Close
நவம்பர் 22, 2024 10:51 மணி

புதுக்கோட்டை கோயில் தேர் கவிழ்ந்து காயமடைந்த 9 பேரில் 8 பேருக்கு மட்டுமே நிவாரண உதவி… ஒருவர் விடுபட்டதால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி..

புதுக்கோட்டை

திருக்கோகர்ணம் கோயிலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான தேர்

புதுக்கோட்டை கோயில் தேர் கவிழ்ந்து காயமடைந்த 9 பேரில்
8 பேருக்கு மட்டுமே நிவாரண உதவி.. ஒருவர் விடுபட்டதால்
சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் அருள்மிகு பிரஹதாம்பாள் உடனுறை கோகர்ணேஸ்வரர் கோயிலில் 31.07.2022 அன்று நடைபெற்ற ஆடிப்பூர தேர்திருவிழாவில் எதிர்பாராதவிதமாக நேரிட்ட தேர் விபத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த சரிகா ( 22) விஜயலட்சுமி (65), ராஜ்கு மார் (64) வைரவன் (63), ஜெயக்குமார் (54), கலைச்செல்வி (43), ராஜேந்திரன் (48) அங்கம்மாள் (60), சத்தியபாமா (53) ஆகிய 9 பேர் காயமடைந்தனர். இதில் சத்தியபாமா காலில் முறிவு ஏற்பட்டு புதுக்கோட்டை யிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், தமிழக முதல்வர் 8 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண உதவி அறிவித்தார். முதல் நாளில்  இருந்த 9 பேர் பட்டியல் 8 பேராக ஆனது எப்படி என்பது புரியாத புதிராகும். வருவாய்த்துறையினர் முறையாக விசாரணை செய்து புள்ளி விவரங்களை வழங்காததே காரணம் எனக்கூறப்படுகிறது.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதால் இந்த புறக்கணிப்பு நடந்ததா என்ற கேள்வியும் எழுகிறது.விபத்து நடந்த நாளில் மேற்காணும் காயமடைந்தவர்களின் பட்டியல் அனைத்து செய்தித்தாள்களிலும் பதிவாகியுள்ளது. எனினும் காயமடைந்தவர்கள் பட்டியலில் இருந்து விடுபட்டது எப்படி என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம்.

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் மட்டுமே அரசின் பார்வை படும் என்ற எழுதப்படாத விதி இருக்கிறதா. இதை விளக்குவது யார் என்ற கேள்வி அனைவரிடமும் தொக்கி நிற்கிறது.

தேர்விபத்தில் காயமடைந்து தலையில் காயமும், கால் முறிவும் ஏறப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சத்தியபாமா, திருக்கோகர்ணம் கோயிலில் அரைக்காசு அம்மன் ஊஞ்சல் சேவை அறக்கட்டளையில் தலைவராக கடந்த 29 ஆண்டுகளாக இருந்து ஆன்மீகப்பணியாற்றி வருபவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டது குறித்து  வேதனை தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top