Close
செப்டம்பர் 19, 2024 11:26 மணி

புத்தகம் அறிவோம்… தமிழ்ப்பெரியார்கள்…

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- தமிழ்ப் பெரியோர்கள்

பெரியார்கள் யார்? ஜனசமூகத்தை தங்கள் வாழ்க்கையின் மூலமாக மாறச் செய்பவர்கள் பெரியார்கள். இதை அவர்கள், தாங்கள் அறிந்தும் செய்யலாம்; தாங்கள் அறியாமலும் செய்யலாம். என்றாலும், அவர்களுடைய வாழ்க்கையினால், ஜனசமூகத்தில் கண்ணால் பார்க்கக்கூடிய மாறுதல்கள் ஏற்பட்டு விடுகின்றன…

அநுகூலம் எதுவும் இல்லாமல் பிரதிகூலங்களுக்கு மத்தியில் வாழ்த்தும், வீறு கொண்டு எழும் பேர்வழிகள், பெரியார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. நான் குறிப்பிட்டிருக்கிற அத்தனை பேர்களும் யாருடைய உதவியும் இல்லாமல் தங்கள் சொந்த முயற்சியால் முன்னுக்கு வந்தவர்கள்.

இவர்கள் எல்லோரும் ஒவ்வோர் அளவில் மேதாவிகள். சரித்திரத்தில் இடம் பெறக்கூடிய காரியங்களைச் செய்தவர்கள் என்ற அறிமுகத்தோடு, சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி, ஈ.வே.ராமசாமி நாயக்கர், திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் (திரு.வி.க)டாக்டர் வரதராஜூலு நாயுடு,

டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன்,ஜ்யார்ஜ் ஜோஸப், எஸ். சத்தியமூர்த்தி, வ.உ.சிதம்பரம்பிள்ளை, எஸ். எஸ்.வாசன், கே.பி.சுந்தரம்பாள்,என்.எஸ்.கிருஷ்ணன், நாமக்கல் வெ.ராமலிங்கம் பிள்ளை- இவர்களைப் பற்றி வ.ரா. எழுதிய நூல்தான் “தமிழ்ப் பெரியார்கள்”.

வ.ரா. என்றழைக்கப்படும் வ.ராமசாமி ( 17.9.1889-23.8.1951) தஞ்சை மாவட்டம் திங்களூரில் பிறந்தவர். தமிழுக்கு புதுமைப்பித்தன் போன்ற மிகச்சிறந்த எழுத்தாளுமைகளைத் தந்த ‘மணிக்கொடி’யை தொடங்கி நடத்தியவர்.”அவர் பிறப்பால் அந்தக் குலம், பிறவற்றிலோ அவர் நம்மவர், நல்லவர்.

அவர் அக்கிராகாரத்துக்கு ஒரு அபாய அறிவிப்பு.வைதிக புரிக்கு அவர் நடமாடும் எச்சரிக்கைப்பலகை.புரோகித உலகில் அவருக்குப் பெயர் பொல்லாதவர்.ஆனால் நமக்கு வ.ரா. ஓர் அறிய வரவு! நல்ல பரிசு! சுவையான விருந்து…

அவர் அக்கிராகாரத்தில் உதித்த அதிசயப் பிறவி. ஆனால் நாடோ அவரை அவசிய பிறவியென்று போற்றிற்று. இன்று பிரிவால் பொருமுகிறது! அழுகிறது! என்று அண்ணா வ.ரா. மறைந்த போது திராவிடநாடு பத்திரிக்கையில் எழுதினார்.

இந்நூலில் உள்ள 12 பெரியார்களைப் பற்றியும் விருப்பு வெறுப்பின்றி தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார். இவர்களிடம் தனக்கு பிடித்த குணத்தை பாராட்டும்போது பிடிக்காதவதவற்றையும் குறிப்பிடத் தயங்கவில்லை.

“வைதீகத்தை எதிர்க்கத்தான் வேண்டும்;சமயம் நேரும்போது அதற்கு புத்தி புகட்டத்தான் வேண்டும். வைதீகத்தின் பொல்லாத சேஷ்டைகளையும், பொல்லாங் கான விளைவுகளையும் பொறுக்க முடியாதுதான்.

என்றாலும் , உள்நாட்டு வைதீகத்தை அடக்கி ஒடுக்கு வதற்காக, அயல்நாட்டு ஏகாதிபத்தியத்தோடு நாயக்கர் உறவாடுவதை கண்டு, நான் மிகுதியும் வருந்துகிறேன்” என்று பெரியாரின் பிடித்த, பிடிக்காத குணங்களைப் பதிவு செய்கிறார் வ.ரா.

1942 ல் முதல் பதிப்பு கண்ட நூல் 2000 தில் சென்னை அல்லயன்ஸ் பதிப்பகத்தால் மறுபதிப்பு கண்டுள்ளது.

…பேராசிரியர் விஸ்வநாதன், வாசகர் பேரவை…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top