Close
செப்டம்பர் 19, 2024 7:17 மணி

புத்தகம் அறிவோம்… இருள் பரப்பில் ஏற்றப்பட்ட ஒளிச்சுடர் டாக்டர் வி.கே.ஆர்

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- புதுக்கோட்டை மருத்துவர் வி.கே.ஆர்

ஜூலை 1, தேசிய மருத்துவர் தினம்”. மருத்துவர், சுதந்திரப் போராட்ட வீரர், கல்வியாளர், கொடையாளர், அரசியல்வாதி, சிறந்த நிர்வாகி என்று பன்முகத்தன்மை கொண்ட, மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மருத்துவர் பிடன் சந்திர ராய் சுருக்கமாக பி.சி.ராய் அவர்களின் பிறந்தநாளே “தேசிய மருத்துவர் தின”மாக 1991 முதல், ஆண்டுதோறும் கொண்டா டப்படுகிறது.

இவருடைய பிறந்தநாளும் (01.07.1882) அமரரான தினமும் (01.07.1962) ஒன்றே. 1962ல் இவருக்கு இந்திய அரசு”பாரத ரத்னா” விருது வழங்கி கெளரவித்தது.இவரை மேலும் பெருமைப் படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் மருத்துவம், அறிவியல், அரசியல், தத்துவம், இலக்கியம் கலைகள் ஆகிய துறைகளில் சிறப்பாக இயங்குபவர்களுக்கு பி.சி.ராய் விருது வழங்கப் படுகிறது.

இந்த நாளில் புதுக்கோட்டைக்கு பெருமை சேர்த்த இரண்டு மருத்துவர்களை நினைவு கூறவேண்டும். ஒருவர் மருத்துவர், சமூக சீர்திருத்தவாதி, உலகப்புகழ் பெற்ற அடையாறு புற்றுநோய் மருத்துவ மனையை உருவாக்கிய டாக்டர் முத்துலெட்சுமி  அம்மையார். மற்றவர் “மக்கள் மருத்துவர்” என்று போற்றப்படும், டாக்டர் வி.கே.ஆர்=  டாக்டர் வி.கே.இராமச்சந்திரன் (O4.12.1912-26.07.1990) இராமச்சந்திரன் பிள்ளை என்றுதான் புதுக்கோட்டையில் வி.கே.ஆரை அழைப்பார்கள்.

அந்தக்கால மருத்துவர்கள் என்ற நூலில் டாக்டர் சுதா சேஷய்யன், எளிமைக் கோர் எடுத்துக்காட்டு டாக்டர் வி.கே.ராமச்சந்திரன் பிள்ளை என்று அவருடைய பெருமைகளைப் பதிவு செய்துள்ளார். சிகிச்சை, கொடுப்பது நம் கடமை, காப்பாற்றுவது கடவுள்தான் என்று அடிக்கடி கூறியவர்.

தந்தை பெரியார் வழி சிந்தனைகளில் வளர்ந்து, சமூக பேதங்களைக் களைந்து, தனக்கே உரித்தாக இருந்த கடவுள் நம்பிக்கையையும் கலந்து, வந்தோரையெல்லாம் மிகவும் மரியாதையாக நடத்தியவர்.

தனது சொந்த ஊர்ப் பகுதியில் மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்னும் தணியாத அவாவினால் அரசுப்பணியைத் துறந்து மருத்துவமனை அமைத்து செயல்பட்ட மருத்துவர்-புதுக்கோட்டையின் புனிதச் செம்மல் டாக்டர் வி.கே.ராமச்சந்திரன் பிள்ளை என்று புகழாரம் சூட்டுகிறார் சுதா சேஷய்யன்.

இருள் பரப்பில் ஏற்றப்பட்ட ஒளிச்சுடர் டாக்டர் வி. கே.இராமச்சந்திரன் என்ற இந்த நூலை குழந்தைகள் நல மருத்துவரும், சர்வசித் அறக்கட்டளை நிறுவனருமான டாக்டர் ச. ராம்தாஸ் அவர்கள், விகேஆரின் பெருமைகளை பறை சாற்றும் வகையில் பதிப்பிக்கப்பட்டது.

இந்த நூலில் வி.கே.ஆரின் உயரிய குணாதிசயங்களை மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள். எழுத்தாளர்கள் என்று பலரும் பதிவு செய்திருக் கிறார்கள். இந்த நூலை சிறப்பாக வடிவமைத்து’ இருள் பரப்பில் ஏற்றிவைக்கப்பட்ட ஒளிச்சுடர்’ என்ற ஒரு சிறப்பான கட்டுரையையும் எழுதியிருக்கிறார் எழுத்தாளரும் பதிப்பாளருமான வைகறை.

புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் புகுமுக வகுப்பை முடித்து சென்னை மருத்துவக் கல்லூரியில் தங்கப் பதக்கத் துடன் மருத்துவப் பட்டம் பெற்றவர் விகே ஆர். தமிழகத்தின் மருத்துவ மும்மூர்த்திகள் என்றழைக்கப்படும் டாக்டர் ஏ.எல்.முதலியார், டாக்டர் குருசாமி முதலியார், டாக்டர் ரங்காச்சாரி ஆகியோரின் மாணவர் இவர்.

இம்மூவரும் மகத்தான சாதனைக்குரியவர்கள். மருத்துவத் துறைக்கு பெருமை சேர்த்த நேர்மையாளர்கள். மருத்துவத் தைத் தொழிலாகப் பார்க்காமல் தூய துறவு நிலைத் தொண்டாக நினைத்து உழைத்தவர்கள். பணம் பெருக்கும் ஆசையை தனது இடது கையால் புறந்தள்ளிய வர்கள்.

இவர்களுடைய மாணாக்கராக பயின்றார் என்பதானாலேயே மூவரிடம் வெளிப்பட்ட நற்பண்பின் மொத்த வாரிசாக உருவானார். அன்றைய தென்தமிழகத்தின் ஆறு மாவட்ட களில் இவர் ஒருவரே முதுகலைப் படிப்பை முடித்தவர் என்பது முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது என்று இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் நா.ஜெயராமன், மாவட்ட வர்த்தகர் கழக தலைவர் சேவியர். சொல்லருவி முத்து சீனிவாசன், டாக்டர் எஸ்.கே.ராஜன் ஆகியோரும் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர். இந்நூலில் டாக்டர் சி.இலக்குவனார், கவிஞர் முடியரசன் ஆகியோரின் கவிதைகளும் இடம்பெற்றுள்ளது. இந்நூலை புதுக்கோட்டை மூத்த மருத்துவர் ராமதாஸ் (9842993010) அவர்களிடம் இலவசமாகப் பெறலாம்.

உயிர் காக்கும் உன்னத பணியில் இருக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும்  தேசிய மருத்துவர் தின நல் வாழ்த்துகள்.

# பேராசிரியர் விஸ்வநாதன், வாசகர் பேரவை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top