பருவகால மாற்ற சவால்களை சமாளிக்க விவசாயிகளுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும் என்றார் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதுநிலை விஞ்ஞானி ஆர். ராஜ்குமார்.
புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி மற்றும் சென்னை நேஷனல் அக்ரோ பவுண்டேஷன் இணைந்து நடத்திய வளம் குன்றா வேளாண்மை மற்றும் உலகளாவிய உணவுப் பாதுகாப்புக்கான நவீன தொழில் நுட்பம் குறித்த சர்வதேச மாநாடு புஷ்கரம் வேளாண்மை கல்லூரியில் நடைபெற்றது.
மாநாட்டிற்கு புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ரெ. துரை அவர்கள் தலைமை வகித்தார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வி. கீதாலட்சுமி மாநாட்டின் தொடக்கவுரையாற்றினார்.
எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்னை விஞ்ஞானி மற்றும் மாநாட்டு செயலாளர் ஆர்.ராஜ்குமார் மாநாடு குறித்து உறையாற்றினார். அவர் பேசுகையில் வளங்குன்றா வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு ஆகிவற்றை மேம்படுத்துவதில் நவீன தொழில்நுட்பங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது. விவசாயத்தில் பல்வேறு சவால்கள் உள்ளது. பருவகால மாற்றம் சிறுகுரு விவசாயிகளை மிகவும் பாதிக்கின்றது. பருவகால மாற்ற சவால்களை சமாளிக்க விவசாயிகளுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும் விவசாயிகளின் உற்பத்தி மற்றும் வருமானத்தைஅதிகபடுத்த அனைத்து தரப்பினரும் விவசாயிகளுக்கு உதவ வேண்டும். என்றார்.
புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். ரகுராமன் வரவேற்புரையில், எதிர்கால சந்ததியினர் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறனை சமரசம் செய்யாமல் நிகழ்காலத்தில் சமுதாயத்தின் உணவு மற்றும் உடை தேவைகளைப் பூர்த்தி செய்வதே நிலையான விவசாயத்தின் குறிக்கோள் என குறிப்பிட்டார்.
சென்னை, நேஷனல் அக்ரோ பவுண்டேஷனின் செயல் இயக்குநர் டாக்டர் எம்.ஆர். ராமசுப்ரமணியம் தனது சிறப்புரையில், நீர் பற்றாக்குறை மற்றும் குறைந்து வரும் நிலத்தடி நீர் இருப்பு பிரச்னைக்கு தீர்வு காண்பதே நிலையான விவசாயத்தின் நோக்கம் என்று கூறினார்.
இங்கிலாந்து ஆராய்சியாளர் டெரெக் ஸ்கஃபெல், பேசுகையில் புதிய விவசாய தொழில் நுட்பங்களின் சாத்தியமான நன்மைகள் மற்றும் அபாயங்களைப் புரிந்துகொள்வது பற்றி குறிப்பிட்டார்.
இங்கிலாந்து விஞ்ஞானி மார்க் நீல் பேசுகையில், பூச்சிகள் அனைத்து நிலப்பரப்புகளிலும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு உயிரியல் அடித்தளத்தை உருவாக்குகின்றன எனவும் அவை ஊட்டச் சத்துகளை சுழற்சி செய்கின்றன. தாவரங்களை மகரந்தச் சேர்க்கை செய்கின்றன, விதைகளைப் பரப்புகின்றன, மண்ணின் அமைப்பு மற்றும் வளத்தை பராமரிக்கின்றன, பிற உயிரினங்களின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துகின்றன, மேலும் ஒரு முக்கிய உணவு ஆதாரத்தை வழங்குகின்றன எனவும் குறிப்பிட்டார்.
திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் வேளாண் பூச்சியியல் துறைப் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் வி. அம்பேத்கர் பேசுகையில், உணவு உற்பத்திக்கு கூடுதலாக விவசாயம் பல்வேறு செயல்பாடுகளைக் கொண்டிருப்பதுடன், விவசாயத்தை மேலும் நிலையானதாக மாற்றுவது அதிகளவில் அங்கீகரிக்கப்பட்டு வருகிறது.
பூச்சிகள் விவசாய நிலங்களின் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும் மற்றும் பல அத்தியாவசிய சுற்றுச்சூழல் சேவைகளை வழங்குகின்றன என்றும் கூறினார்.
பெல்ஜியத்தின் அக்சஸ் அக்ரிகல்சர் நிர்வாக இயக்குனர் ஜோசஃபின் ரோட்ஜர்ஸ், நிலையான மற்றும் வழக்கமான விவசாயம் ஆகிய இரண்டின் முக்கிய கூறுகளில் கவனம் செலுத்தவேண்டும். மண் மேலாண்மை, பயிர் மேலாண்மை, நீர் மேலாண்மை, நோய் மற்றும் பூச்சி மேலாண்மை, கழிவு மேலாண்மை ஆகியவை பற்றி விளக்கிப்பேசினார்.
இறுதியாக புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியின் மண்ணியல் துறைப் பேராசிரியர் முனைவர் எஸ். செல்வ அன்பரசு நன்றியுரை வழங்கினார்.
இரண்டாம் நாள் நிகழ்வில் புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர் எம்.பெரியசாமி உணவுப் பாதுகாப்பு சிறப்புரை நிகழ்த்தினார் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களின் செயல்பாடுகளை பாராட்டி பேசினார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல் துறைப் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் எம்.வி. ஸ்ரீராமச்சந்திர சேகரன், நீடித்த வேளாண்மையில் மண்ணின் தாக்கம் குறித்து சிறப்புரையாற்றினார். கீரமங்கலம் நக்கீரர் தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குநர் .ச.வே. காமராசு தென்னை விவசாய தொழில் நுட்பங்களை விளக்கிப் பேசினார்.
மேலும், இந்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் புதுக்கோட்டை நேரு யுவ கேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் கே. ஜோயல் பிரபாகர் விவசாய சமுதாயத்தின் வளர்ச்சியில் நேரு யுவ கேந்திராவின் பங்களிப்பு குறித்து விளக்கிப் பேசினார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ஈச்சங்கோட்டை வேளாண் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் அ.வேலாயுதம் வாழ்த்துரை வழங்கினார். மேலும், அவர் ஆராய்ச்சியாளர்களுக்கும், விருது பெற்றவர்களுக்கும் பரிசு வழங்கினார்.
போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் நிறைவில் ஒருங்கிணைப் பாளர், உழவியல் துறைப் பேராசிரியை, எம் . ஜெயராணி நன்றி கூறினார்.