Close
நவம்பர் 21, 2024 11:49 மணி

புத்தகம் அறிவோம்… ஒரு வரலாறு உருவாகிறது..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

மாறுவதற்கு, மாற்றுவதற்கு, தகவமைப்பதற்கு மனிதன் தயாராவதால், மனிதன் வாழ்கிறான். புதிய வாழ்க்கை முறைகளை ஏற்கிறான்; சில வாழ்வாதாரங்களைத் தேடுகிறான்.இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

1.மனிதனின் செயல்தன்மை.(Dynamism)
2. மாறவும் மாற்றவும் தயாராகாமல் இருந்தால் மனித இனமே இல்லாமல் போகும்.இந்த மாற்றங்களை எல்லாம் பதிவு செய்வது வரலாறு.(பக். 18).

பாம்பும் ஏணியும் விளையாட்டும் போல, காலம் உருளும் போது, உச்சத்தில் எளிதாக ஏறி வென்றவர்களும், பலமுறை பாம்புகளின் கடிப்பட்டு பல ஏணிகளில் ஏறி வென்றவர்கள் மட்டும் இருந்தால் அது முழு வரலாறல்ல. ஏணியில் ஏறவே முடியாது என கீழே உள்ளவர்களும், பல முறை கீழே தள்ளிவிடப்பட்டோரும், வரலாற்று ஏடுகளில் கட்டாயம் வரவேண்டும். அதுதான் முழுமையான வரலாறு.(பக்.29).

கடந்த, நடப்பு காலங்களை ஏற்று எதிர்காலத்துடன் இவற்றின் காரண-காரிய உறவை விளக்கினால், நாம் புதுமையை (புதியதோர் உலகம்) காண்போம்.அதாவது நம் வாழ்க்கை யைக் கொடுத்தவர்கள், அரசியல்வாதியோ, முதலாளியோ, செல்வந்தரோ, கடவுளோ அல்ல.நம் செயல்பாடுகளும், உழைப்பும், போராட்டங்களும் நம் முக்காலங்களையும் முடிவு செய்கிறது. இந்த முக்காலங்களில் முக்கியமானது கடந்தகாலம்.(பக்.60).

பாரதியின் “சரித்திரத் தேர்ச்சி கொள்” என்பதைப் பெரும் பாலானோர்  ஏற்றுக்கொள்வதில்லை. வரலாறு வாழ்க்கைக்கு பயன்படாது என்ற கற்பிதம் தமிழகத்தில் நெடுங்காலமாக உள்ளது.

வரலாறும் வாழ்க்கைக்கு பயன்படும், அது எல்லோருக்குமான பாடம் என்று, முனைவர் கே. என்.கணேஷ் ஆங்கிலத்தில் எழுதி, பேராசிரியர் பி.ஆர் ரமணி அவர்களால் தமிழ் வடிவம் பெற்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தால் வெளியிடப் பட்டுள்ள” ஒரு வரலாறு உருவாகிறது” என்ற இந்த நூல் நமக்குச் சொல்கிறது.

வரலாறு என்றால் என்ன? வரலாறு எப்படி எழுதப்பட வேண்டும்? வரலாற்றை எழுத உதவும் ஆதாரங்கள் எவை எவை? வரலாறு பயின்றால் என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளது? என யாவற்றையும் விளக்கியுள்ளது இந்த நூல்.

மேலும் வரலாற்றை அறிய, தமிழகத்தை உதாரணமாக வைத்து, செய்முறைப்பயிற்சிகளும் தரப்பட்டுள்ளது. வரலாற்றுப் பாடத்தை பள்ளிகளில் போதிக்கும் ஆசிரியர்கள் இதை வாங்கி வாசிக்கவும். அது மாணவர்களுக்கு பயன்படும்.
மற்றவர்களுக்கு இந்நூலின் வாசிப்பு வரலாற்றின் மீது பற்றை உருவாக்கும்.வெளியீடு:தமிழ்நாடு அறிவியல் இயக்கம். விலை. ரூ.80.

# சா. விஸ்வநாதன்-வாசகர் பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top