இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் குறிப்பாக தமிழகத்தில் ஒரு சிலையை அகற்றுவதற்காக நடந்த போராட்டம் வரலாற்றில் முக்கியத்துவம் பெறுவது நீல் சிலை போராட்டம்.
தமிழகத்தில் தேசிய எழுச்சியை மேலும் தூண்டியதில் இந்தப் போராட்டம் குறிப்பிடத்தக்கது.ஆங்கில படை வரலாற்றில் புகழ்பெற்ற படைத்தளபதிகளில் ஒருவர் ஜேம்ஸ் ஜார்ஜ்ஸ் ஸ்மித் நீல்.
சென்னைப்படைப்பிரிவிற்கு தலைவராக இருந்தவர். 1857 ஆம் ஆண்டு வட இந்தியாவில் நடைபெற்ற ஆங்கிலேயருக்கு எதிரான கிளர்ச்சியின்போது, சென்னையிலிருந்து சென்று, ஆங்கிலேயர் வெற்றி பெறுவதற்கு மிகவும் உதவியவர்.
அப்போது மிகக்கொடுமையான முறையில் மக்களைத் துன்புறுத்தியிருக்கிறார். காசி நகரத்தின் அருகில் 20 கிராமங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயரின் வெற்றிக்கு உதவியதற்காக அவருக்கு சென்னை மெளன்ட் ரோட்டில் (தற்போது அண்ணாசாலை) ஸ்பென்சர் அருகில் ஒரு சிலை நிறுவப்பட்டது.
நீலின் கொடுமைகளை குறிப்பிட்டு முதலில் எழுதியவர் வீர சவர்கார். அந்த புத்தகம் மதுரையை சேர்ந்த சிதம்பர பாரதி மூலம் கிடைக்க, அதன்மூலம் நீ லின்கொடுமைகள் தெரிய வருகிறது. மேலும் இந்த நூலை தமிழில் மொழிபெயர்த்து எழுச்சி ஊட்டியவர் டாக்டர் டி.எஸ். சௌந்திரம் அம்மையார் .
முதலில் இந்த சிலை அகற்றும் போராட்டத்தைத் தொடங்கியவர்கள் மதுரையைச் சேர்ந்த சோமயாஜுலு, சுப்பராயலு, முகமது சாலியா மூவர். இவர்கள் மூவரும் சென்னை சென்று சிலையைச் சேதப்படுத்தி சிறை சென்றிருக்கிறார்கள்.
1927 -இல் இவர்கள் தொடங்கியது 1937ல் ராஜாஜி தலைமை யிலான காங்கிரஸ் அரசால் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி நீல் சிலை அகற்றப்பட்டது வரை 10 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றது.
காந்தியடிகள் ஆதரவு இதற்கு இருந்திருக்கிறது. அமைதியாக போராட அறிவுறுத்தியிருக்கிறார். கடலூர் அஞ்சலை அம்மாள் தன் குடும்பத்தோடு இந்த போராட்டத்திற்காக சிறை சென்றிருக்கிறார்.
இந்த போராட்டத்தைப் பற்றி தனி நூலாக எழுதிய பழனி கல்லூரி பேராசிரியர் வ.கந்தசாமிக்கு நம் நன்றிகள். நல்ல தரவுகளோடு ஒரு ஆய்வு நூலாக இதை எழுதியிருக்கிறார்.
பழனி பாரமவுண்ட் பதிப்பகம் வெளியீடு.
…பேராசிரியர் விஸ்வநாதன்-வாசகர் பேரவை..