ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பல்வேறு பதிப்பகங்கள் ஆல் போலத் தலைத்தோங்கியதன் மூலம் பல்லாயிரக்கணக்கான நூல்களை வெளியிட்ட வரலாற்றை பின்புலமாகக் கொண்ட புதுக்கோட்டையில் முதல் புத்தகத் திருவிழா (2017-நவ.26-டிச.4) நடைபெற்றது. அதன்தொடர்ச்சியாக 6 -ஆவது ஆண்டாக 2023 ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 6 வரை நடக்கவுள்ள புத்தகத் திருவிழாவுக்காகான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகையில் புதுக்கோடடையில் நடைபெறும் புத்தகத்திருவிழாவில் பங்கேற்கும் புத்தகப் பதிப்பகங்கத்தார் தங்களது முன்னோடியாக திகழ்ந்த (புதுக்கோட்டை) ஆணி வேர்களைத்தேடி வந்துள்ளனர் என்றால் அது மிகையில்லை என்றே கூறலாம்.
ஒரு நல்ல சமுதாயம் சிறந்த முறையில் வளரவேண்டும் என்றால் நல்ல சிந்தனை இலக்கியம் மொழி வளரவேண்டும் அதற்கு கற்றோர், அறிவு சார்ந்தோர் பொது மக்களிடம் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும். புத்தகங்கள்தான் அறிவின் திறவுகோல்.
ஒரு ஊரில் புத்தகங்களுடன் நூலகம் திறக்கப்படுகிறது என்றால் அங்கு ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது என்ற பழமொழியும் உண்டு. அறிஞர் அண்ணா புத்தகம் படிப்பதற்காக அறுவை சிகிச்சையையே தள்ளிவைக்கச் சொன்னார். தூக்குமேடைக்குத் தயாராக இருந்த பகத்சிங் கடைசி ஆசையாக படிப்பதற்கு மட்டுமே நேரம் கேட்டதாக கூறுவார்கள்.
27 ஆண்டுகள் தனிமைச் சிறையில் இருந்த நெல்சன் மண்டேலா, அரசிடம் வைத்த முக்கியக் கோரிக்கை நல்ல புத்தகங்களை படிக்க கேட்டதுதான். சட்டமேதை அம்பேத்கர் நூலகம் இருக்கும் இடத்தருகில் தனக்கு வசிக்க வீடு கேட்டது போன்ற செய்திகள் மூலம் புத்தகங்களின் முக்கியத்துவத்தை நாம் உணர முடியும்.
ஆங்கிலேயர் ஆட்சியில் 1835 -ல் தான் இந்தியாவிலும், தமிழ் நாட்டிலும் அச்சகம் வைத்துக்கொள்ளவும், புத்தகங்களை வெளியிடவும் உரிமை வழங்கப்பட்டது. அதற்கு முன் கிறிஸ்தவ பாதிரியார்களும், கிறிஸ்தவ சங்கங்களும் மட்டுமே இந்த உரிமையைப் பெற்றிருந்தன.
ஆகவே, புத்தக வரலாற்றில் அச்சடித்த புத்தகங்களின் வரலாறு 150 ஆண்டுகள்தான்.இந்நிலையில், புத்தகங்களை வெளியிடக்கூடிய பதிப்பகங்கள் நிறைந்தும், ஆயிரக்கணக் கான புத்தகங்களை வெளியிட்ட பெருமைக்குரிய புதுக்கோட்டை சமஸ்தானத்தை புத்தகக்கோட்டை என்றும் அழைத்தார்கள் என்பது வியப்புக்குரிய செய்தி.
காரணம், 1980 வரை இருந்த புகழ் பெற்ற பதிப்பகத்தை நடத்திய 13 பேரில் 10 பேர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே. இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கியவர், அரசு சார்பில் இந்தியப் பதிப்பு வரலாற்றை வெளியிட்ட கேசவன் ஆவார்.
1934 -ல் பர்மாவிலிருந்து புதுக்கோட்டை மாவட்டம், ராயவரத் தைச் சேர்ந்த வை. கோவிந்தன் என்பவர் ரூ. 1 லட்சம் முதலீட்டில் சக்தி வெளியீடு என்ற பதிப்பகத்தை இங்கு தொடங்கினார்.
இன்றும் உலகம் போற்றும் டைம்- பத்திரிக்கைக்கு இணையாக அதே வடிவமைப்பில், நிறுவன அடையாளச் சின்னமாக கலங்கரை விளக்கம் – வைத்து 1939 -ல் சக்தி என்ற மாத இதழைத் தொடங்கினார். அது, காரைக்குடி, மதுரை, சென்னை, கோவை ஆகிய ஊர்களில் கிளைகளைக் கொண்டிருந்தது.
இவர்தான் இறகுகனம் (FEATHER THICKNES) கொண்ட தாளில் முதல் முதலாக வரலாறு, இலக்கியம், அரசியல், விவசாயம், அறிவியல் போன்ற 45 வகையான நூல்களை ரூ. 1 – விலை மதிப்பில் வெளியிட்டார். இவர்தான் முதல் முதலாக குழந்தைகளுக்காக அணில் பத்திரிக்கையைத் தொடங்கினார்.
இதில் உதவி ஆசிரியராக இருந்தவர் தமிழ்வாணன். மேலும், குழந்தைகள் உலகம், பெண்களுக்காக மாதர் போன்ற இதழ்களையும் வெளியிட்டார். 1957 -ல் முதன் முதலாக பாரதியார் கவிதைகளை ரூ.1.50 -க்கு நூலாக வெளியிட்டார்.
மேலும், ராஜாஜியின் வியாசர் விருந்து, சக்ரவர்த்தித்திருமகன் போன்ற படைப்புகளை மாணவர் பதிப்பாக ரூ. 1- க்கு வெளியிட்டார். ஒரே மாதத்தில் 60 ஆயிரம் பிரதிகளை விற்பனை செய்து சாதனை படைத்தது இந்த வெளியீடு. புத்தக வெளியீட்டில் வை. கோவிந்தன் தொடாத துறை ஏதும் இல்லை. அப்படித்தொட்டதை அழகுபடுத்தாமல் விட்ட தில்லை.
புதுக்கோட்டை மாவட்டம், ராயவரத்தைச் சேர்ந்த குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா, பாப்பா, பாப்பா மலர், டமாரம், டிங்டாங் போன்ற இதழ்கள் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்தவை. பின்னாளில் பிரபல இயக்குனர் ஆன
ப. நீலகண்டன் இங்கு வெளியான அணிகலன்- என்ற இதழில் பணியாற்றிவர்.
கவியரசு கண்ணதாசன், சுபாஷ்சந்திரபோஸ் – என்ற வரலாற்று நூலுடன் தனது எழுத்துல வாழ்வை இங்குதான் தொடங்கினார். புதுக்கோட்டை படைப்பாளிகளுக்கெல்லாம் நிலைக் கலனாக இருந்த திருமகள் -என்ற பத்திரிகை இங்குதான் வெளியானது.
பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களை உருவாக்கிய பொன்னி -என்ற இதழ் 1940 -களில் இங்குதான் வெளியானது. பாரதிதாசன் கவிதைகளை முதன் முதலாக வெளியிட்ட செந்தமிழ் நிலையம்- கடியாபட்டி ராமச்சந்திரபுரத்தில் இயங்கியது.
ஞானபீடம் பரிசு பெற்ற எழுத்தாளர் அகிலன் பெருங்களூரைச் சேர்ந்தவர். அவரது படைப்புகளை வெளியிட்டது புதுக்கோட்டையிலிருந்த பழனி பிரசுரம்தான். மீனாட்சிப் பதிப்பகம் அக்காலத்தில் தனிப்பாடற்திரட்டு போன்ற தமிழ் இலக்கியங்களையும் வெளியிட்டது.
நாடு சுதந்திரம் அடையும் முன்னதாகவே சுமார் 10 -க்கும் மேல்பட்ட பதிப்பகங்கள் தொடங்கப்பட்டு ஆயிக்கணக்கான புத்தகங்களை வெளியிட்ட பாரம்பரியமிக்க புதுக்கோட்டை யில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் பங்கேற்க வந்துள்ள பதிப்பகத்தார் பெருமை கொள்ளலாம். இந்தப் பெருமை தமிழ்நாட்டில் வேறு எந்த ஊருக்கும் கிடையாது.
இது குறித்து ஆய்வு நூலக நிறுவனர் ஞானாலயா பா. கிருஷ்ணமூர்த்தி கூறியது:
புதுக்கோட்டையில் அக்காலத்தில் இத்தனை எழுத்தாளர் களும், பதிப்பகங்களும் தோன்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது புதுக்கோட்டை சமஸ்தான மன்னர்கள்தான். இரண்டாம் உலகப் போரின்போது ஆங்கிலேய அரசு புதிய பதிப்பகங்களுக்கும். புத்தகங்கள் அச்சிடவும் தடைவிதித்தது.
ஆனால், புதுக்கோட்டை சமஸ்தானத்தில் மட்டும்தான் அச்சுத்தாளுக்கு (PAPER CONTROL) கட்டுப்பாடு இல்லாம லிருந்ததால், பலரும் இங்கு பதிப்பகத்தைத் தொடங்கி புத்தகங்களை வெளியிட்டனர்.
இங்கிருந்து சென்றவர்கள்தான் பாரி நிலையம், மணிமேகலை பிரசுரம், தமிழ்ப்பண்ணை, வானதி பதிப்பகம், முல்லை பதிப்பகம், புதுமை பிரசுரம், கார்த்திகேயாயிணி பதிப்பகம், பவானி பிரசுரம், தமிழ் நிலையம், பாப்பா நிலையம் போன்ற பதிப்பகங்களைத் தொடங்கினர்.
குழந்தையைத் தொட்டிலில் போடுவது, திருமணவிழா, 60 வயது, 80 வயது நிறைவு போன்ற விழாக்களில் பல்வேறு நூல்களையும், நீத்தார் நினைவு நாளில் திருவாசகத்தையும் வெளியிடும் மரபு இப்பகுதியில் வாழும் நாட்டுக்கோட்டை நகரத்தாரிடம் இன்று வரை உள்ளது.
மேலும், புத்தகங்களைப் பாதுகாப்பதும், சேகரிப்பதும் அவர்களது வாழ்க்கை மரபு. ஆகவேதான், பழைய புத்தகங்க ளைத் தேடுவோர் இன்று வரை புதுக்கோட்டைக்கு வரக்கூடிய சூழல் இருந்து வருகிறது என்றார் அவர்.