ஆவுடையார்கோவில் வருவாய் கோட்டாட்சியர் தலைமை யில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினர்.
புதுக்கோட்டை மாவட்டம். ஆவுடையார் கோவில் தாலுகா அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சொர்ண ராஜ் தலைமையேற்று நடத்தினார்.
கூட்டத்தில் ஆவுடையார் கோவில் தாசில்தார் வில்லியம்ஸ் மோசஸ், மணமேல்குடி தாசில்தார் ராஜா, அறந்தாங்கி தாசில்தார் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆவுடையார் கோவில் யூனியன் அலுவலர் : ஆவுடையார் கோவில் யூனியன் அலுவலகத்திற்கு மூன்று விவசாய டிராக்டர்கள் வந்திருப்பதாகவும் அதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், ஒரு மணி நேரத்திற்கு 500 ரூபாய் வாடகை கொடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறினார்.
விவசாயி 1: மறவனேந்தல், சாத்தியடி போன்ற கிராம கன்மாய்கள் ஆழப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
விவசாயி 2: கோடியக்கரையில் சுமார் 200 ஏக்கர் நிலம் உள்ளதாகவும், அதில் தேவையற்ற மரங்கள் அப்புறப்படுத்தி தேவையான மரங்களை நட வேண்டும் என்றார்.
விவசாயி 3:அறந்தாங்கி சர்க்கரை ஆலை அருகே உள்ள 100 ஏக்கர் பரப்பில் உள்ள தைல மர காடுகள் அப்புறப்படுத்தி மழை தரும் மரங்களை வளர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
சிபிஎம் நிர்வாகி சுப்பிரமணியன்: பரந்தாமரை கண்மாய் பகுதியில் கழிவுநீர்கலந்து நஞ்சைநிலத்திற்கு பாய்வதாகவும் அதனால் விவசாயம் செய்ய முடியவில்லை என்றும் இரும்பா நாடு கண்மாய்க்கு சிவகங்கையில் இருந்து தண்ணீர் வர வேண்டும். அதுவரை வரக்கூடிய வரத்து வாரி தூர்வாரப் படாமல் உள்ளது. எனவே அதை உடனடியாக தூர்வார வேண்டும் என்றார்.
ஒக்கூர் ஊராட்சி மன்ற தலைவர்: பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் சுமார் 100 வீடுகளுக்கு மேல் கட்டப்படாத நிலையில் உள்ளது. அதற்கு அரசு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும், ஒக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மழை காலங்களில் தண்ணீர் அதிகமாக தேங்குவதால் மாணவர்கள் படிக்க முடியவில்லை என்றும் பேசினார்.
சிபிஎம் ஒன்றிய செயலாளர் நெருப்பு முருகேசன்: வெள்ளாற்றில் மணல் அள்ள அரசு அனுமதி தர வேண்டும் என்றும், மணல் குவாரிகள் அமைக்கப்பட வேண்டும் என்றும். ஆவுடையார் கோவில் கடைவீதியில் 500க்கும் மேற்பட்ட மாடுகள் பராமரிப்பு இல்லாமல் சாலையில் படுப்பதாகவும் இதனால் விபத்துகள் நடப்பதாகவும் தெரிவித்தார்.
பெருநாவலூர் அமலதாஸ்: இரண்டு கோழி பண்ணைகள் அனுமதி பெறாமல் வைத்துள்ளதாகவும், அதனால் மக்களுக்கு சுகாதார கேடு ஏற்படுவதாகவும் உடனே அதை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
பன்னியூரில் விவசாயி: பன்னியூர் கண்மாயின் ஆறு மடைகளும் பழுதாகி விட்டதால், நீர் வெளியேறி விடுகிறது என்றும், இதனால் விவசாயம் செய்ய முடியவில்லை என்றும் கோரிக்கை வைத்தார். இந்த அனைத்து கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று ஆர்டிஓ முன்னிலையில் துறை சார்ந்த அதிகாரிகள் பதிலளித்தனர்.
கூட்டம் ஐந்து முப்பது மணி அளவில் நிறைவுற்றது. கூட்டத்தில் சுமார் 150 க்கும் மேற்பட்ட விவசாயிகளும் துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.