Close
நவம்பர் 22, 2024 4:10 காலை

நெல்பயிரை அழிக்கும் எலிகளை ஒழிப்பது எப்படி… வேளாண்துறை யோசனையை கேளுங்க விவசாயிகளே..

புதுக்கோட்டை

நெல்வயலில் எலிகளைக் கட்டுப்படுத்த யோசனை

நெற்பயிர் சாகுபடியில் எலிகளால் ஏறக்குறைய 25 சதவீதம் மகசூல் குறைவதற்கு வாய்ப்புள்ளதால் விவசாயிகள் எலிகளைக் கட்டுப்படுத்திட வேண்டும்

இது தொடர்பாக  புதுக்கோட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் மா.பெரியசாமி  வெளியிட்ட தகவல்: பயிர் சாகுபடியினைப் பொறுத்தவரை நெற்பயிரை எலிகள் அதிகளவு பாதிக்கின்றது. உணவு தானியங்களைச் சேமிக்கும் போது எலிகளால் 30 % இழப்பு ஏற்படுகிறது.

வயல் எலி, புல் எலி, வயல் சுண்டெலி ஆகிய எலிகள்தான் பயிர்களை அதிகம் தாக்கிச் சேதம் விளைவிக்கின்றன. எலிகள் குறுகிய காலத்தில் அதிகளவு இனப்பெருக்கம் செய்வதனால் பயிர்ச்சேதமும்  அதிகமாக ஏற்படுகிறது.

எலிகளின் பற்கள் வேகமாக வளரும் தன்மையுடையதால் எலிகள் பயிர்கள் வளரும் பருவத்தில் கடித்துச் சேதப்படுத்துகின்றன.  எனவே விவசாயிகள் எலிகளை ஒருங்கிணைந்த முறைகளில் கட்டுப்படுத்தி சேதத்தை தவிர்க்கலாம்.

ஒருங்கிணைந்த எலி ஒழிப்பு முறைகள்: பயிர் சாகுபடியின் தொடக்கத்தில் எலிகளின் இனப்பெருக்கக் காலமான ஜனவரி, மார்ச், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வரப்பு, வளைகளை வெட்டி எலிகளை அவற்றின் குஞ்சுகளுடன் பிடித்து அழிக்கலாம். குறுகிய வரப்புகளை அமைத்தும் எலிகளைக் கட்டுப்படுத்தலாம்.

வயலுக்கு அருகில் வைக்கோல் போர் வைத்திருந்தால் எலிகளுக்கு உறைவிடமாக அமையும். எனவே வைக்கோல் போர் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். வயல்களில் களைக் கட்டுப்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு துப்புரவாகப் பராமரித்தால் எலிகள் நடமாட்டம் குறையும்.

வயல்களில் ஆங்காங்கே ‘யு” வடிவக் குச்சிகளையோ தென்னை மட்டையின் அடிப்பகுதியைத் தலைகீழாக வைத்து ஆந்தை, கோட்டான் மற்றும் பறவைகளை அமரச் செய்து வயல்களில் திரியும் எலிகளைப் பிடித்து  சாப்பிய  வழிவகை செய்யலாம்.

புதுக்கோட்டை
நெல்வயலில் எலிகளை கட்டுப்படுத்த யோசனை

வயல்களில் மூங்கில் கிட்டிகளை (ஏக்கருக்கு 25 முதல் 40 கிட்டிகள்) வரப்பு ஓரங்களிலும், வயலினுள்ளேயும்  வைக்க வேண்டும். வைக்கோலை மெத்தை போன்று சிறிது அகலமாகவும் தட்டையாகவும் செய்து எலிக்கிட்டியை ஊன்றி வில்லுக்கு இருபுறமும் வைக்கோல் மீது நெல் பொரியை இட்டு மாலை நேரங்களில் வைத்து எலிகளை பிடித்து அழிக்கலாம்.

சிங்க் பாஸ்பைடு எலிநஞ்சு:சிங்க் பாஸ்பைடு எலி நஞ்சுவை வைக்கும் முன் முதல் மூன்று நாட்கள் 98 கிராம் நெற்பொரி + 2 கிராம் தேங்காய் எண்ணெய் இட்டு வைத்து பழக்கப்படுத்திட வேண்டும். பின்பு 96 கிராம் நெற்பொறி – 2 கிராம் தேங்காய் எண்ணெய் + 2 கிராம் சிங்க் பாஸ்பைடு கலந்து 4 முதல் 5 – ஆவது நாள் தேங்காய் கொட்டாங்குச்சியில் கைப்படாமல் இட்டுவைத்து அழிக்கலாம்.

புரோமோடைலான்: ஒருமுறை சாப்பிட்டாலே எலிகளைக் கொல்லும் இரத்தம் உறையாத் தன்மை கொண்ட நஞ்சினைக் கொண்ட புரோமோடையலான் – 0.005% மற்றும் கம்பு அல்லது கோதுமைமாவு கலந்த கேக் கிடைக்கிறது. இதனை வளைக்கு ஒரு வில்லை வீதம் வைத்தும் வயல்களில் எலிகளின் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வைத்தும் எலிகளை அழிக்கலாம்.  ஒரு தடவை 5 கிராம் உணவு உண்டாலே உடலில் இரத்தக் கசிவு ஏற்பட்டு எலிகள் இறந்துவிடும்.

அலுமினியம் பாஸ்பைடு மாத்திரைகள்: ஒரு அலுமினியம் பாஸ்பைடு (சுமார் 3 கிராம்) மாத்திரையை வளையின் நடுவில் ஒரு துண்டுக் காகிதத்தைத் தரையில் வைத்து அதன் மேல் மாத்திரையை வைத்து வளையின் வாயிலை நன்கு மூடிவிடவும். வளையின் உள்ளே நச்சுப்புகை பரவி எலிகளைக் கொன்றுவிடும்.எலிகள் விரைவில் இறப்பதற்கு வளையில் போதிய அளவு மண் ஈரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

எனவே விவசாயிகள் தற்பொழுது சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெல் பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை ஒருங்கி ணைந்த முறையில் கட்டுப்படுத்திடவும் மேலும் கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என புதுக்கோட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் மா.பெரியசாமி யோசனை தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top