Close
நவம்பர் 22, 2024 3:49 மணி

புதுக்கோட்டையில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை தொடக்கி வைத்த சட்ட அமைச்சர் ரகுபதி. உடன் ஆட்சியர் கவிதா ராமு, எம்எல்ஏ முத்துராஜா

புதுக்கோட்டை நீதிமன்ற அலுவலக வளாகத்திலிருந்து, போதைப் பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணியை,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்  எஸ்.ரகுபதி   (11.08.2022) கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர்  தலைமையில் சென்னையில் 10.08.2022 அன்று போதைப் பொருள் தடுப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் போதைப் பொருட்கள் பயன்பாட்டினை முற்றிலும் தடுக்கும் வகையிலும், பொதுமக்களி டையே போதைப் பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீங்குகள் குறித்தும் மாவட்டம்தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திட அறிவுறுத்தப்பட்டது என  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டை நீதிமன்ற அலுவலக வளாகத்திலிருந்து, போதைப் பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி அண்ணாசிலை, பிருந்தாவனம் வழியாக நகர்மன்றம் சென்று நிறைவடைந்தது. போதைப் பொருள் எதிர்ப்பு தொடர்பான வாசகங்கள் கொண்ட பதாகைகளை மாணவ, மாணவிகள் ஏந்தியபடி, போதைப் பொருள் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பி இப்பேரணியில் கலந்துகொண்டனர்.

அரசு முன்மாதிரி பள்ளி, பிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளி, இராணியார் மேல்நிலைப்பள்ளி, சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, டிஇஎல்சி மேல்நிலைப்பள்ளி, திருக்கோகர்ணம் மேல்நிலைப்பள்ளி, திருவப்பூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளி, இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி, தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி, ராஜகோபாலபுரம் உயர்நிலைப்பள்ளி, காந்திநகர் உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.

இப்பேரணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர்கே.கே.செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.மணிவண்ணன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன், உதவி ஆணையர் (கலால்) மாரி, மாவட்ட கல்வி அலுவலர் மஞ்சுளா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top