திருச்சியில் நடைபெறும் வேளாண் சங்கமம் 2023 – கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம்.
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் அனைவரும் திருச்சி மாநகரில் கேர் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் வேளாண் சங்கமம் 2023 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும்.
தமிழ்நாடு அரசு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பாக திருச்சி மாநகரில் கேர் பொறியியல் கல்லூரியில் இம்மாதம்( ஜுலை) 27, 28 மற்றும் 29 ஆகிய மூன்று நாட்கள் வேளாண் சங்கமம் 2023 – வேளாண் சார்ந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
இதில் விவசாயிகள் அனைவரும் இலவச அனுமதியில் கலந்துகொள்ளலாம். இந்நிகழ்வில் 300-க்கு மேற்பட்ட கண்காட்சி அரங்குகள், பாரம்பரிய உணவு அரங்குகள், கலைநிகழ்ச்சிகள், செயல் விளக்கங்கள், கருத்தரங்குகள் மற்றும் விவசாயிகள் – விஞ்ஞானிகள் கலந்துரையாடல்கள் நிகழ்ச்சி, தங்களுக்கு தேவையான திட்டங்களில் மானியம் பெற உழவன் செயலியில் பதிவுகள் ஆகியவை விவசாயிக ளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இங்கு வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, விதை மற்றும் அங்ககச்சான்றளிப்புத் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை, தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி, வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் வேளாண் கருவி விற்பனை நிறுவனங்கள், நுண்ணீர் பாசன நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறை களின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், தொழில் நுட்பங்கள் ஆகியவை விவசாயிகளுக்கு காட்சிப்படுத்தப் படவுள்ளது.
எனவே விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை சார்ந்த புதிய வகை ரகங்கள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை தெரிந்து கொண்டு அதிக மகசூல் மற்றும் கூடுதல் லாபம் பெற்று பயன்பெற அனைவரும் திருச்சியில் நடைபெறும் வேளாண் சங்கமம் 2023 இல் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தகவல் தெரிவித்துள்ளார்.