Close
நவம்பர் 23, 2024 1:45 மணி

புத்தகம் அறிவோம்… காற்றில் கரையாத நினைவுகள்..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

இறையன்புவின் “காற்றில் கறையாத நினைவுகள்” நூலை நண்பர்  பகுத்தறிவாளன் எனது பிறந்தநாள் பரிசாக அளித்தார்.
என்னைப்போன்று வயது கூடியவர்களுக்கு காணாமல்போன கடந்தகாலத்தை நினைவூட்டும் அருமையான நூல். கடந்த 50 ஆண்டுகளில் தனி மனித உறவுகளில் நிகழ்ந்திருக்கின்ற மாற்றங்கள், சமூக பழக்க வழக்கத்தில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள், காணாமல்போன பயன்படுத்திய பொருட்கள் என்று கடந்தகாலத்தை நினைவூட்டி நிகழ்காலத்தோடு ஒப்பிட்டு அருமையாக எழுதப்பட்டுள்ளது இந்த நூல்.
மொத்தம் 30 கட்டுரைகள் இதில் உள்ளது. கடந்த காலத்தில் உறவினர் வீடுகளுக்கு எப்போது வேண்டுமானாலும் போகலாம் , இருப்பதைச் சாப்பிடலாம் என்ற நிலைமாறி முன்னறிவிப்போடுதான் போகவேண்டும் என்ற சூழ்நிலை மாறியிருப்பதும், வருந்தோம்பலில் உருவாகியுள்ள கசப்பான நிலையையும் அழகாகக் சொல்லியிருக்கிறார் ‘விருந்தே மருந்தாக ‘க் கட்டுரையில்.
கேட்காத தொலைபேசி அழைப்புமணி, காணமல் போன கடிதாசி,  தியேட்டர்கள் காம்ளெக்ஸ்களாக மாறிப்போனது,
மேல்நிலைப்பள்ளியால் நிறைந்த மாற்றங்கள்,மிதிவண்டிக் காட்சிகள், காணாமல் போன கறுப்பு வெள்ளைப் படம் ,பண்டிகைகள், குறைந்துபோன வானொலி பயன்பாடு, பெற்றோர் பிள்ளைகள் உறவு, பொழுது போக்குகள், குறைந்து போன செய்தித்தாள் வாசிப்பு என்று இவற்றில் கடந்த காலத்தை நினைவூட்டி நிகழ்காலத்தில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்களை அழகாக படம் பிடித்து தந்திருக்கிறார் இறையன்பு.
இந்த நூல் ஒரு சமூக வரலாற்று ஆவணம். இந்து தமிழ்திசையில் கட்டுரையாக வெளிவந்ததை கற்பகம் புத்தகாலயம்  நூலாக்கி தந்திருக்கிறார்கள்.
இன்றைய இளைஞர்கள் ஏன் எல்லோருமே இறையன்புவிடம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று அவருடைய இடையறாத வாசிப்பை;வாசித்ததை சமூக முன்னேற்றத்திற்கான ஒரு கருவியாக, புத்தகமாக மாற்றித் தந்திருப்பதை. நெருக்கடி யான பணிகளுக்கிடையிலும் நூற்றுக்கணக்கான நூல்களை எழுதியிருப்பது அவரின் நேர நிருவாகத்திற்கு சான்று.
# பேராசிரியர் விஸ்வநாதன்- வாசகர் பேரவை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top