செல்வம் சேர்த்தலைப் புறந்தள்ளி நூல்களைச் சேர்த்தல், பாதுகாத்தல், தமிழ் வாசகர்களுக்கு பார்வைக்கு வைத்தல் என்னும் முப்பெரும் நெறி நின்று வாழ்பவர்கள் டோரதி – கிருஷ்ணமூர்த்தி தம்பதியர்.
அவர்கள் பவளவிழா கண்ட ஆண்டு 2015 ஆகஸ்ட் 15. பவள விழாவை ஒட்டி அறிவுலகமே திரண்டு ஆகஸ்ட் 16, 2017 அன்று ஒரு நாள் விழாவாக எடுத்துக்கொண்டாடியது.
அப்போது, பவள விழா மலருக்காகத் திரட்டப்பட்ட தமிழ் பண்பாடு சார்ந்த பொதுக்கட்டுரைகளின் தொகுப்பே இந்த
“பயன் பழுக்கும் அறிவுச்சோலை”.விழா மலர் மற்றும் அதுதொடர்பான நூல்களுக்கு முதன்மைப் பதிப்பாசிரியராக இருந்த “வைகறை” தொகுத்து பதிப்பித்தது.வெளியீடு சந்தியா பதிப்பகம்.
திவான் சர் அ.சேஷைய்யா சாஸ்திரியார்.
அமராவதி சேஷைய்யா சாஸ்திரியார் தென்னாட்டில் தோன்றிய ஆச்சரிய புருஷர்களில் ஒருவர். அவர் திருவனந்தபுரம் சமஸ்தானத்திலும், புதுக்கோட்டை சமஸ்தானத்திலும் திவானாக இருந்த காலத்தில் அவ்விடங்களில் செய்த சீர்திருத்தங்கள் பல. அவர் சிறு பதவியிலிருந்து தம்முடைய விடாமுயற்சினாலே உயர்பதவிக்கு வந்தவர். ஆதலின் உலகியலை நன்கு உணர்ந்திருந்தார்.
பல வேறு குறைபாடுகளை அடைந்திருந்த புதுக்கோட்டை ராஜ்யத்தை அவர் திவான் ரீஜென்டாக இருந்து மீட்டு நல்வளப்படுத்தினார். அவர் நிர்வாகத் திறமையும் குடிகளைப் பாதுகாத்த முறையும், வேறு சிறந்த குணங்களும் அவருடைய பெரும் புகழுக்கு காரணமாயின. கவர்னர்களே தம்முடைய வீட்டிற்கு வந்து கண்டு இன்புறும் கெளரவம் அவருக்கு இருந்தது. புதுக்கோட்டையில் நல்ல தண்ணீர் வசதியையும், அழகிய சாலைகளையும், பிற நலன்களையும் அமைத்து அழகு படுத்தி இராஜதானி நகரங்களிலுள்ள சிறப்புகளில் ஒன்றும் குறைவின்றிருக்கச் செய்தார்.
புதுக்குளமென்று இப்போது வழங்குகின்ற குளத்தை வெட்டி, அதிலிருந்து குழாய் வழியாக நகரின் பல பாகங்களுக்கும் பருகும் தண்ணீர் செல்லும்படி செய்தார். அங்ஙனம் செய்வதற்கு முன் தண்ணிரிலுள்ள கெடுதலால் அவ்வூரிலுள்ள பலருக்கு நரம்பு சிலந்தி என்ற வியாதி வருவது வழக்கம். சாஸ்திரியாருடைய ஏற்பாடுகளால் அவ்வியாதி இருந்த இடமே தெரியாமல் மறைந்துவிட்டது.
சமஸ்தானத்தில் நெடுந்தூரம் பயணம் செய்வதற்கு இருந்த வண்டிகளை நன்றாக அமைக்கச்செய்து ஒழுங்குபடுத்தினார். குதிரைவண்டிக்காரர்கள் தம் குதிரைகளைப் பல விடங்களில் அடித்துப் புண்ணாக்கி ஓட்டுவதையறிந்து அவ்வாறு செய்பவர்களுக்கு அபராதம் விதித்து அவர்களைத் திருத்தினார். இதனால் வாயில்லா பிராணிகளாகிய அவை தமக்குண்டாகும் துண்பத்தினிருந்தும் காப்பாற்றப்பட்டன.
பல தெருக்களை சாஸ்திரியார் ஒழுங்காக உண்டாக்கினார். அங்கங்கே காய்கறிகள் முதலியவற்றை விற்பதை நீக்கி ஒரே இடத்தில் அதற்குரிய வசதிகளை அமைத்தார். அங்கங்கே தீப ஸ்தம்பங்ளை நிறுவினார்.
உ.வே.சா., 1936 சுதேசமித்திரன் விஜயதசமி மலரில், நவீன புதுக்கோட்டையின் தந்தை என்றழைக்கப்படும் “சேஷைய்யா சாஸ்திரி” பற்றி எழுதிய கட்டுரையிலிருந்து(பக்.34, 35).
தமிழறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் என்று பலரும் எழுதிய 28 கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளது.
உ.வே.சா, எம்.வி.வெங்கட்ராம், பா.செயப்பிரகாசம் , தஞ்சை பிரகாஷ், வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி ஆகியோரின் கட்டுரைகளும் இதில் இடம்பெற்றுள்ளது.கலை, இலக்கியம், சுற்றுச்சூழல், சமயம், திராவிடக் கலாச்சாரம், திரைப்படம் என்று பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்துள்ளன. ஞானாலயா பவளவிழா தந்த அறிவுக்களஞ்சியம் இந்நூல்.
# சா. விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை #