Close
நவம்பர் 22, 2024 6:19 காலை

உரிமம் இன்றி உர இருப்பு வைத்திருந்தாலோ உரங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை: புதுகை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

புதுக்கோட்டை

உர விற்பனை... ஆட்சியர் எச்சரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் உரிமம் இன்றி உர இருப்பு வைத்திருந்தாலோ உரங்களை அதிக விலைக்கு விற்றால் உர உரிமம் ரத்து செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட உர விற்பனையாளர்கள் உர விற்பனை அனுமதி பெறாத இடங்களிலில் உர இருப்பு வைத்திருந்தாலோ அல்லது அதிக விலைக்கு உரங்களை விற்றாலோ உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நெல், உளுந்து மக்காச்சோளம், நிலக்கடலை, தென்னை ஆகிய பயிர்களும், மா, முந்திரி, காய்கறிகள் போன்ற தோட்டக்கலைப் பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

தற்பொழுது சாகுபடி செய்யப்பட் டுள்ள 2 இலட்சத்து 15 ஆயிரத்து 831 ஏக்கர் சம்பா நெற் பயிருக்கு விவசாயிகள் மேலுரம் இட்டு வருகின்றனர். இந்த பயிர் சாகுபடிகளுக்கு தேவையான யூரியா 3795 மெட்ரிக் டன்கள், டிஏபி 683 மெட்ரிக் டன்கள், பொட்டாஷ் 1180 மெட்ரிக் டன்கள், காம்ளக்ஸ் 4871 மெட்ரிக் டன்கள், சூப்பர் 533 மெட்ரிக் டன்கள் ஆகியன தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப் பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் விவசாயிகள் சாகுபடிக்கு தேவையான உரங்களை மண்வள அட்டையின் பரிந்துரைப்படி இட்டால் உரச்செலவை குறைப்பதோடு, மண்வளமும் மேம்படும், நெல் சாகுபடியில் யூரியா உரங்களை இடும்பொழுது பிரித்து பிரித்து இட வேண்டும்.

யூரியாவுடன் ஜிப்சம் மற்றும் வேப்பம் புண்ணாக்கு ஆகிய வற்றை 5:4:1 என்ற விகிதத்தில் கலந்து இட வேண்டும். ஒரு ஏக்கருக்கு ஒரு தெளிப்பிற்கு அதிகபட்சமாக 26 கிலோ விற்கு மேல் சம்பா நெற்பயிருக்கு இடக்கூடாது. அதிகமாக இடும் பொழுது பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அதிகமாவதோடு, முதிர்ச்சி பருவத்தில் நெற்பயிர் சாய்வதற்கும் வழி வகுக்கின்றது.

தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனையில் உள்ள இப்கோ நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் நானோ யூரியாவினை விவசாயிகள் யூரியா உரத்திற்கு பதிலாக பயன்படுத்தலாம். ஒரு ஏக்கருக்கு 500 மிலி நானோ யூரியா வினை நீரில் கலந்து பயிர்களின் இலைகளின் மேல் நன்கு படுமாறு தெளிப்பதனால் யூரியா பயன்பாட்டு திறன் அதிகப்படுவதுடன் அதிக உரம் விரயம் ஆவதும் தவிர்க்கலாம்.

மொத்த உர விற்பனையாளர்கள், வெளி மாவட்டங்களுக்கு உரங்களை ஏற்றுமதி செய்யக் கூடாது எனவும், மேலும் உரங்களை வெளி மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்யக்கூடாது எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. சில்லரை உர விற்பனையாளர்களுக்கு அனுப்பும் பொழுது உரிய பட்டியல்கள் மற்றும் ஆவணத்துடன் உரங்களை வாகனங்களில் அனுப்ப வேண்டும்.

உர விற்பனையாளர்கள் உர உரிமத்தில் அனுமதி பெறாத இடங்களில் உரத்தினை இருப்பு வைப்பதும், உரிமத்தில் அனுமதி பெறாத நிறுவனங்களிடமிருந்து உரங்கள், கலப்பு உரங்கள் மற்றும் நுண்ணூட்ட கலவை உரங்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்வதும், அதனை விவசாயிகளுக்கு விற்பனை செய்வதும் கூடாது. அனுமதி பெறாத நிறுவனங்களிட மிருந்து கொள்முதல் மற்றும் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உர உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

மேலும் விவசாயிகள் உர விற்பனை நிலையத்திற்கு செல்லும்பொழுது, ஆதார் அட்டையுடன், மண்வள அட்டை பரிந்துரையின்படி, உரம் வாங்கி பயன்படுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. சில்லரை உர விற்பனையாளர் கள், விவசாயிகளுக்கு உர மூட்டையில் காணப்படும் அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகள் அல்லாத நுகர்வோர், சாகுபடி இல்லாத விவசாயிகள் ஆகியோருக்கு உரம் விற்பனை செய்யக்கூடாது. மேலும் ஒரே நபருக்கு தேவைக்கு அதிகமாக விற்பனை செய்யக்கூடாது.

இதுகுறித்து அரசின் உத்தரவுப்படி, மாதம் வாரியாக உரம் அதிகமாக வாங்கும் முதல் 20 விவசாயிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணையின் அடிப்படை யில் விற்பனையாளர்களுக்கு விற்பனை தடையாணை வழங்கப்பட்டு வருகிறது.

எனவே தொடர்ந்து வரும் மாதங்களில் மீண்டும் இதுபோன்று, குறிப்பிட்ட விவசாயிகளின் பெயரில் தேவைக்கு அதிகமாக வோ அல்லது சாகுபடி இல்லாத நபர்களின் பெயரிலோ உரம் விற்பனை மேற்கொள்ளப்பட்டால் சில்லரை உர உரிமம் இரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

எனவே, திடீர் ஆய்வின் போது தேவையற்ற இடுபொருட்களை விவசாயிகளுக்கு இணைத்து வழங்குவது கண்டறியப்பட் டாலும் அல்லது புகார் ஏதும் பெறப்பட்டாலும் உரக் கட்டுப்பாடு ஆணை 1985 -ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top