Close
ஜூலை 5, 2024 11:03 காலை

புத்தகம் அறிவோம்… தமிழ்நாட்டுச் சட்டமேதைகள்…

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

ஒரு கட்டத்தில் சராசரியாக நாள்தோறும் 30 வழக்குகளில் முன்னிலையாக வேண்டிய அளவிற்கு பரபரப்பான வழக்கறிஞராக மாறிப்போனார். அதன் உச்சமாக ஒரு நாளில் 44 வழக்குகளில் வாதாடினார்.(பக்.80 – 81).

வழக்கறிஞராக புரிந்த சாதனைகளையெல்லாம் தாண்டி, கால வெள்ளத்தில் அவர் பெயரை இன்றும் உரக்கச் சொல்லியபடி கல்விப்பணி ஆற்றிக் கொண்டிருக்கிறது அவர் உருவாக்கிய எதிராஜ் கல்லூரி.

கல்விக்கு அதிலும் பெண்கல்விக்காக சொந்த பணத்திலிருந்து 10 லட்சத்தைக் கொடுத்து அறக்கட்டளை உருவாக்கி 12 ஆண்டுகள் கூடவே இருந்து கல்லூரியை வளர்த்தெடுத்தார். இன்றைக்கு ஆயிரமாயிரம் பெண் பட்டதாரிகளை தந்து, தந்து கொண்டிருக்கும் ஆலமரமாக எதிராஜ் கல்லூரி திகழ்வதற்கு அவரது புரட்சிகரமான சிந்தனையே காரணம்.(பக்.83).

தமிழ் சினிமா வரலாற்றில், முதல் “சூப்பர்ஸ்டார்” தியாகராஜ பாகவதர், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பெயர்கள் தவிர்க்க முடியாதோ அதேபோல சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் வழக்கறிஞர் வி.எல்.எதிராஜ் பெயரும் தவிர்க்க முடியாது. இவர்களுக்குள் ஒரு தொடர்புண்டு. புகழ்பெற்ற லட்சுமிகாந்தன் வழக்கிலிருந்து மேற்கண்ட இருவரையும் விடுவித்தவர் எதிராஜ். அதற்காக பாகவதர், 100 பவுன் தங்கத் தட்டை கொடுத்து அதில்தான் வாழ்நாள் முழுவதும் சாப்பிட வேண்டுமென வேண்டுகோள் வைத்தார்.

இப்படி புகழ் பெற்ற 28 சட்டமேதைகளைப் பற்றிய சொற்சித்திரம் தான் ” தமிழ்நாட்டுச் சட்டமேதைகள்” நூல்.
உயர்வகுப்பில் பிறந்து ஒடுக்கப்பட்டவர்களுக்காக உழைத்த என் .டி.வானமாமலை, சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதி பி.வி.ராஜமன்னார்,

சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த வக்கீல் பி.டி.ராஜன்,மேலே சொல்லப்பட்ட எதிராஜ்,ஐ.நா.சபையில் வாதாடி ஹைதரபாத்தை மீட்ட ஆர்காடு சகோதரர்களில் ஒருவரான ராமசாமி முதலியார் (மற்றவர் மருத்துவமேதை லட்சுமணசாமி முதலியார்),

ஆந்திராவைத் தனிமாநிலமாக்க நேருவுக்கு அறிவுறுத்திய அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்,மேட்டூர் அணை உருவாகக் காரணமாக அமைந்த சி.பி.ராமசுவாமி ஐயர்,பாரதியின் எழுத்துகளை முதலில் அச்சிட்ட வி.கிருஷ்ணசாமி ஐயர்,

தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியை உருவாக்கிய வி.சி.தேசிகாச்சாரியார்,சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலை வைக்கப்பட்ட முதல் வழக்கறிஞர் வி. பாஷ்யம் ஐயங்கார்,
உச்சநீதிமன்றத்தில் நீதிபதியான முதல் தென்னிந்தியர் எஸ். வரதாச்சாரியார்,அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் எஸ். சுப்பிரமணிய ஐயர்,சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியான முதல் இந்தியர் டி.முத்துசாமி ஐயர்,

சட்டத் தமிழின் தந்தை, தமிழ் புதினத்தின் தந்தை என்றெல்லாம் அழைக்கப்படும் மாயூரம் வேதநாயகம் பிள்ளை ஆகியோரின் சட்ட அறிவையும் , உயர்ந்த குணங்களையும், சமுதாய பங்களிப்பையும் அழகுற சொற்சித்திரமாக்கித் தந்திருக்கிறார் நூலாசிரியர் கோமல் அன்பரசன்.கோமல் அன்பரசன் ஊடகவியலாளர். அவரின் எழுத்துகள் நூலை தொடர்ந்து வாசிக்கத் தூண்டுகிறது. வழக்கறிஞர்கள், வழக்கறிஞராக விரும்புபவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய சிறந்த நூல். இந்து தமிழ் திசை
வெளியீடு.

# சா.விஸ்வநாதன்-வாசகர்பேரவை-புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top