Close
செப்டம்பர் 20, 2024 7:18 காலை

புத்தகம் அறிவோம்… மிகெய்ல் நைமி எழுதிய மிர்தாதின் புத்தகம்..

இங்கிலாந்து

புத்தகம் அறிவோம்..

மிகெய்ல் நைமி எழுதிய மிர்தாதின் புத்தகம் ஒரு ஆன்மிகப் புதினமாகும். ஆன்மீக ரீதியில் ஈர்க்கப்பட்டவர்களுக்கு இப்புத்தகம் தீனி போடுவதாக அமையக்கூடும். வாசித்துக்கொண்டிருக்கையில் அப்படி பெரிதாய் தென்படவில்லை, புரிபடவில்லை எனக்கு. புரிந்து கொள்ளுமளவுக்கு போதுமான ஆன்மிக ஞானம் இல்லையோ என்னவோ!

ஞானத்தின் பால் நாட்டமுடையவர்களுக்கு இந்தப் புத்தகம் பெரும் கொடையாக இருக்கலாம். இதை ஒரு தத்துவப் புத்தகம் என்றும் சொல்லலாம். இந்த படைப்பு நம்மை அழைத்துச் செல்லும் உலகம் வேறு. மனிதனுக்குள் கிடக்கும் இருண்மை உள்ளுணர்வில் கரைத்து ஒருமைப்படுத்தி நமக்குள் இருக்கும் தெய்வீகத்தை திரை நீக்கிக் காட்டும் சுயதரிசனத்திற்கான தூண்டுதல் தான் மிர்தாதின் புத்தகம் எனலாம்.

தம்மால் வெளிப்படுத்த முடியாததை வெளிப்படுத்த இலட்சக்கணக்கான எழுத்தாளர்கள் முயற்சி செய்து பார்த்திருக்கிறார்கள். ஆனால் அவர்களெல்லாம் படுதோல்வி தான் அடைந்திருக்கிறார்கள். அந்த முயற்சியில் தோற்றுப் போகாத ஒரே படைப்பு மிர்தாதின் புத்தகம் தான்.

இதன் சாரத்தை நீங்கள் உணர்ந்து கொள்ளவில்லை என்றால் அது உங்கள் தோல்வி தானே தவிர அவர் தோல்வி அன்று என்று இந்தப் புத்தகத்தை விமர்சிக்கிறார் ஓஷோ. இந்த விமர்சனம் தான் நிறைய பேரை வாசிக்கத் தூண்டி இருக்கலாம், என்னையும் உங்களையும் சேர்த்து.

இந்த புத்தகம் வாழ்கையை புரட்டிப்போடும் மகத்தான சக்தி மிக்கது என்றெல்லாம் சொல்வதற்கில்லை. இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகமிது. இதில் சொல்லப்பட்ட கருத்துகள் அனைத்தும் வாழ்க்கைக்கு பொருந்தும். ஆனால் நாம் தான் இந்த புத்தகத்திற்கும் சொல்லப்பட்ட கருத்துகளுக்கும் எதிர்மறையாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இதில் வழங்கப்படும் வாழ்க்கையின் பார்வை,ஒரு கதை வடிவில் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு மடாலயத்தின் விசித்திரமான கதை என சொல்லலாம். இந்த படைப்பின் மூலம் பரிந்துரைக்கப்பட்ட வாழ்க்கை முறையை நடைமுறையில் செயல்படுத்துவது மிகவும் கடினம். இந்த படைப்பு காட்டுகிற பாதையில் நடக்க, அச்சமின்மையி லிருந்து பிறந்த அளப்பரிய உள் வலிமையும் உண்மையான ஞானமும் தேவைப்படலாம்.

முழு விஷயத்தையும் ஒரே வார்த்தையில் சுருக்க வேண்டும் என்றால்…. அந்த வார்த்தை “அன்பு”. ஆம் அன்பு என்பது மனித உருவம் எடுத்தால் அது எப்படி நடந்து கொள்ளும், எப்படி வாழும் என்பதை அழகாக சொல்கிறது. முழுமையடையும் வரை இது முற்றிலும் பொருத்தப்பட்ட ஒரு வேலைப்பாடு என்பது போல இந்த படைப்பு நம்மை உணர வைக்கிறது. நாம் அதில் எந்த மோசமான விஷயத்தையும், விஷமத்தையும் விரும்பி சேர்க்க மாட்டோம். அவ்வளவு பூரணத்துவமானது.

மோட்சத்திற்கான தேடுதலில் அதாவது ஆழ்ந்த திருப்தி அல்லது சுயத்தை தேடுபவர்களுக்கு, பிரபஞ்சத்துடன் இணக்கம் காட்டிட விரும்புகிறவர்களின் தாகத்தைத் தணிக்க இந்த புத்தகம் உதவியாக இருக்க கூடும். நிறைய ஆன்மீக விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. நம்புவதற்கு கடினமாயினும் வாசிக்க நன்றாக இருக்கிறது எனலாம்.

இருப்பினும் எனக்கு அவ்வளவு சுவாரஸ்யம் அளிக்கவில்லை முதலில் வாசிக்கையில். இடையிலேயே அலுப்புத் தட்டியது. விறு விறு மொழிநடையில் சொல்வதற்கு இப்புத்தகம் சராசரி கதை அல்ல, இருப்பினும் புதினத்திற்குரிய லட்சணத்துடன் கதை சொல்ல முற்பட்டிருக்கிறார் நைமி. நிகழ் காலத்தோடு ஒட்டாமல் பயணிக்கும் மிர்தாதின் புத்தகம் ஒரு கட்டத்திற்கு மேல் வாசிப்பைச் சோதனைக்குள்ளாக்குகிறது என்று தான் சொல்வேன். நீட்ஷே, காம்யு இவர்களை வாசித்த போது இருந்த சிரமம், மிர்தாதின் புத்தகம் வாசிக்கும் போது இரு மடங்கானது. திரும்ப திரும்ப பக்கங்களை புரட்டியபோது, மெல்ல மெல்ல என்னை புரட்டி போட்டது.

இப்போது நாம் வாழும் உலகம் அனைத்து இதயங்களிலும் உணரப்படும் இந்த அமைதியான ஞானத்தை சோதிக்க ஒரு சரியான அரங்கமாகும் இந்த புத்தகம். வாசிப்பனுபவத்தில்
இந்த படைப்பில் விளக்கப்பட்ட உணர்வுகளான சிறிய பெரிய ஏக்கங்களை, அபிலாஷைகளை உணர்ந்தவர்களாக முன்னோக்கிச் செல்கிறோம்.

சிந்தித்து செயல்படாமல், இன்பங்களை அனுபவிக்கும் உணர்வுக்கு நாம் இரையாகாமல், தெளிவான நெறிமுறைக் குள் அறிமுகமாகிறோம். பின்னர், சமூகத்துடன் உறுதி செய்யும் இந்த சலனத்தின் மூலம், நாம் எப்படி வாழ்கிறோம் என்பதை உணர்த்தி, அதுவே நம் தற்போதைய நிலைக்கும் நம் எதிர்கால நிலைக்குமான வித்தியாசத்தை விளக்க முற்படுகிறது.

சில படைப்புகள் கலங்கரை விளக்கமாக இருக்கும், சில படைப்புகள் கடற்கரையாக மட்டுமே இருக்கும். இவையிரண்டையும் உள்ளடக்கிய ஓர் எச்சரிக்கை தாங்கிய வழிகாட்டுதலாகவும் சில படைப்புகள் மட்டுமே இருக்கும். நைமி ஒரு எச்சரிக்கையுடன் பயணத்திற்கான பாதையில் நம்மை அழைத்துச் செல்கிறார்.

ஆம் கதைக்களம் ஒரு பயணத்துடன் தான் தொடங்குகிறது. ஆதி வெள்ளப்பெருக்கின் பின்னால் உயிர்தப்பியவர்களுடன் மிதந்துபோன பேழை, கரை ஒதுங்கிய இடமான பலிபீடச் சிகரத்தை நோக்கிய ஒருவனின் பயணமாக நகர்கிறது. அந்த ஒருவன் நீங்களாகவோ, நானாகவோ இருக்கலாம்.

செங்குத்துப் பாதை பயணத்தில்பலிபீடச் சிகரத்தை அடையும் வரை, வழியில் கிடைக்கும் அனுபவங்கள் சிலிர்ப்படைய வைக்கின்றன. அங்கு சந்திக்கும் ஒவ்வொருவிதமான மனிதர்களும், அவர்கள் உதிர்க்கும் வார்த்தைகளும் அற்புதமானவை.

ஒரு வீட்டிற்கு விளக்குமாறு எப்படியோ, அப்படித்தான் சுயதேடல் இதயத்திற்கு.நன்றாக கூட்டிப் பெருக்க இந்த புத்தகம் என்னை கூட்டி செல்கிறது என்றால் மிகையல்ல.

#இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top