Close
செப்டம்பர் 20, 2024 5:51 காலை

புத்தகம் அறிவோம்… பேசும் பரம்பொருள்…

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

டாக்டர் சுதா சேஷய்யனின் இந்தக் கட்டுரைகளைப் படித்து முடித்தபின் எனக்கு தோன்றிய சிந்தனை என்னவென்றால் கவியரசு கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதத்திற்குப் பின் மத நம்பிக்கைக்கு பின் உள்ள வாழ்வியல் சிந்தனைகளையும் அறிவியல் உண்மைகளையும் எடுத்துக்காட்டும் பேசும் பரம்பொருள் மாபெரும் முயற்சி இக்கட்டுரைகள் என்பதுதான்.  நீதியரசர் ராமசுப்பிரமணியன்.(பக்.5).

எல்லாக் கதைகளையும் நம்பலாம். எல்லாக் கதைகளுக் குள்ளும் இருக்கும் உண்மை ஒன்றுதான். ராமரின் வெற்றி, கிருஷ்ணரின் வெற்றி, குரு கோவிந்தரின் வெற்றி, லஷ்மி தோன்றிய பாற் கடல் வெற்றி, யமனையே பணிய வைத்த நசிகேதஸ் வெற்றி, மஹாவீரரின் மஹாநிர்வாணம்- சம்பவம் எதுவாக இருந்தாலும் சத்தியம் ஒன்றுதான்.அது, இருள்நீங்கிய ஒளி ! அஞ்ஞானம் அகன்ற ஞானம் !!.பேசும் பரம்பொருள், தீபாவளியைப் பற்றி கட்டுரையில்.(பக்.17).

மேனாள் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைகழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் அடிப்படையில் ஒரு மருத்துவர். உடல் பிணி நீக்கும் மருத்துவத்துறையில் இருந்தாலும் அவர் அதிகமாக அறியப்படுவது ஆன்மீக சொற்பொழிவுகள், எழுத்துக்களுக்காகத்தான். “பேசும் பரம்பொருள்” நூல், துக்ளக் வார இதழில் வெளிவந்த 57 கட்டுரைகளின் தொகுப்பு.

ஆன்மீகம் என்பது வெறும் ஆலய வழிபாடு மட்டுமல்ல அது அறிவியல் செயல்பாடும் கூட; வருடம்தோறும் நாம் கொண்டாடும் பண்டிகைகள் பொழுது போக்க அல்ல அதுவும் அறிவியல் பயன்பாட்டுடன் கூடிய செயல்பாடே என்பதை இந்த கட்டுரைகளை வாசிக்கின்றபோது அறியலாம்.

தீபாவளி, சஷ்டி விரதம், கார்த்திகை மாதத்தின் சிறப்பு, மார்கழியின் மேன்மை, ஆரத்ரா தரிசனம், ஆலய நமஸ்காரம், தைப்பொங்கல் திருநாள் – சித்திரைப் பிறப்பு, மஹாமகச் சிறப்பு, வைகாசி விஷேசங்கள், கோவில் மரங்களும், கோடைத் தீர்வும், காயத்ரி மந்திரம், ஆடி மாத விஷேசம், குருபெயர்ச்சி, நவராத்திரி, மஹாமகச்சிறப்பு, ஏகாதசி வழிபாடு, இன்னும் பலப் பல நம் அன்றாட வாழ்வோடு தொடர்புடைய அனைத்து செயல்பாடுகளில் உள்ள ஆன்மீகம் மற்றும் அறிவியல் விஷயங்களைச் சுவைபட சொல்லியிருக் கிறார் இந்த நூலில் உள்ள கட்டுரைகளில் சேஷய்யன்.

ஆன்மீகவாதிகள் மட்டுமல்ல மற்றவர்களும் வாசிக்க வேண்டிய நூல். இன்று பரபரப்பாக பேசும் பேசுபொருளுக்கு மாற்றானது இந்நூல்.வானதி பதிப்பகம், 044 – 24342810/24310769.

# சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top