புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் விவசாயிகள் தெரிவித்த விவசாயம் தொடர்பான பல்வேறு கோரிக்கை களை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 783.30 மி.மீ. ஆகும். 2022 ஆம் ஆண்டு மே மாதம் வரை பெறப்பட வேண்டிய இயல்பான மழையளவான 120.30 மி.மீ. க்கு பதிலாக 153.26 மி.மீ. அளவு மழை பெறப்பட்டுள்ளது. 32.96 மி.மீ கூடுதலாக பதிவாகியுள்ளது.பயிர்ச் சாகுபடியை பொருத்தவரை 2022-23 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் முடிய நெல் 3,252 எக்டேர் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 52 எக்டேர் பரப்பளவிலும், பயறுவகைப் பயிர்கள் 86 எக்டேர் பரப்பளவிலும், எண்ணெய்வித்து 492 எக்டேர் பரப்பிலும், கரும்பு 62 எக்டேர் பரப்பளவிலும், பருத்தி 18 எக்டேர் பரப்பளவிலும் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
பயிர்ச் சேதத்தை பொருத்தவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் நவம்பர் மாதத்தில் பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட 1,296.76 எக்டேர் நெல், உளுந்து, மக்காச்சோளம் மற்றும் நிலக்கடலை ஆகிய பயிர்களுக்கு 3,002 விவசாயிகளுக்கு ரூ.82,78,570 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.கனமழையால் பாதிப்படைந்த 1,339.705 எக்டேர் நெல், உளுந்து மற்றும் நிலக்கடலை பயிர்களுக்கும், பிப்ரவரி மாதத்தில் பெய்த கனமழையால் பாதிப்படைந்த 492 எக்டேர் நெல் பயிர்களுக்கும், நிவாரணத் தொகை வேண்டி சென்னை வேளாண்மை இயக்குநர் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இடுபொருட்கள் இருப்பை பொருத்தவரை புதுகோட்டை மாவட்டத்தில் உள்ள 33 வேளாண் விரிவாக்க மையங்களில் 134.001 மெ.டன் சான்று பெற்ற நெல் விதைகளும், 11.885 மெ.டன் பயறு விதைகளும், 7.231 மெ.டன் நிலக்கடலை விதைகளும், 2.130 மெ.டன் சிறுதானிய விதைகளும், 1.045 மெ.டன் எள் விதைகளும் இருப்பில் உள்ளன.
உர இருப்பை பொருத்தவரை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மே – 2022 மாதத்திற்குத் தேவையான யூரியா விநியோகத்திட்ட இலக்கின்படி 1,500 மெ.டன்களுக்கு, இதுவரை 1,689 மெ.டன் யூரியா பெறப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு தேவையான டி.ஏ.பி உரம் விநியோகத் திட்ட இலக்கின்படி 710 மெ.டன்களுக்கு 624 மெ.டன் வரப்பெற்றுள்ளது. பொட்டாஷ் உரத்தைப் பொறுத்துவரை விநியோகத் திட்ட இலக்கான 35 மெ.டன்களுக்கு இதுவரை 85 மெ.டன் பெறப்பட்டுள்ளது. காம்ப்ளக்ஸ் உரங்களைப் பொறுத்தவரை விநியோகத்திட்ட இலக்கான 815 மெ.டன்களுக்கு இதுவரை 790 மெ.டன் பெறப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்குத் தேவையான தரமான உரங்கள் தடையின்றி உரிய நேரத்தில் கிடைக்க, தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது யூரியா 2,241 மெ.டன்னும், டிஏபி 806 மெ.டன்னும், பொட்டாஷ் 475 மெ.டன்னும், காம்ப்ளக்ஸ் 2,749 மெ.டன்னும் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் உர உரிமம் பெற்ற தனியார் நிறுவனங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கத்தில் 508 மெ.டன் யூரியா, 384 மெ.டன் டிஏபி, 111 மெ.டன் பொட்டாஷ், 876 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 2021-22 ஆம் ஆண்டில் 85 பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டு 68 தரிசு நில தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தரிசு நில தொகுப்புக்களை சாகுபடிக்கு கொண்டு வருவதால் 1,374 விவசாயிகள் பயன்பெறுகிறார்கள்.
இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள பஞ்சாயத்துகளில் உள்ள 17,000 விவசாயிகளுக்கு 51 ஆயிரம் தென்னங்கன்றுகளும், 425விவசாயிகளுக்கு கைத்தெளிப் பானும், 425 விவசாயிகளுக்கு விசைத் தெளிப்பானும், 1,275 எக்டருக்கு வரப்பில் பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்ய உளுந்து விதைகள் வழங்கப்பட்டுள்ளன.
நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உற்பத்தி திறனை அதிகரிப்பதற்காக 1,365 ஏக்கருக்கு ஜிங்க் சல்பேட்டும், 1,365 ஏக்கருக்கு ஜிப்சமும் 8 இலட்சத்து 19 ஆயிரத்துக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 2,730 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.
பண்ணை கருவிகளான கடற்பாரை, மண்வெட்டி, கதிர் அறுக்கும் அரிவாள் – 2 எண்கள், மண் சட்டி மற்றும் களை கொட்டு அடங்கிய தொகுப்பு 1,188 எண்கள் ரூ.32.06 இலட்சம் மானியத்தில் வழங்கப்பட்டது. இதில் 1,188 விவசாயிகள் பயனடைந்தனர். 2021-22 ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட 62 தரிசு நில தொகுப்புகளை பதிவுத் துறையில் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது.
2022-23 ஆம் ஆண்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் 120 கிராம பஞ்சாயத்துகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்த கிராமப் பஞ்சாயத்துகளில் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத்திட்டத்தில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி கூடுதல் பரப்பில் சாகுபடி செய்திடும் பொருட்டு வேளாண் பயிர்களுக்குத் தெளிப்பு நீர்ப் பாசனம் மற்றும் மழைத்தூவான் பாசனக் கருவிகளும், சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் அமைத்துக் கொடுக்கப்படுகின்றன.
2022-23 ஆம் ஆண்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 1,000 எக்டர் இலக்கீடு வழங்கப்பட்டு, இதுவரை 251 பயனாளிக ளுக்கு 273 எக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசனக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது.
இதுவரை ரூ.76.67 லட்சம் நிதி மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தெரிவித்தார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி, வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் மா.உமாமகேஸ்வரி, மத்திய கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் தனலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கணேசன் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.