Close
ஏப்ரல் 3, 2025 11:44 மணி

புத்தகம் அறிவோம்… இறையன்புவின்…மழை

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்.. வெ.இறையன்புவின் ... மழை..

‘மழை‘ மழையின் பெருமைகளைப் பேசும் இறையன்பு வின் 30 பக்க நூல் இது.

மழை உருவாகும் விதம் தொடங்கி, அதனால் ஏற்படும் சமூகப் பயன்பாடு, பொருளியல் பயன்பாடு, கலாசாரப் பயன்பாடு, மழைநீரை சேமிக்க வேண்டியதன் அவசியம், என்று மழையின் தேவைகளை பெருமைகளை ஒரு அழகியல் நோக்கோடு எழுதியிருக்கிறார் இறையன்பு.

காமராஜர் சொல்வார் தஞ்சாவூர்க்காரன் கலை வளர்க்கிறான், கலை வளர்க் கிறான் என்று சொல்கிறார்கள். வாஸ்தவந்தான். ராமநாதபுரம் மாவட்டத்திலும் ஒரு காவிரி ஆறு ஓடியிருந்தால் இவனும் கலை வளர்த்திருப்பான் என்று. அதையே இந்த நூலில் இறையன்பு எங்கு செழிப்பு சிறந்திருந்ததோ அங்கே உடலுழைப்பு அதிகம் தேவைப்படவில்லை.

எனவே வாய்த்த உபரி நேரத்தை கலைகளை வளர்க்கவும், இசையைப் பயிலவும் நடனத்தை கற்கவும் வசதி இருந்தவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்கிறார். (பக்.2). மேலும் நூலிருந்து சில செய்திகள்..

மழையால் சுகாதாரம் பேணப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் கழிவுநீர் கால்வாய்களிலும் ஆற்றங்கரை ஓரத்திலும் வடிகால்களிலும் சேர்கின்ற அழுக்கை மழை அப்புறப்படுத்துகிறது. அத்தனை அழுக்குகளும் மழையில் அடித்துச் செல்ல நன்னீர் அவற்றின் வழி ஒடுவதைப் பார்க்கலாம். மனிதர்களின் சுகாதாரத்தைப் பேணுவதற்கு மழை உதவுகிறது.

மழை பொய்க்கிற காலத்தில் சுகாதாரக் குறைவால் நோய்கள் பரவத்தொடங்குகின்றன. (பக்6). மழை போக்குவரத்தை எளிமையாக்குகிறது. (பக்.6). கைம்மாறு கருதாமல் உதவுவதற்கு மழையையே உதாரணமாக்கினோம். மழை கைமாறு கருதாமல் மட்டுமல்ல, பாரபட்சம் பார்க்காமல் பரோபகாரம் செய்வதிலும் முதலிடம் வகிக்கிறது.(பக்.16).

‘நாம் வாய்க்கால்களையும் கால்வாய்களையும் முறையாகத் தூர்வாரினால் வெள்ள சேதத்தை பெருமளவு குறைக்க முடியும். நிவாரணத்துக்காக வழங்கப்படும் தொகையை நிர்மாணத்திற்காக பயன்படுத்தினால் போதும்.( பக்.25).

மழை என்பது மனதோடு தொடர்புடையதாக நம் முன்னோர்கள் கருதினார்கள். நல்ல மனிதர்கள் இருக்கிற இடத்தில் மழை தவறாமல் பெய்யும் என்று கருதினார்கள். மண்ணை ஆள்பவர்கள் நீதி நேர்மையுடன் ஆண்டால் பருவமழை பொய்க்காமல் தங்களைக் காப்பாற்றும் என்று நினைத்தார்கள்.

அதனால் நீதி பரிபாலனம் செய்வதை மிகப்பெரிய பொறுப்பாகக் கருதி பங்காற்றி வந்தார்கள்.அவர்கள் ‘நல்ல ஒருவர் இருந்தால்கூட நாடு முழுவதும் செழிக்கும்’ என்று நினைத்தார்கள்.(பக்.29). NCBH வெளியீடு.

#பேராசிரியர் விஸ்வநாதன், வாசகர்பேரவை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top