Close
நவம்பர் 23, 2024 5:05 காலை

புத்தகம் அறிவோம்… நிலவையார் கலவைக்கவிதைகள்-100

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

வீடு கட்டி வசிப்பதற்கும்
விறகாய் உணவு சமைப்பதற்கும்
கூட்டில் பறவை வசிப்பதற்கும்
கிளைகள் தந்து உதவுகின்றோம்!

வழியில் போகும் மனிதர்களும்
வந்து தங்கிட நிழல் தருவோம்
தெளிவாய் ஒன்றைச் சொல்கிறோம்
தெரிந்துகொள்வீர் மனிதர்களே!

உயிர் எல்லாம் களிப்புறவே
உலகம் நன்றாய் செழிப்புறவே
உயர்வாய் மரங்களை நினைத்திடுங்கள்
உங்கள் வாழ்வில் இணைத்திடுங்கள்.
-பேசும் மரங்கள் பக்.42.

நல்லசெயலை நாளும் படி
நாடு உன்னை போற்றும் படி
இல்லம் சிறக்க என்றும் படி
ஏற்றம் கிடைக்கும் நினைத்தபடி
– படி, பக். 59.

வேப்பமரம் ஒன்னு வச்சா
வெயிலுக்கு நல்லது
தோப்பாக நாம் வளர்த்தா
தென்றல் வந்து துள்ளுது.
– வேப்பமரம் பக்.72.

பணத்திற்கு வாக்களிக்கும்
பரிதாபம் இந்த நாட்டில்
இனத்திற்கு வாக்களித்து
இன்புறும் சொந்த நாட்டில்
குணத்திற்கு வாக்களித்தால் குற்றமென்று நினைக்கின்ற
மனம் கொண்ட மனிதர்களே
நீங்கள் மாறுவது எக்காலம்.
– மாறுவது எப்போது? பக்91.

மேற்கண்ட எளிய, இனிய கவிதைகள் இடம் பெற்றுள்ள நூல், மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டுள்ள” நிலவையார் கலவைக் கவிதைகள் 100″.

கவிஞர் நிலவைப் பழனியப்பனிடம் சிறுவர்களுக்கு ஒரு கவிதை நூல் தாருங்கள் என்று கேட்டிருப்பார்கள் போல, அதனால்தான் அவர்களுக்காகவே 100 கவிதைகளை, 100 தலைப்புகளில் முதல் வாசிப்பிலேயே புரிந்துகொள்வது போன்று எளிமையாக எழுதித் தந்திருக்கிறார்.

நிலவை பழனியப்பன் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம், நிலையப்பட்டி. சொந்த ஊர் பெயரை முன் சேர்த்து நிலவை பழனியப்பன் ஆகியிருக்கிறார் எழுத்துப் பணிக்காக. பிஎஸ்என்எல்   அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இலக்கியம் படித்து கவிதை புனைபவர்களைவிட இலக்கியம் படிக்காமலே சிறப்பாக கவிதை எழுதலாம் என்பதற்கு இவர் ஒரு சாட்சி.

கால நிலைமாற்றம், உலகம் வெப்பமயமாதல் போன்ற வற்றையெல்லாம் மனதில்கொண்டு, மரம் வளர்ப்பதன் அவசியத்தை விளக்கும் வகையில் 9 கவிதைகள் உள்ளன இந்நூலில் ‘காடு வளர்ப்போம்’ கவிதைபை வாசிக்கும்போது, ஆசியா விலேயே மிகப்பெரிய ஆற்றுத் தீவான, அசாம் பிரம்மபுத்ரா நதியின் நடுவே அமைந்துள்ள மசூலித் தீவில், 1360 ஏக்கரில் தனிமனிதனாக காடு வளர்த்துள்ள ‘சாதவ் பயாங்கும்’,

ஆலமரம் கவிதையை வாசிக்கும் போது கர்நாடகாவில் ‘சாலு மாரத திம்மக்க, ‘ என்ற பெண்மணி (தற்போது வயது 105 ) நெடுஞ்சாலையில் 70 ஆண்டுகளில் 450 ஆலமரங்களை வளர்த்தது நினைவுக்கு வருகிறது. சாலுமாரதாவினுடைய சேவையைப் பாராட்டி அவருக்கு ஒரு அமைச்சர் அந்தஸ்தில் சலுகை வழங்கப்பட்டிருக்கிறது.

100 கவிதைகளில் பறவைகளைப் பற்றியும், கல்வியின் அவசியம் பற்றியும், பல கவிதைகள் வரையப்பட்டுள்ளது. கல்விக் கண் திறந்த காமராஜரைப்பற்றியும் 2 கவிதைகள் உள்ளன. ‘கலவைக் கவிதைகள்’ என்பதால், இன்றைய சமூகத்தில் பேசபட வேண்டிய அனைத்து விஷயங்களைப் பற்றியும் கவிதை பாடியிருக்கிறார் நிலவை.

இக்கவிதை நூலை கல்வித் துறை அனைத்து பள்ளி நூலகங்களுக்கும் வரங்கிக் கொடுக்கலாம். வனத்துறை இதில் உள்ள கவிதைகளை எடுத்து பிரச்சாரத்திற்கு பயன்படுத்தலாம். மேலும் மாணவர்களுக்கு அன்பளிப்பாக வழங்க மிகச்சிறந்த சுயமுன்னேற நூல் இது.வெளியீடு-மணிவாசகர் பதிப்பகம்,93805 30884.விலை ரூ.150.

# சா.விஸ்வநாதன்-வாசகர் பேரவை-புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top