Close
நவம்பர் 22, 2024 4:29 காலை

உரங்கள் விற்பனையில் முறைகேடு… உரிமம் ரத்து செய்யப்படும்: ஆட்சியர் மெர்சி ரம்யா எச்சரிக்கை

புதுக்கோட்டை

உர விற்பனையில் முறை கேடு செய்தால் உரிமம் ரத்து

புதுக்கோட்டை மாவட்டத்தில்  மானிய உரங்களை அதிக விலைக்கு விற்றால் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படுமென மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா எச்சரித்துள்ளார்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சிரம்யா

புதுக்கோட்டை மாவட்டத்தில் பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது ஆழ்துளை கிணறு, கிணறு ஆகியவற்றில் உள்ள நீர் இருப்பினை பயன்படுத்தி குறுவை நெல் சாகுபடி, மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, கரும்பு, தென்னை, காய்கறிகள், மா, வாழை மற்றும் மரவள்ளி கிழங்கு ஆகிய பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

மாவட்டத்தில் தற்பொழுது சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு தேவையான இரசாயன உரங்களான யூரியா 5,617 மெட்ரிக் டன்கள், டிஏபி 2,022 மெட்ரி டன்கள், பொட்டாஷ் 715 மெட்ரிக் டன்கள், காம்ப்ளக்ஸ் 5,145 மெட்ரிக் டன்கள், ஆகியன தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

உர உரிமம் பெற்ற மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை யாளர்கள் கவனத்திற்கு, மானிய உரங்களை பிற மாவட்டங்களுக்கு அனுப்புவதோ, பிற மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்யவோ கூடாது.

உர விற்பனை உரிமத்தில் அனுமதி பெற்ற நிறுவனங்களி டமிருந்து கொள்முதல் செய்து, அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே இருப்பு வைத்து விற்பனை செய்திட வேண்டும். உர மூட்டையின்மேல் அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மேல் உரங்களை விற்பனை செய்யக்கூடாது.

விற்பனை நிலையத்தில் உர இருப்பு மற்றும் விலை விபர பலகையினை விவசாயிகளின் பார்வையில் படும்படி வைத்து தினசரி பராமரிக்கப்பட வேண்டும். உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்திட வேண்டும்.

விவசாயிகளுக்கு தேவையற்ற இடுபொருட்களை இணைத்து விற்பனை செய்யக்கூடாது. தரமற்ற மற்றும் போலியான உரங்களை விற்பனை செய்தல் கூடாது.  மேலும், விவசாயி களுக்கு தரமான உரங்கள் விநியோகம் செய்யப்படுகிறதா என உர ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொள்ளும் பொழுது, உரங்களை, அதிக விலைக்கு விற்பனை செய்தல்,

விவசாயம் அல்லாத தேவைகளுக்கு மானிய உரங்களை விற்பனை செய்தல், உரம் கடத்தல், பதுக்கல்  முறைகேடு களில்  ஈடுபடுவது கண்டறியப்பட்டால் அத்தியாவாசிய பண்டங்கள் சட்டம் 1955 உரக்கட்டுபாட்டு ஆணை 1985 மற்றும் உர நகர்வு கட்டுப்பாட்டு ஆணை 1973 ஆகியவற்றின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மீறினால் உர உரிமம் ரத்து செய்யப்படும் .

எனவேஇ விவசாயிகள் உரம் சம்பந்தமான புகார்களுக்கு, மாவட்ட உர கண்காணிப்பு மையத்தினை 04322-221666 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top