Close
செப்டம்பர் 20, 2024 3:45 காலை

சென்னிமலை அருகே மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்க இடத்தை தானம் வழங்கிய மளிகைக் கடைக்காரர்…

ஈரோடு

சென்னிமலை அருகே மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்க சொந்த நிலத்தை தானம் அளித்த மளிகைக்கடை நடத்தும் குடும்பத்தினர்

சென்னிமலை அருகே மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்க ரூ.25 லட்சம் மதிப்புள்ள இடத்தை மளிகை கடைக்காரர் குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முகாசிபிடாரியூர் ஊராட்சி தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஊராட்சி ஆகும்.  இங்கு நெசவாளர்களுக்காக ஒரே பகுதியில் 1010 வீடுகள் கட்டப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட சென்னிமலை நகரத்தை ஒட்டியுள்ள குமராபுரி, அர்த்தனாரிபாளையம், பாப்பாங்காடு, பி.ஆர்.எஸ் ரோடு, களத்துகாடு பகுதியில் சுமார் 4 ஆயிரத்து 500-க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.

இந்த பகுதியில் குடிநீர் விநியோகம் செய்ய மேல்நிலைத் தொட்டி இல்லை. மேலும் மேல்நிலை தொட்டி அமைக்க ஊராட்சிக்கு சொந்தமாக இடமும் இல்லை. அதனால் அப்பகுதிகளில் நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் மேல்நிலை தொட்டி அமைப்பது சம்பந்தமாக பொது மக்கள் சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு மேல்நிலை தொட்டி அமைக்க ஒரு இடத்தை பொதுமக்கள் சார்பாக சொந்தமாக வாங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒரு இடத்தையும் தேர்வு செய்து ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு தொகையும் நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் சென்னிமலை – பெருந்துறை சாலையில் குமராபுரி 3-வது வீதி பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் முருகேஷ் – தமிழரசி தம்பதியினர் மற்றும் இவர்களது ஒரே மகனான பிரதீப்கிருஷ்ணா ஆகியோர் மேல்நிலை தொட்டி அமைக்க இடம் வாங்குவது தொடர்பான  முயற்சிகளை அறிந்தனர். அங்கு வாழும் ஏராளமான ஏழை குடும்பங்களின் சிரமங்களை போக்கும் வகையில் இடம் எதுவும் வாங்க வேண்டாம் என்றும், எங்களது சொந்தமான இடத்தை தானமாக தருகிறோம் என்று தங்களது விருப்பத்தை தெரிவித்தனர்.
மேலும் இரண்டே நாளில் அந்த இடத்தை ஊராட்சிக்கு தானமாக எழுதியும் தந்தனர். இதனை முகாசிப்பிடாரியூர் ஊராட்சி தலைவர் கேபிள் சி.நாகராஜ், துணை தலைவர் சதீஷ் என்கிற சுப்பிரமணியம், ஊராட்சி மன்ற 14-வது வார்டு உறுப்பினர் கே.செல்வி குழந்தைவேல் ஆகியோர் தான பத்திரத்தை பெற்று கொண்டனர்.

தானமாக தந்த அந்த இடத்தின் மதிப்பு சுமார் 25 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்கள் தந்த இடம் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் கொண்டு செல்ல மேல்நிலை தொட்டி அமைக்க ஏதுவான மேடான பகுதி என்பதால் மிகவும் பயனளிக்கும்  என கூறப்படுகிறது.  பொது மக்களின் நலன் கருதி மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட தானமாக இடத்தை தானமாக வழங்கிய முருகேஷ் – தமிழரசி குடும்பத்தினரை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top