத்தகத்திருவிழாவில் பேசுகிறார், ஒடிசா மாநில முதல்வரின் சிறப்பு ஆலோசகர் ஆர். பாலகிருஷ்ணன்

பகிர்தல் அறம் என்பதை  உலகுக்கு கற்றத்தந்தது தமிழ்ச் சமூகம்தான் என்றார்  ஒடிசா மாநில முதல்வரின் சிறப்பு ஆலோசகரும், எழுத்தாளருமான ஆர். பாலகிருஷ்ணன்.

புதுக்கோட்டை நகர்மன்றத்தில்  நடைபெறும்  5ஆவது புத்தகத் திருவிழாவின் முதல்நாள் நிகழ்வில் அவர் மேலும் பேசியது: தமிழ்ச்சமூகம் தொடர்ந்து தன்னுடைய அடையாளத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக போராடிக் கொண்டே வருகிறது. வெறுப்புணர்வு  இல்லாத பொறுப்புணர்வுடன் அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டியிருக்கிறது. யாரையும் வெறுக்க வேண்டும் என்ற நோக்கம் எப்போதும் இருந்ததில்லை.

சிந்துவெளி நாகரிகம் உள்ளிட்ட இப்போதைய கண்டுபிடிப்புகளில் மிக உன்னதம் என்னவென்றால், அது 2500 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு சமூகம் தனது ஓய்வு நேரத்துக்கான பொழுதுபோக்கையும் கொண்டிருந்தது என்பதுதான். அது வெறுமனே விளையாட்டாக அல்ல. அது “அல்லல் தீர்க்கும் உவகை’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அயர்ச்சியை நீக்கும் விளையாட்டையும் கொண்டிருந்தது என்றால், அந்த மொழியின் பின்னணி என்னவாக இருக்கும் என்பதுதான் நம்முடைய கேள்வி.

திருக்குறளை உலகப் பொதுமறை என்று குறிப்பிடக் கூடாது, அது உலகப் பொதுமுறை. வாழ்வியல் பொதுமுறையைத் தந்த நாகரிகம் நம்முடைய தமிழ் நாகரிகம். “பகிர்தல் அறம்” என்பதை தமிழ்ச் சமூகம் சொல்லிக்கொடுத்திருக்கிறது. கொரோன பெருந்தொற்ற காலத்தில் பசியுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆயிரத்திற்கும் அதிகமான கிலோ மீட்டர் நடந்தே இடம்பெயர்ந்ததைப் பார்த்தோம். புசிக்கு முன்னால் நடப்பது அவர்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை.

பசிப்பிணிப் போக்குவது மிகப்பெரிய மருத்துவம். நான் பணியாற்றம் ஒடிசா மாநிலத்தில் பஞ்சத்தைப் போக்குவதற்காக அரசு அலுவலர்களுக்கு உரிய தனித்துவ அதிகாரத்தையும் வழங்கி அரசாணை வெளியிட்டோம். இந்த அறத்தை எங்களுக்கு சங்க இலக்கியம்தான் சொல்லித் தந்தது.

வரலாற்றை எப்போதும் தவிர்க்கவோ, அதிலிருந்து தப்பிக்கவோ இயலாது. அவ்வாறு தப்பித்துச் செல்ல முற்பட்டோமானால், கட்டுக்கதைகளால் வரலாறு கட்டமைக்கப்பட்டுவிடும். தரவுகள் சார்ந்து வரலாற்றைக் கட்டமைக்க வேண்டும். கதைகளால் அல்ல. யாரையும் சகித்துக் கொண்டு அல்ல, “கலந்து இனிது உரையும்’ வாழ்க்கையை சங்க இலக்கியங்களில் காண முடிகிறது.

1948 -இல் நாட்டிலேயே முதன் முதலாக பொதுநூலகச்சட்டம் தமிழ்நாட்டில்தான் இயற்றப்பட்டது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டில் இவ்வாறான பண்பாட்டுத் தொடர்ச்சியைக் காண முடியும். அறிவு சார்ந்த சமூகமாக தமிழ்ச் சமூகம் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. இப்போது, பண்பாட்டு அரசியல் போராட்டம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. பண்பாடில்லாத அரசியல்தான் கூடாது, அரசியல் கொண்ட பண்பாடு இருக்க வேண்டும். அடையாள மீட்பு என்பது யாருக்கும் எதிரானதல்ல. அது உண்மைக்கான குரல் என்றார் ஆர். பாலகிருஷ்ணன் பேசினார்.

நிகழ்வுக்கு, ஆதிகாலத்து அலங்கார மாளிகை உரிமையாளர் ஜெயபால் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, தனிமாவட்ட வருவாய் அலுவலர் (நிலமெடுப்பு) ஆர். ரம்யாதேவி, அரசு கல்வியியல் கல்லூரி முதல்வர் நாகராஜன், மன்னர் கல்லூரி முதல்வர் திருச்செல்வம், உணவக உரிமையாளர்கள் சங்க நிர்வாகி சண்முகபழனியப்பன், புதுகை நகராட்சி ஆணையர் நாகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

அரசு சிறப்பு வழக்கறிஞர் செந்தில்குமார், பேராசிரியர் மு. கருப்பையா, புத்தகத்திருவிழாக்குழு கவிஞர் ரமா.ராமநாதன், புத்தக நிலைய நிர்வாகி முத்துப்பாண்டியன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

முன்னதாக புத்தகத்திருவிழா ஒருங்கிணைப்புக்குழு அ. மணவாளன் வரவேற்றார்.  விழாக்குழு கமலம் நன்றி கூறினார். கலை நிகழ்ச்சிகளை கலை நிகழ்ச்சிக்குழு தலைவர் குமரேசன் ஒருங்கிணைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top