Close
நவம்பர் 25, 2024 5:07 காலை

தமிழகம் முழுவதும் விவசாயிகளிடமிருந்து 40 லட்சத்து 50 ஆயிரம் டன் நெல் கொள்முதல் : உணவுத்துறை அமைச்சர் தகவல்

தஞ்சாவூர்

தஞ்சையில் நடைபெற்ற நிகழ்வில் நலத்திட்ட உதவி அளிக்கிறார், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி

தமிழகத்தில் பொறுத்தவரையில்; 01.10.2021 முதல் 12.07.2022 வரை 5 லட்சத்து 61 ஆயிரம் விவசாயிகளிடமிருந்து 40 லட்சத்து 50 ஆயிரம் டன் தமிழகம் முழுவதும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றார் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்  அர. சக்கரபாணி.

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் உணவு உணவுப்பொருள் வழங்கல் சார்பில் விவசாய பெருமக்கள் மற்றும் அரசு அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம்  உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தலைமையில்,  இதில்,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஸ் பொய்யாமொழி,  அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன்,   கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நிர்வாக இயக்குனர் சு .பிரபாகர், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் நிர்வாக இயக்குனர்  சிவஞானம், கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளர்  அ.சங்கர்,  மாவட்ட ஆட்சித் தலைவர்  தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர்  முன்னிலையில்  நடைபெற்றது.

பின்னர் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர. சக்கரபாணி  தெரிவித்ததாவது: குறுவை சாகுபடி பணிகள் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்து விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

இந்தாண்டு நெல் அறுவடைக்கு முன்பாகவே நெல் கொள்முதல் பணிகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. ஏனெனில் சென்ற ஆண்டு 45 லட்சம் மெ.டன் தமிழகத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தைப் பொறுத்தவரையில் 01.10.2021 முதல் 12.07.2022 வரை 5 லட்சத்து 61 ஆயிரம் விவசாயிகளிடமிருந்து 40 லட்சத்து 50 ஆயிரம் டன் தமிழகம் முழுவதும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் பொறுத்தவரையில் விவசாயிகளிடமிருந்து 8 லட்சத்து 20 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தினை முழுவதும் ரூ.8 ஆயிரத்து 103 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. அதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்து 673 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் தேர்தல்  பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தகுதியுள்ள நபர்கள் குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்தால் 15 நாட்களுள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அதனடிப்படையில் ஆட்சி பொறுப்பேற்ற 14 மாத காலத்திற்குள் தமிழகத்தில் 12 லட்சத்து 54 ஆயிரத்து 270 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டத்தில் 32 ஆயிரத்து 123 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

அதைப்போல் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1000 குடும்ப அட்டைகளுக்கு மேலுள்ள 141 கடைகளில் 30 கடைகள் பிரிக்கப் பட்டுள்ளன . மீதி உள்ள கடைகளும் விரைந்து பிரிக்கப்படும். நியாய விலைக்கடைகளுக்கென சில கட்டமைப்புகளுடன் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் முழு நேர நியாய விலைக்கடைகளும், ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பகுதி நேர நியாய விலைகடைகளும் கழிப்பறை வசதியுடன் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரிசி ஆலைகளில் கலர் சாந்து கருவி பொறுத்தப்பட்டுள்ளது. நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு எந்தவித சிரமமும் வரக்கூடாது என்பதனை கருத்தில் கொண்டு அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு மூட்டைக்கு 3.25 ரூபாயாக இருந்ததனை மூட்டைக்கு 10 ரூபாயாக உயர்த்தி வழங்கியுள்ளார்.

ஒவ்வொரு நேரடி கொள்முதல் நிலையங்களிலும் புகார் பெட்டி ஒன்று அமைக்கவும், அதே போல் எங்கள் துறை சார்ந்த அனைத்து அலுவலர்களின் தொலைபேசி எண்களும் அங்கு பலகைகளில் குறிப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. புகார் பெட்டியில் வரும் புகார்கள் மாவட்ட ஆட்சித்தலைவரால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர்  அர.சக்கரபாணி  .

இதையடுத்து, கூட்டுறவுத்துறை சார்பில் கே.சி.சி. பயிர் கடன் ரூபாய் 34,415,558 மதிப்பில் 516 நபர்களுக்கும், கே.சி.சி. கால்நடை பராமரிப்பு கடன் ரூபாய் 7,98,000 மதிப்பில் 36 நபர்களுக்கும், மகளிர் சுய உதவிக் குழுக்கடன் ரூபாய் 15,475,000 மதிப்பில் 48 குழுக்களுக்கு 557 நபர்களுக்கும், மாற்றுத்திறனாளி கடன் ரூபாய் 3,00,000 மதிப்பில் 2 நபர்களுக்கு, கறவை மாட்டு கடன் ரூபாய் 2,00,000 மதிப்பில் 3 நபர்களுக்கும், சிறு வணிக கடன் ரூபாய் 2,00,000 மதிப்பில் 5 நபர்களுக்கும், சிறு குறு தொழில் முனைவோர்க்கு ரூபாய் 47,500 மதிப்பில் 1 ஒரு நபருக்கும்.

மகளிர் தொழில் முனைவோர்க்கு ரூபாய் 1,95,000 மதிப்பில் 4 நபர்களுக்கு, விதவை-கைம்பெண் கடன் ரூபாய் 25,000 மதிப்பில் 1 நபருக்கு, தாட்கோ கடன் ரூபாய் 2,66,000 மதிப்பில் 1 நபருக்கும் என மொத்தம் 51,922,058 மதிப்பிலும் மற்றும் குருவை சிறப்பு தொகுப்பு திட்டம் ரூபாய் 61662.50 மதிப்பில் 25 நபர்களுக்கும், 6 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையினை  உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்  வழங்கினார்.

முன்னதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ரூபாய் 4,57,560 மதிப்பில் 82 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களும் மற்றும் ரூபாய் 3,65,325 மதிப்பில் 75 பயனாளிகளுக்கு சலவைப் பெட்டிகளும் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்  வழங்கினார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மைத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த திட்ட விளக்க கண்காட்சியினையும் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் அமைக்கப்பட்ட விழிப்புணர்வு கண்காட்சியினையும்  அமைச்சர்  பார்வையிட்டார்கள்.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்)  என். ஓ. சுகபுத்ரா, கூடுதல் பதிவாளர். குமார், குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ. ராமலிங்கம், பாராளுமன்ற மேலவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர்கள்  துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்), கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை) எம்.ஹெச். ஜவாஹிருல்லா (பாபநாசம்), மாநகராட்சி துணை மேயர்கள் அஞ்சுகம் பூபதி (தஞ்சாவூர்), சு.ப. தமிழழகன் (கும்பகோணம்), மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் எஸ்.கே .முத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top