Close
ஜூலை 4, 2024 3:47 மணி

புத்தகம் அறிவோம்… பணிப்பண்பாடு

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

“உழைப்பில் ஒரு சுவை இருக்கிறது. அதை அனுபவித்துப் பார்த்தவர்கள் ஒருபோதும் சோம்பியிருப்பதில்லை.
அவர்கள் இன்னும் ஏதேனும் கடினமான பணி தனக்கு ஒப்படைக்கப்படுமா என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

உழைக்கும் போது பிராணவாயு நுரையீரல்களை நிரப்புகிறது. ரத்த ஓட்டம் சீராகிறது. வியர்வை வெளியே வருகிறபோது உடல் குளிர்ச்சியடைகிறது. சிறுநீரகங்கள் செம்மையாகச் செயல்படுகின்றன. மூளை புத்துணர்ச்சி பெறுகிறது.

பணி முடியும்போது உண்டாகிற அழகிய பொருள்களால் இதயம் நிரம்புகிறது. மனிதப்பிறவியின் நோக்கம் நிறைவேறியதாக உள்ளம் பரவசமடைகிறது. அந்தத் திருப்தியை சோம்பியவர்களால் ஒரு நாளும் உணர முடியாது.
(பக்.4).

சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருக்கும் பயணியர் அறை உலகிலேயே தலைசிறந்த பயணியர் அறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டப்பட்டிருக்கிறது. அங்கே பாத்திரங்களைக் கழுவி வைக்கும் பெண்ணொருவர் அவற்றைச் சுத்தம் செய்கிற பணியைச் சற்று நேரம் ஓயாமல் கவனித்தேன்.

அதை, அவர் காவியம் படைக்கும் நேர்த்தியுடன், மகிழ்ச்சி யுடன் மேற்கொள்வதைக் கண்டேன். முகச் சுழிப்பு இல்லாமல், அருவருப்பு இல்லாமல், கையுறைகளோடு அந்தப் பணியை அவர் செய்வதைப் பார்த்தபோது நமக்கும் அப்படிச் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் ஏற்பட்டது. அவரிடம் சென்று மெதுவாகப் பேச்சுக்கொடுத்தேன்.

உங்கள் பணிகளையெல்லாம் யார் கண்காணிக்கிறார்கள் என்று கேட்டதற்கு அந்தப் பெண்மணி என்னை விநோதமாகப் பார்த்தார். ‘எதற்கு எங்களுக்கு கண்காணிப்பாளர் தேவை’ என்று திருப்பிக் கேட்டார்.

“எங்கள் பணியை எந்தக் குறைபாடும் இல்லாமல் நாங்கள் செய்துமுடிக்கிறபோது, நாங்களே அதற்கு கண்காணிப்பாள ராக இருக்கிறோம். இங்கே செய்பவர்களும் நாங்களே, செயல்படுபொருள்களும் நாங்களே “என்று அவர் அளித்த விளக்கம் அழகாக இருந்தது.

அங்கிருக்கும் ஒவ்வொருவரும் அப்படிப்பட்ட உழைப்பை நல்கியதால் தான் தலை சிறந்த ஓய்வறையாக அந்த இடம் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்படுகிறது. நாம் கழுவுகிற கோப்பையில் சின்னக் கறையிருந்தாலே நம் பணிக்கு களங்கம் என்று அவர்கள் நினைப்பதால்தான் அவர்களுக்கு அடுக்கடுக்காக மேற்பார்வையாளர்கள் தேவைப்படவில்லை.
(பக்.5).

சிங்கப்பூரில் எதர்க்கும் 15 நாட்களில் தீர்வு என்ற நடைமுறை உள்ளது. தன்னுடைய பிரச்னையை ஒருவர் அரசுக்கு கடிதம் மூலம் தெரிவித்தால் அதற்கு 15 நாட்களுக்குள் தீர்வுக்கான கடிதம் வரும். அதில் திருப்தி இல்லையென்றால் 15 நாட்க ளுக்குள் தெரிவிக்கவேண்டும். இல்லையென்றால் பிரச்னை தீர்க்கப்பட்டதாகக் கருதப்படும்.

இறையன்பு எழுதியுள்ள “பணிப் பண்பாடு” என்ற நூல், ஒவ்வொருவரும் தங்களுடைய பணிகளை அர்ப்பணிப்போடு செய்ய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் வரையப்பட்டுள்ளது. அது தனி மனித முன்னேற்றத்திற்கும், தேச முன்னேற்றத்திற்கும் அவசியம் என்பதை சிறந்த ஊதாரணங்களோடு,
உழைப்பே தியானம்,
பணியும் உழைப்பும்,
உழைப்பும் முயற்சியும்,
பணியும் நேர்மையும்,
பணியும் வாய்மையும்,
என்ற ஐந்து தலைப்புகளில் சொல்லியிருக்கிறார் இறையன்பு.

இந்த நூலை எனக்கு வழங்கியவர் தன்னுடைய அயராத உழைப்பின் மூலம், ஸ்ரீ பாரதி கல்வி நிறுவனங்ளை உருவாக்கியள்ள குரு.தனசேகரன்.NCBH வெளியீடு.

# சா.விஸ்வநாதன்-வாசகர் பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top