அல்கோர் அமெரிக்காவின் துணைக் குடியசுத் தலைவராக இருந்தவர். குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். 2010ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பகிர்ந்து பெற்றவர்களில் ஒருவர்.
அவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றதற்கான காரணம் உலக வெப்பமயமாதலால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி பெரும் அளவில் பிரச்சாரம் செய்தது. அதற்காக அவர் Inconvenient Truth என்று ஒரு ஆவணப்படத்தை எடுத்து வெளியிட்டார்.
அதில் இப்போதைய நிலை தொடருமேயானால் அடுத்த ஐம்பது ஆண்டுகளில் வட இந்தியாவிற்கு ஆண்டுதோறும் மழை தரும் இமயமலையில் உருவாகும் பனிக்கட்டிகள் உருவாகாமல் போய்விடும் என்று எச்சரிக்கை செய்கிறார்.
பேரா.பொ.இராஜமாணிக்கம்” சூடாகும் பூமி” என்ற தலைப்பில் எழுதியுள்ள இந்த நூல் அதைப்பற்றியே பேசுகிறது. 32 பக்கமே உள்ள இந்த நூலில் வெப்பமயமாதல் என்றால் என்ன?; அதனால் ஏற்படும் விளைவுகள், குறைக்க கையாள வேண்டிய வழிமுறைகள் யாவற்றையும் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதியுள்ளார்.
அபரிமிதமான வாகனங்களின் பயன்பாடு அது வெளியிடும் கார்பன்டை ஆக்ஸைடு, தொழிற்சாலைகள் வெளியிடும் நச்சுப்புகைகள், காடுகளை அழிப்பதால் ஏற்படும் சூழல் மாற்றம் இவைகள் வெப்பமயமாதலுக்கு முக்கியமான காரணிகள்.அரசு மட்டுமே இதைச் சரி செய்ய முடியாது; ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பங்குண்டு என்கிறார் ஆசிரியர்.
ஒவ்வொரு தனிமனிதனும் ஆற்றல் உபயோகிப்பைக் குறைக்க வேண்டும். மரம் நடும் பழக்கத்தை வாழ்வியலாகக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
எட்டு தலைப்புகளில் இந்த நூலின் உள்ளடக்கம் உள்ளது. நூலின் முதல் பக்கத்தில்..”இயற்கை (பூமி) ஒவ்வொருவரின் தேவையைப் பூர்த்தி செய்யும் ! பேராசையை நிறைவேற் றாது!” என்ற காந்தியின் வாசகத்தையும், கடைசியில்.. “உலகைக் காக்க.. கைகளைக் கோர்ப்போம்” என்ற பொருள் பொதிந்த வாசகத்தையும் ஆசிரியர் சேர்த்துள்ளார்.
வாருங்கள் நாமும் கைகோர்ப்போம்; வெப்பமயமாதலைக் குறைக்க.பாரதி புத்தகாலயம் வெளியீடு.
# பேராசிரியர் விஸ்வநாதன்-வாசகர் பேரவை #