Close
நவம்பர் 21, 2024 1:55 மணி

புத்தகம் அறிவோம்… பாரதியின் பூனைகள்..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்- பாரதியின் பூனைகள்

“உன்னை ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தேன். எல்லோரும் அடிப்படையில் நல்லவர்கள், எல்லோரையும் நேசிக்க வேண்டும். மோசமானவர்களிடம் கூட கொஞ்சம் அன்பு ஒட்டியிருக்கும் என்று ஒரு நாள் எழுதினாய். இன்னொரு நாள், இந்த உலகிலேயே மிகவும் வலிமையான ஆயுதம் மென்மை. அதைக் கொண்டு அனைவரையும் வென்றுவிடலாம் என்று எழுதினாய்.

ஹிட்லரிடம் வெறுப்பு மட்டுமே இருந்தது. அதை அவர் அனைவருக்கும் வழங்கினார். உன்னிடம் அன்பு இருந்தது. அதை அள்ளி அள்ளி அனைவருக்கும் கொடுத்தாய். நல்லவர்களைக்கூட வெறுக்கச் சொன்னார் ஹிட்லர். எதிரிகளைக்கூட நேசி என்றாய் நீ. ஹிட்லர் மனிதர்களைப் பிரிக்க விரும்பினார். அனைவரையும் இணைய வேண்டும் என்றாய் நீ. ஹிட்லருக்கு பகையும் , போரும் முக்கியம். உனக்கு அமைதியும் மகிழ்ச்சியும் முக்கியம். இறுதியில் என்ன ஆனது தெரியுமா? உலகமே அஞ்சிய சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர் தோற்றுப்போனார். அவனுடைய வெறுப்பு அழிந்துபோனது.நீ வாழ்கிறாய் ஆன். உன் அன்பு ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டிருக்கிறது.

மனிதர்களை மட்டும். நேசிக்கவில்லை, ஒரு டைரியான என்னை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கிட்டி என்ற பெயரும் கொடுத்தாய்….உனக்குத் தெரியுமா? ஆன் ஃபிராங்கின் டைரி என்றுதான் என்னை எல்லோரும் அழைக்கிறார்கள்.

புகழ் பெற்ற, யூத சிறுமி ஆன் ஃபிராங்க் எழுதிய , The Diary of a young girl என்ற, கிட்டி என்ற பெயரிடப்பட்ட டைரியே பேசுவதாக எழுதப்பட்டதுதான் மேலே கண்ட வாசகங்கள்.

இந்து தமிழ் திசை, மாயாபசார் இணைப்பிதழில், கிழக்குப் பதிப்பகத்தில் ஆசிரியராகப் பணியாற்றும், இளைஞர்களுக்காகத் தொடர்ந்து எழுதும் மருதன் அவர்களால், இடம் பொருள் மனிதர் விலங்கு என்ற தலைப்பில் எழுதப்பட்ட 25 கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.

பாரதி, தாகூர், சாவித்திரிபாய் பூலே,
கபீர்,
மொசார்ட்,
மார்க்சிம் கார்க்கி,
புத்தர்,
லூயி பிரெயில் என்று பலரைப்பற்றி வித்தியாசமான முறையில் எழுதப்பட்ட இளையோர்களுக்கான நூலே இது.
கட்டுரை நாளிதழில் வெளிவந்த போது பள்ளிகளில் பரவலாக வாசிக்கப்பட்டிருக்கிறது என்பது இக்கட்டுரைகளின் சிறப்பு.இந்து தமிழ் திசை வெளியீடு-விலை. ரூ.85.

# சா.விஸ்வநாதன்- வாசகர் பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top