மக்காச்சோளத்தில் சென்சார் தொழில்நுட்ப உதவியுடன் படைப்புழுவை கண்காணித்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பான செயல் விளக்க கருத்தரங்கம் நடைபெற்றது.
எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், கேபி, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பயிர் நலன் மற்றும் பாதுகாப்பு, நோமேடிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய மக்காச்சோளத்தில் சென்சார் தொழில்நுட்ப உதவியுடன் படைப்புலுவை கட்டுப்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் தொடர்பான செயல் விளக்க கருத்தரங்கம் புதுக்கோட்டையில் நடைபெற்றது.
நிகழ்விற்கு எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர். ராஜ்குமார் தலைமை வகித்தார். இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானி டெரெக் ஸ்கஃபெல், சென்சார் தொழில்நுட்ப அடிப்படையில் இயங்கும் இனக்கவர்சிப் பொறி ஆராய்ச்சி பற்றி விளக்கி பேசியதாவது:
மக்காச்சோளத்தில் சேதத்தை ஏற்படுத்தும் படைப்புழு அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட அதிக சேதத்தை உண்டாக்கக்கூடிய ஒரு அழிவுகரமான பூச்சியாகும். தற்போது இப்பூச்சியானது மக்காச்சோளத்தில் மிகுதியான பொருளா தார சேதத்தை ஏற்படுத்துகிறது.
இப்படைப்புழுவானது மக்காச்சோளத்தின் முதன்மையான பூச்சிகளில் ஒன்றாகும். இப்புலுவை கட்டுப்படுத்த அதிகப்படியான இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால் சுற்றுசூழல் பாதிப்பு, நன்மைதரும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைப்பு, மண் வளம் குன்றுதல் மற்றும் இரசாயன எச்சம் மிகுந்த மக்காச்சோள உற்பத்தி போன்ற பல்வேறு தீமைகள் உண்டாகின்றன.
தற்பொழுது புனல் இனக்கவர்ச்சி பொறி பயன்படுத்தப்படு கின்றது. இப்பொறியில் பூச்சிகளின் எண்ணிக்கையை தினசரி நேரில் சென்று பார்த்து தரவுகளை சேகரித்தாக வேண்டும்.
அதற்கு மாற்றாக மின்னணு உணர்திறன் கொண்ட இனக்கவர்ச்சி பொறியை பயன்படுத்த சோதனை ஆராய்ச்சி திட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் வம்பன் மற்றும் திருவரங்குளம் பகுதியில் உள்ள விவசாயிகள் நிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பூச்சிகளின் எண்ணிக்கை தரவுகளை கணினி, மடிக்கணினி மற்றும் கைபேசி மூலம் எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் கண்காணிக்க முடியும். மேற்கண்ட புதிய இனக்கவர்ச்சி பொறியானது, தற்போது ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாராய்ச்சியின் முடிவில் ஒரு சிறந்த மின்னணு உணர்திறன் கொண்ட இனக்கவர்ச்சி பொறி உருவாக்கப்பட்டு விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
இங்கிலாந்து நாட்டு பயிர் நலன் மற்றும் பாதுகாப்பு வளர்ச்சி அலுவலர் ஜென்னா ரோஸ், எலிசபெத் ஹன்னா, ஜேம்ஸ் காட்பர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக பேராசிரியர் முருகன், வம்பன் தேசிய பயறுகள் வகை ஆராய்ச்சி நிறுவனத்தின் பூச்சியியல் விஞ்ஞானி ராஜா ரமேஷ்,
புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரி பூச்சிகள் இணைப்பேரசிரியர் எஸ் வினோத்குமார், செயலாளர் எம். ராஜா ராம் ஆகியோர்கள் இதுவரையில் நடைபெற்றுள்ள ஆராட்சிகள், இந்த ஆராய்ச்சியின் மூலம் விவசாயிகளுக்கு ஏற்படும் பலன்கள் பற்றி விளக்கி கூறினார்கள்.
கருத்தரங்கிற்கு முன்னதாக விஞ்ஞானிகள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் மெர்சி ரம்யா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்து சென்சார் தொழில் நுட்பம் கொண்ட இனக் கவர்ச்சி பொறி பற்றிய ஆராய்ச்சி குறித்து குறித்தும் இதனால் அரசு அலுவலர்கள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஏற்படும் பயன்கள் குறித்தும் விரிவாக விளக்கிக் கூறினார்கள்.
சந்திப்பின்போது புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர் மா.பெரியசாமி உடன் இருந்தார். அவர் ஆராய்ச்சி பற்றியும், புதுக்கோட்டை மாவட்டத்தில் எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டு வரும் பணிகளைப் பற்றியும் மாவட்ட ஆட்சியரிடம் விளக்கி கூறினார்.
நிகழ்வில் வேளாண்மை துறை அலுவலர்கள், விவசாயிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட 80 பேர் பங்கேற்றார்கள். கேபி, பயிர் நல அலுவலர் ஆர். கணேசமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கள அலுவலர் டி. விமலா நன்றி கூறினார்