Close
மே 23, 2025 5:47 காலை

குடுமியான்மலை வேளாண் கல்லூரி – ஆராய்ச்சி நிலையத்தில் மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி

புதுக்கோட்டை

குடுமியான்மலை வேளாண்கல்லூரியில் நடைபெற்ற கண்காட்சியை தொடக்கி வைத்து பேசிய வேளாண் இணை இயக்குநர் சக்திவேல்

புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உலக உணவு தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்காக மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.  இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலி ருந்து 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

குடுமியான்மலை, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண்மை இணை இயக்குநர்(பொ) மெ.சக்திவேல்  பங்கேற்று  மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சியை துவக்கி வைத்து  பேசியதாவது: அப்போது உணவு உற்பத்தி அதிகப்படுத்த வேண்டும்.  அதே சமயத்தில், தரமான உணவு அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.  அதில்  சிறுதானியங்களின் முக்கியத்துவம் பெறுகின்றன  என்றார் அவர்.

அதனை தொடர்ந்து, வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் முனைவர்.சே.நக்கீரன் பேசுகையில், உணவு உற்பத்தியை அதிகரிக்க வேளாண் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. உணவு உற்பத்தி யில் பாரம்பரிய ரகங்களின் அவசியம் மற்றும் அதன் வகைகள் பற்றியும் குறிப்பிட்டார்.

மேலும், நுண்ணுயிர்களின் பங்கு நோய் மேலாண்மையின் அவசியத்தினையும் அதில் விவசாயிகள் எடுக்க வேண்டிய முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.

புதுக்கோட்டை
குடுமியான்மலை வேளாண்கல்லூரியில் நடைபெற்ற கண்காட்சியில் பங்கேற்ற விவசாயிகள்

விழாவில்  குடுமியான்மலை, வேளாண்மை கல்லூரியின் பயிர் இனப்பெருக்க துறை இணை பேராசிரியர் வே.திருவேங்கடம்  பங்கேற்று பேசுகையில், பாரம்பரிய நெல் இரகங்களான மாப்பிளை சம்பா, கிச்சிலி சம்பா, கருப்பு கவுணி மற்றும் சிறுதானியங்கள் ஆகியவற்றின் வகைகள், பாரம்பரிய உணவு உற்பத்தியில் அவற்றின் பங்கு, பயன்பாடுகளை குறிப்பிட்டார்.

வேளாண்கல்லூரியின் பயிர் இனப்பெருக்க துறை இணை பேராசிரியர் முனைவர்.மு.சண்முகநாதன் பாரம்பரிய பயறு வகைகள், அவற்றின் முக்கியத்துவம், பயன்பாடுகள் குறித்தும் விளக்கிப் பேசினார். தோட்டவியல் துறை, இணை பேராசிரியர் கை.குமணன், நடப்பு சாகுபடியில் உள்ள கத்திரி, பாகல் போன்ற பாரம்பரிய இரகங்களை பாதுகாப்பது பற்றியும், அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

மேலும், மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சியில் வேளாண் – உழவர் நலத்துறை விதை சான்று மற்றும் அங்கக சான்று துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, வனத்துறை மற்றும் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகிய துறைகள் மூலமாக பாரம்பரிய ரகங்கள், வேளாண் பல்கலைக்கழகத்திலிருந்து காளான் வித்துக்கள் ஆகியன குறித்து விளக்கமாக காட்சிப்படுத்தப் பட்டது.

நமது பாரம்பரிய பொருட்களான அம்மிக்கல், ஆட்டுக்கல், திருகை, உரல் மற்றும் உலக்கை, முறம்,  மரக்கால் படி, மூங்கில் கூடை ஆகியவைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டி ருந்தன . விவசாயிகள் கண்காட்சி மூலம் பல புதிய தகவல்களை தெரிந்துக்கொண்டனர்.

மேலும், வனத்துறையிலிருந்து மரக்கன்றுகளும், பாரம்பரிய பயிர்களை சந்தைப்படுத்தும் வகையில், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் வகையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களான புதுக்கோட்டை இயற்கை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திலிருந்து மாப்பிள்ளை சம்பா முறுக்கு, திணை லட்டு ஆகியவையும்.

நக்கீரர் தென்னை கூட்டுப் பண்ணைய உழவர் உற்பத்தி யாளர் நிறுவனத்திலிருந்து தேங்காயிலிருந்து தயாரிக்கபடும் விர்ஜின் ஆயில் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட விளைபொருட் கள் ஆகியவையும், கீரனூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், ஆலங்குடி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகியோரின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களும் விற்பனை செய்யப் பட்டன.

மேலும் நிகழ்ச்சியில், மத்திய அரசு திட்ட வேளாண்மை துணை இயக்குநர் வி.எம்.ரவிச்சந்திரன், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை துணை இயக்குநர் சங்கரலட்சுமி, விதை சான்று மற்றும் அங்கக சான்று துறை உதவி இயக்குநர் ஜெகதீஸ்வரி, தோட்டக்கலை உதவி இயக்குநர் நந்தக்குமார், வேளாண் பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர் கண்ணன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இதில், முன்னோடி விவசாயிகளான வி.எஸ்.தனபதி, நம்புக்குழி சுப்ரமணியன், குளித்தலை தர்மராஜ், பாண்டிப்பத்திரம் திருப்பதி ஆகியோர் பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் சிறுதானிய சாகுபடியில் தங்கள் அனுபவம் மற்றும் சந்தைப்படுத்துவது தொடர்பான  தகவல்களை பகிர்ந்துக்கொண்டனர்.

ஏற்பாடுகளை அன்னவாசல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்  அ.பழனியப்பா  செய்திருந்தார். கண்காட்சி மற்றும் நிகழ்சியினை வேளாண்மை அலுவலர் முகமது ரபி  ஒருங்கிணைத்திருந்தார். முன்னதாக, வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) மா.பெரியசாமி வரவேற்றார்.  உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் ந.சண்முகி நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top