Close
நவம்பர் 24, 2024 5:12 மணி

கேரளாவை கண்டித்து தேனி மாவட்டம் கூடலூரில் விவசாயிகள் உண்ணாவிரதம்..!

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம்.

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கடந்த திங்கள் கிழமை அன்று, மத்திய நீர்வள ஆணையம் எடுத்த, முல்லைப் பெரியாறு அணையை முழு ஆய்வு செய்ய வேண்டும் என்கிற முடிவு, தமிழகத்திற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தமிழக அரசு அது குறித்து இதுவரை வாய் திறக்காதது, முல்லைப் பெரியாறு பாயும் ஐந்து மாவட்ட விவசாயிகள் மத்தியில் கடுமையான வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முல்லைப் பெரியாறு அணையை முழு ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் அறிவித்ததுமே, கேரளாவில் கொண்டாட்டங்கள் தொடங்கி விட்டன. அடுத்த தேர்தலில் எப்படியாவது கேரளாவில் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படும் காங்கிரஸ் கட்சி, களத்தில் முழு வீச்சுடன் இறங்கி இருப்பது நல்ல செய்தி அல்ல.

கூடுதலாக முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்ட வேண்டும் என்று நாடாளுமன்ற மக்களவையில், புதிய அணை குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுக்கும் அளவிற்கு நிலைமை உருவாகி உள்ளது. இந்த விஷயம் இன்று ஒட்டு மொத்த மலையாள மக்களையும் தமிழகத்திற்கு எதிராக திருப்பி இருக்கிறது.

முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை என்று கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்பிக்களான டீன் குறியா கோஸ், பென்னி பெகனன், ஹைபி ஈடன் போன்றோர் மக்களவையில் மற்ற கேரளா மாநில எம்.பி க்களை இணைத்து அமளி செய்த போது, தமிழகத்தைச் சேர்ந்த முக்கியமான மக்களவை உறுப்பினர்கள் கனிமொழி, டி.ஆர் பாலு, ஆ. ராஜா, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் எவரும் அவையில் இல்லை.

தமிழகத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு சென்ற நான்கு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களையும், அன்று அவையிலேயே காண முடியவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி க்கள் கனத்த மவுனத்தில் உறைந்து கிடந்தார்கள்.

ஆனால் கேரளா அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறியது. மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுக்கும் அளவிற்கு கேரள காங்கிரஸ் எம் பி க்கள் போன பிறகும், தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி எம் பி க்கள் வாய்மூடி மௌனியாக இருந்தது ஏன் என்கிற கேள்வி பிறக்கிறது.

இன்று அணையை முழு ஆய்வு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை கேரள மாநிலம் முழுவதும் முழு வீச்சில் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. மலையாளிகளின் முக்கிய திருநாளான ஓணம் திருநாளன்று, தமிழர்கள் 60 விழுக்காடு நிறைந்து கிடக்கும் வண்டிப்பெரியாறில் உண்ணாவிரதம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார் இடுக்கி மாவட்ட காங்கிரஸ் கட்சியினுடைய பொதுச் செயலாளர் மேத்யூ.

இடுக்கி பத்தனம்திட்டா ஆலப்புழா கோட்டயம் எர்ணாகுளம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களிலும், முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை என்கிற கோஷம் வலுத்து வரும் நிலையில்…தமிழக அரசு இனியாவது வாய் திறக்க வேண்டும். அதே ஓணம் திருநாளில் தேனி மாவட்டம் கூடலூரில், தமிழகம் முழுவதிலும் இருந்து விவசாய சங்க தலைவர்களை அழைத்து வந்து நாமும் ஒரு பிரம்மாண்டமான உண்ணாவிரத போராட்டத்தை நடத்த இருக்கிறோம்.

கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள அத்தனை விவசாயிகளும், வணிகர் சங்கங்களும், திராட்சை தோட்ட தொழிலாளிகளும், தென்னை விவசாயிகளும், அரசு ஊழியர் சங்கங்களும், கட்டுமான தொழிலாளர்களும், ஆட்டோ ஜீப் ஓட்டுநர்களும், விவசாய தொழிலாளிகளும் ,இன்னம் இருக்கக் கூடிய எங்களுடைய காட்சி மற்றும் அச்சு ஊடக உறவினர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு அந்த உண்ணாவிரதத்தை சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.

மத்திய அரசின் மாற்றான் தாய் மனப்பான்மையை கண்டித்து நடக்கும் இந்த உண்ணாவிரதத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும் அழைப்பு உண்டு. இவ்வாறு கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top