புதுக்கோட்டை மாவட்ட உளுந்து விவசாயிகள் தங்களது உளுந்து விளைபொருளை குறைந்தபட்ச ஆதார விலையில் விற்று பயனடையலாம்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்: தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தி அதிகரிக்கவும், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை பெறுவதற்கும் தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொண்டு வருகிறது.
தற்பொழுது உளுந்து விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் விலை ஆதரவு திட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் உளுந்து கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆலங்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 300 மெட்ரிக்டன் உளுந்து கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசினால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையான கிலோ ஒன்றுக்கு ரூ.63.00 – என்ற விலையில் உளுந்து கொள்முதல் செய்யப்படும். உளுந்து கொள்முதல் 01.04.2022 முதல் 29.06.2022 வரை நடைமுறையில் இருக்கும்.
இத்திட்டத்தில் விவசாயிகள் பயனடைய ஆலங்குடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தினை அணுகி தங்களது நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை சமர்ப்பித்து பதிவு செய்ய வேண்டும்.
விவசாயிகளின் உளுந்துக்கான தொகை நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்.மத்திய அரசின் கொள்முதல் நிறுவனமான NAFED நிறுவனம் குறைந்தபட்ச தரத்தினை பரிந்துரைத்துள்ளது.
அதன்படி விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் உளுந்து இதர பொருட்கள் கலப்பு 2 சதவீதம், இதர தானியம், சேதமடைந்த பருப்பு அதிகபட்சம் தலா 3 சதவீதம், சிறிதளவு சேதமடைந்த பருப்பு 4 சதவீதம், முதிர்வடையாத, சுருங்கிய பருப்பு 3 சதவீதம், ஈரப்பதம் அதிகபட்சம் 12 சதவீத எடையளவில் சராசரி தரத்தில் இருத்தல் வேண்டும்.
தமிழ்நாடு உளுந்து விவசாயிகள் நலனுக்காக மேற்கொண் டுள்ள இந்த உளுந்து கொள்முதல் திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட உளுந்து விவசாயிகள் அதிக அளவில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு, ஆலங்குடி விற்பனைக்கூட கண்காணிப்பாளர், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் 9786865918, ஆலங்குடி வேளாண் அலுவலர் (வேளாண் வணிகம்) 8072760544 , திருவரங்குளம் உதவி வேளாண் அலுவலர் (வேளாண் வணிகம்) 9159712286 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.