டாக்டர் வா.செ.குழந்தைசாமி மிகச்சிறந்த கல்வியாளர். பொறியியல்( நீரியியல் துறை Hydrology and water resources) நிபுணர்.அண்ணா பல்கலைக்கழகம், இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் துணைவேந்தராக பணியாற்றிவர்.
ஐ.நா. அமைப்புகளிலும் பணியாற்றியிருக்கிறார். அறிவியல் கல்விக்கு அவர் ஆற்றிய பணிக்காக ‘பத்மபூஷன்’ விருது பெற்றவர்.நல்ல தமிழறிஞர்.’குலோத்துங்கன்’ என்ற பெயரில் கவிதைகளைப் படைத்திருக்கிறார்.
பாரதிபால் பற்று கொண்டவர். அவரின் ” பாரதியின் அறிவியல் பார்வை”என்ற இந்த நூல் பாரதியை அவர் நன்கு கற்றுணர்ந்திருக்கிறார் என்பதற்கு சான்றாகும். 95 பக்கம் கொண்ட இந்நூலில், அறிவியல் பார்வை,பாரதியின் அறிவியல் பார்வை,புதுமைப்பெண்கள்,ஆயிரம் தொழில் செய்வீர்,பல கல்வி தந்து பாரை உயர்த்துவோம்,மேன்மைக் கல்வி தமிழினில் இல்லை,ஒப்பிலாத சமுதாயம்,மனிதர் தம்மை அமரர்களாக்குவோம் என்று 8 தலைப்புகளில் கட்டுரை வரைந்திருக்கிறார் குலோத்துங்கன்.
“வில்லியம் ஷேக்ஸ்பியர் போன்ற உலக மகாகவிக்கு ஒவ்வொரு ஆண்டிலும் பத்துப் பதினைந்து நூல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. எல்லாம் புதுக்கோணங்கள், புதுப்பார்வைகள்.
அது போல தமிழ்நாட்டிற்கும் தமிழுக்கும் ஒரு மலர்ச்சி தந்து தமிழ் மக்களை தட்டியெழுப்பிய மகாகவிக்கும் நூல்கள் வரவேண்டுமென்பது என் ஆவல். அந்தவகையில் இந்த நூல் ஒரு சிறந்த முன்னோடி. இதை மகிழ்ச்சியோடும் பெருமிதத்தோடும் வரவேற்கிறேன்” என்கிறார் இந்நூலுக்கு அணிந்துரை தந்துள்ள ம.ப.பெரியசாமித்தூரன்.ஆயிரம் தொழில் செய்குவீர்’ கட்டுரையில் பல தொழில் கற்பதன் அவசியத்தை, பாரதியின் எழுத்துக்கள் மூலம் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.
1906 ஆம் ஆண்டில் ‘ஜப்பான் தொழிற் கல்வி’ என்ற கட்டுரையில்,”கூடியவரை பிள்ளைகளை ஜப்பானுக்கு அனுப்பி, பலவிதமான தொழில்களும் சாத்திரங்களும் கற்றுக்கொண்டு வரும் படிச் செய்வதே பிரதான உபயமாகும். தொழிற்கல்வியிலும் லௌகிக சாத்திரப் பயிற்சியிலும் நாம் மற்ற சாதியாருக்குச் சமமாக முயலுவது அவசரத்திலும் அவசரம். ஆகாரத்திற்கு வழிதேடவேண்டும்.
அதிகாரம் வேண்டுமென்று கேட்கிறார்கள்; (காங்கிரஸ் சபை). நியாயந்தான். அது கிடைக்கும்வரை பிழைத்திருக்க வேண்டுமே… கைத்தொழில் வளர்ச்சிக்காக உழைப்போரும் உண்மையான தேசபக்தரே.” என்று எழுதுகிறார் பாரதி.பக் (47). வெளியீடு-பாவை பப்ளிகேஷன்ஸ்,சென்னை.044-28482441.
…பேராசிரியர் விஸ்வநாதன், வாசகர் பேரவை…