431 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 2.10 லட்சம் இடங்களில் பி.இ., பி.டெக். போன்ற படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் 20 -ஆம் தேதி தொடங்கி ஜூலை 27 -ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 11 ஆயிரத்து 905 ஆகும். இதில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 80 பேர் பதிவுக் கட்டணம் செலுத்தி, சான்றிதழ்களை சரிபார்த்துள்ளனர்.
இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்ட நிலையில், தகுதி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கழக இயக்ககத்தில் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை http://tneaonline.org என்ற இணையதளத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டு, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
431 என்ஜினியரிங் கல்லூரிகளில் 2.10 லட்சம் இடங்கள்
அப்போது அவர் கூறியதாவது:பொறியியல் கலந்தாய்வுக்கு பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 36 ஆயிரத்து 975 பேர் கூடுதல் ஆகும். இதேபோல பதிவு கட்டணம் செலுத்திய மாணவர்களின் எண்ணிக்கையில் சென்ற ஆண்டைக் காட்டிலும் 24 ஆயிரத்து 35 கூடுதல் ஆகும். 10 ஆயிரத்து 923 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
1 லட்சத்து 58 ஆயிரத்து 157 மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் பொது பிரிவினர் 1 லட்சத்து 56 ஆயிரத்து 278 ம், தொழிற்கல்வி படிப்புக்கு 1,879 ம் ஆகும்.
இந்த ஆண்டு 431 பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வில் பங்கு பெற உள்ளது. வரும் 20 -ஆம் தேதி முதல் 23 ந்தேதி வரை சிறப்புப் பிரிவினருக்கு கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறுகிறது. இதில் மாற்றுத் திறனாளி, முன்னாள் படைவீரர், விளையாட்டு வீரர், அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீடு ஆகியவை நடைபெறுகிறது.
25 -ஆம் தேதி முதல் அக்டோபர் 21 ந்தேதி வரை பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறுகிறது. துணை கலந்தாய்வு ஆக்டோபர் 22 மற்றும் 23 -ஆம் தேதி நடைபெறுகிறது.
9,981 அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1,000
6 முதல் 12 ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் சேரும் வகையில் 22 ஆயிரத்து 587 மாணவர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. அதில் 12 ஆயிரத்து 606 மாணவர்களும், 9,981 மாணவிகளும் உள்ளனர். இதில் பயனடைந்த மாணவிகளுக்கு, மூவலூர் ராமாமிர்தம் அம்மையர் திட்டத்தின் கீழ் ரூ.1000 உதவித் தொகை அவர்களின் வங்கி கணக்கில் பிரதி மாதம் செலுத்தப்படும்.
விளையாட்டு பிரிவின் கீழ் 1258 பேருக்கும், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுதாரர் பிரிவின் கீழ் 970 பேருக்கும், மாற்றுத்திறனாளிகள் 203 பேருக்கு தரவரிசை வழங்கப்பட்டுள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் அரசு இடஒதுக்கீடாக 1 லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்கள் உள்ளன. இதில் அரசு பள்ளி 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில் 10 ஆயிரத்து 968 இடங்கள் உள்ளன.
சமவாய்ப்பு எண் இல்லை
இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் தொழிற்கல்வி பாட பிரிவு வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு 2% இட ஒதுக்கீடாக 175 இடங்கள் வழங்கப்பட உள்ளன.
ஒரே மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தரவரிசை எண் வழங்குவதற்கு ஏற்கனவே உள்ள நடைமுறையில் கூடுதலாக அரசின் புதிய வழிகாட்டுதலின்படி +2 வகுப்பில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் மற்றும் 10 ம் வகுப்பில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் ஆகியவற்றினை எடுத்துக் கொள்வதால், சமவாய்ப்பு எண்ணின் பயன்பாடு குறைந்து, இந்த வருடம் ஒரு மாணவர் கூட சமவாய்ப்பு எண் பயன்படுத்தவில்லை.
தரவரிசை பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது குறை இருந்தாலோ இன்று முதல் 19ம் தேதி வரை தங்கள் அருகாமையில் உள்ள சேவை மையத்தில் பதிவு செய்தால் உடனே நிவர்த்தி செய்யப்படும்.
அதே போல் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று அரசு உள் ஒதுக்கீடாக 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்காமல் விடுபட்ட மாணவர்கள் தங்களது அருகாமையில் உள்ள சேவை மையத்திற்கு சென்று 19 ந்தேதிக்குள் தங்களது பெயரை இணைத்துக் கொள்ளலாம்.
மேலும் குறைகளை நிவர்த்தி செய்ய மாணவர்களின் தொழில் நுட்பக் கல்வி இயக்கத்தில் செயல்பட்டு வரும் அழைப்பு மையத்தினை தொலைபேசி எண் 18004250110ஐ அழைக்கலாம்.
10 இடங்களை பிடித்தவர்கள்
200க்கு 200 கட் ஆப் தரவரிசையில் முதல் 10 இடங்கள் பிடித்த அனைவரும் 200க்கு 200 கட்ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள் கிறேன். பொறியியல் படிப்புக்கான புதிய பாடத் திட்டங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.
தொழில்நுட்ப கல்வி இயக்குனர் லட்சுமி பிரியா, உயர்கல்வித்துறை முதன்மை செயலர் கார்த்திகேயன், தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன், அண்ணா பல்கலை துணை வேந்தர் வேல்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களை பெற்ற மாணவ மாணவர்களின் பெயர்களை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.
அவர்களின் விவரம் வருமாறு:
1. ரஞ்சிதா கே. – எஸ்.என்.எஸ்.எம். மேல்நிலைப்பள்ளி, கொல்லம். (இவர் தமிழக மாணவிதான். கொல்லத்தில் படித்து முதலாவதாக வந்துள்ளார்)
2. ஹரினிகா எம் -அவ்வை எம்.எச்.எஸ். சடையாம்பட்டி, தர்மபுரி மாவட்டம்.
3. லோகேஷ் கண்ணன் எம்- வேலம்மாள் மெட்ரிக்குலேசன் பள்ளி, திருவள்ளூர் மாவட்டம்.
4. அஜய்.எச் -கொங்கு வேளாளர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, சூலூர், கோவை.
5. கோபி.ஜி அமலா அன்னை மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்ள்ளி, பொன் புதுப்பட்டி, புதுக்கோட்டை.
6. பார்த்திக்ஷா.டி -நேஷனல் மாடல் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, சர்க்கார் சாமக்குளம், கோவை.
7. பவித்ரா.பி- ஸ்ரீசங்கரவதி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி, பம்மல், சென்னை.
8. ஹரிகுரு.ஜெ- எஸ்.ஆர்.வி.பாய்ஸ் மேல்நிலைப் பள்ளி, ராசிபுரம், நாமக்கல்.
9. மதுபாலிகா. எம்- செயின்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, மேலமையூர், செங்கல்பட்டு.
10. ஷாருகேஷ். கே மகாத்மா மாண்டேசுவரி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, பாபா பேட்டை, மதுரை.