நிலக்கடலையை நேரடியாகச் சட்டியில் போட்டு வறுக்காமல் மணல் போட்டு வறுப்பதேன்?
நிலக்கடலையை நேரடியாகச் சட்டியில் போட்டு வறுக்கும்போது, சட்டியின் பரப்பும் நிலக்கடலையின் ஓர் குறிப்பிட்ட பகுதி மட்டும் ஒன்றை ஒன்று தொடுகின்றன. இத்தொடர்பு மூலம் வெப்பம் கடத்தப்படுகிறது. ஆனால் வெப்பம் சீராக கடலை முழுவதும் பரவுவதற்கு அடிக்கடி கடலையை கிளறிவிட்டுக்கொண்டிருக்க வேண்டும். இது அதிக நேரம் பிடிக்கக் கூடியதும் கூடுதல் எரிபொருள் வீணாக்கும் செயலுமாகும்.
மணல் எளிதாக கிடைக்கக் கூடியதும் வெப்பத்தினால் பழுதடையாத பொருளாகவும் அமைகிறது. இதில் நிலக் கடலையைப் போட்டு வறுத்தால், மணல் சூடாகி அது தொட்டுக் கொண்டுள்ள கடலையின் எல்லாப் பகுதியிலும் வெப்பம் சீராகப் பரவி சீக்கிரமாகவும் வறுபட்டுவிடுகிறது. சாதாரண சல்லடை கொண்டு நிலக்கடலையையும் மணலையும் பிரித்தும் விடலாம். பக்.37.
இது போன்ற – தாகம் எப்போது ஏற்படுகிறது? தாகம் எடுப்பது எதனால்?சிறுநீரகக் கற்கள் என்றால் என்ன? அவை எப்படித் தோன்றுகின்றன? தலைமுடி உதிரக் காரணம் என்ன? அதைத் தடுக்க முடியுமா? (மனிதனின் மிகப்பெரிய இழப்பு முடி இழப்புதான். அதைத் தடுக்க இதைப் பயன்படுத்துங்கள் என்று தொலைக்காட்சி களில் சமீப காலமாக முடி உதிர்வதை உணர்வுபூர்வமாகச் சொல்லும் ஒரு விளம்பரம் வருகிறது)
ஈக்கள் அமரும்போது பின்னங்கால்களை வேகமாகத் தேய்த்துக் கொள்வதேன்? இறந்தவர் எலும்புக் கூட்டிலிருந்து ஆணா பெண்ணா என்று அறிவது எப்படி? நம்மைப்போல் விலங்குகளுக்கும் வியர்ப்பது உண்டா? ஞாபகமாக மறந்து விடுதல் என்பது?-
பலவகையான கேள்விகளுக்கு விடை சொல்கிறது “அறிவியல் வெளியீடு” தந்திருக்கும் “உங்களுக்குத் தெரியுமா?” நூல். இன்றைய காலகட்டத்தில் இளையோர்களிடையே அறிவியல் சிந்தனை எளிமையாகக் கொண்டு சேர்க்க உதவும் நூல் இது. அறிவியல் வெளியீடு,245 அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம்,சென்னை. 600 086.
#சா.விஸ்வநாதன்-வாசகர்பேரவை-புதுக்கோட்டை#