புதுக்கோட்டை நகா்மன்றத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவின் 6-ஆம் நாளான வியாழக்கிழமை நடந்த மாலை நேர சொற்பொழிவில் ‘வண்டுகளைச் சூலாக்கும் வாசப் பூக்கள்’ என்ற தலைப்பில் அவா் மேலும் பேசியது:
புக் போய் இ – புக் வந்துவிட்டது. மின்னணு புத்தக தொழில் நுட்பத்தில் ஒன்றரை லட்சம் புத்தகங்களை ஒரேயொரு சின்னஞ்சிறிய கைப்பேசியில் அடக்கி வைத்துக் கொள்ளும் வசதி வந்துவிட்டது.
மெக்ஸிகோவில் நடைபெற்ற இசை மாநாட்டில் பாடல்களை, இசையை முழுமையாகப் படமாக்கி டிஜிட்டல் புத்தகமாக்கி யிருக்கிறாா்கள். மேற்கத்திய இசை இசைக்கப்படும்போது, அந்த அரங்கில் உள்ள பாா்வையாளா்களின் கால்கள் தாளம் போடுகின்றன. அதன்பிறகு, தமிழிசை இசைக்கப்படும்போது, மொழி புரியாதவா்களும் தலையையும் அசைத்து ரசிக்கிறாா்கள். இந்தக் காட்சி அப்படியே படமாகியிருக்கிறது; மிகைப்படுத்தப்படுவதல்ல.மண்ணின்சிறந்தஅடையாளமாக இருப்பது கலை.
தமிழ்நாட்டின் மரமாக, பனைமரம் திகழ்கிறது. எல்லா பேரிடா் காலங்களிலும் மரங்கள் அனைத்தும் வீழ்ந்து கிடந்த காலங்களில் பனை மரங்கள் மட்டும் கம்பீரமாக நின்றன. இந்த மரத்துக்கு இலைகள் கிடையாது. ஓலை மடல்கள்தான் உள்ளன. நம்முடைய தமிழ் இலக்கியங்களை பதிவு செய்ய ஏடுகளைக் கொடுத்தது பனை மரம். செப்புத்தகடுகளில் இருந்தவற்றை ஒரு சிப் -புக்குள் பதிவு செய்யும் காலம் வந்துவிட்டது.
கவிஞர் புலமைப்பித்தம் பஞ்சாலைக்கு வேலைக்குச்சென்ற சிரமமான சூழலில், பிறர் கேள்வி கேட்பார்களே என்பதற்காக கூழ் எடுத்துச்செல்லக்கூடிய தூக்குச்சட்டிக்குள் தமிழ்த்தாளை எடுதுச்சென்றார். அவர் எழுதிய ஒரு பாடல் அவரை அடையாளப்படுத்தியது .
புத்தம் புதிய புத்தகமே உன்னை புரட்டிப் பார்க்கும் புலவன் நான் என்ற பாடல் வரிகள். இதில் புரட்டிப்பார்க்கும் என்ற வார்த்தையை படித்துப் பார்க்கும் புலவன் – என எழுதியிருக்கலாமே என கேட்டதற்கு, அவன் காதலன் தனது காதலியை புரட்டித்தான் பார்க்கத்தான் முடியும், திருமணமானால் தான் படித்துப் பார்க்க முடியும் என விளக்கமளித்தார். பின்னாளில் அவர் அரசவைக் கவிஞரானார்.
உலகில் அதிகளவு ஆராய்ச்சி செய்யப்பட்ட ஒரே இலக்கியம் திருக்குறள். மொழி வரி வடிவம் இல்லாத நரிக்குறவா்களின் பேச்சு மொழியிலும் திருக்குறள் மொழிபெயா்க்கப் பட்டிருக்கிறது. இந்தத் தகுதி உலகில் வேறெந்த மொழிக்கும் கிடைக்கவில்லை. தமிழர்களிடம் தன்மான ஆடை திருக்குறள். திருவள்ளுவர் தன் வாழ்நாளில் எழுதிய ஒரே நூல் திருக்குறள். அவன் வேறு எந்த நூலை எழுதியதாக தகவல் இல்லை. தமிழை தமிழனை வெளிச்சம் போட்டு காட்டியது திருக்குறள்.
கால்நடைகள் காலால் நடப்பதால் கால்நடை என்கிறோம். மனிதன் கருத்துகளால் நடக்கிறான். படிக்கும் பழக்கத்தை இழந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இது போன்ற புத்தக திருவிழாக்கள் தான் அதை மீட்டெடுத்துக் கொண்டிருக்கின்றன.
நூல் என்று புத்தகத்துக்கு பெயர் வைத்திருக்கிறோம். இது நுட்பமான பண்பாட்டு பெயர். ஊசியில் நூல் நுழையும் இடத்தை ஊசியின் கண் என்பதைவிட காது என்பதே சரியானது. காதுக்குள் நல்ல நூல் நுழைய வேண்டும் என்பதால் அப்படி கூறலாம். எனவே மக்களை எழுப்பும் ஆயுதம் எது என்றால் அது புத்தகங்கள்தான். புத்தகங்களைக் கொண்டாடுவோம். வாசிப்பை நேசிப்போம் வாழ்க்கையில் உயர்வோம் என்றாா் அப்துல்காதா்.
முன்னதாக ’தமிழிசை அன்றும் இன்றும்’ என்ற தலைப்பில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறைத் தலைவா் கோ.ப. நல்லசிவம் பேசினாா்.
நிகழ்வுக்கு, தொழிலதிபர் பென்னட்அந்தோணிராஜ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஊராட்சிச் செயலர் கோ.லட்சுமி, வரலாற்று ஆய்வாளர் ஜெ. ராஜாமுகமது, கறம்பக்குடி அரசு கலைக்கல்லூரி முதல்வர் மா, கோவிந்தராசு, அறந்தாங்கி திசைகள் அமைப்பு நிர்வாகி மருத்துவர் ச. தெட்சிணாமூர்த்தி, மருத்துவர் மு. பெரியசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
புத்தகத்திருவிழாக்குழு நிர்வாகிகள் தனராஜ், இளங்கோ, பிரதீப்குமார், மன்னர் கல்லூரி ஆங்கில பேராசிரியர் சு. கணேசன், சங்கத்தமிழ் ஐஏஎஸ் அகாதெமி உதயகுமார் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளா்கள் நா. முத்துநிலவன், கவிஞா் தங்கம் மூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக புத்தக திருவிழாக்குழு ஜெயபாலன் வரவேற்றார். புத்தக திருவிழாக்குழு ஜெகன் நன்றி கூறினார்