Close
ஜூலை 5, 2024 12:58 மணி

புத்தகம் அறிவோம்.. காணக்கிடைக்காத கடிதங்கள்..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

அன்புள்ள சஞ்சீவிக்கு,
நலம் .கடிதம் பெற்றேன். பாரி நலம்பெற்று வருகிறான். அவனுடைய தாயின் பிடிவாதம் பலித்தது.வைத்தியம் நடைபெற்று வருகிறது. இயற்கை மருத்துவத்தை நிறுத்தி விட்டேன். நலம் பெற்று தேறுவான். கண்ணீர்ப்படை வென்றது.

உதவியாக அனுப்பிய ஐந்நூறு ரூபாய் செக் வரப்பெற்றேன். ஏற்கத் தயங்கினேன். வைத்துக் கொண்டுள்ளேன். அடுத்த ஆண்டில்தான் திருப்பித்தர முடியும் என எண்ணுகிறேன். முடியுமேல் அதற்கு முன்னரே தருவேன். நன்றி மிக.

உன்னிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை. விரும்பவும் இல்லை. வேண்டுமேல் நாளையே திருப்பித் தருவேன். இந்தத் தொகையில் உனக்கு உரிமை குறைவு அல்லவா? திரு… போன்றவர்கள் பலர் என்னுடன் பழகிய இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் பணத்தைப் புரட்டிக் கொண்டிருக்கின் றனர்.

அவர்களிடமிருந்தே எதிர்பார்த்தேன். நான் செய்த உதவிகள் எனக்கு வேண்டிய போது திரும்பி வராமல் ஐயாயிரமாய் முடங்கிக் கிடப்பதையும், யான் மேற்கொண்டுள்ள வேலை யையும் நினைக்கும் போதுதான், என் தவறு தெரிகிறது.

இரக்கம் தமிழகத்தை கெடுத்ததுபோலவே தனித்தனியே தமிழனையும் கெடுத்துள்ளது, கெடுத்து வருகிறது. பாடம் கற்றேன். இனி உதவி என்பது கூலித்தொழிலாளிக்குச் செய்வது  ஒன்றே என அமைய வேண்டும். கற்றோர் உதவிக்கு உரியவரல்லர்; ஏன்? அனுபவம். உனக்கும் என் அனுபவம் பயன்படுவதாக.

அன்புள்ள,
மு.வ.
சென்னை
22.9.1950.
தனக்கு உதவி செய்த சஞ்சீவிக்கு “மு.வ.வின் வருத்தமான கடிதம். “(சஞ்சீவி பின்னாளில் சென்னைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர்) (பக்.116).

மேலே கண்ட மு.வ.வின் கடிதம் போல், உவேசா, பாண்டித் துரைத்தேவர், வ.உ.சி.பாரதி, மறைமலைஅடிகள், ஆறுமுக நாவலர், ரா.பி.சேதுப்பிள்ளை ராஜாஜி, டி.கே.சி., கல்கி, தேவநேயப் பாவணர், அண்ணா, பெரியார். நாவலர் சோமசுந்தர பாரதி, ஜி.யு.போப்., ந.மு.வேங்கடசாமி நாட்டார், சுத்தாநந்தபாரதி, வினோபா பாவே, குன்றக்குடி அடிகளார், பி.யு.சின்னப்பா, எம்.ஜி.ஆர்., மற்றும் பல பெருமைக்குரி யவர்கள் எழுதிய கடிதங்கள் “காணக்கிடைக்காத கடிதங்கள்” நூலில் உள்ளது.

100 கடிதங்களில் ஒவ்வொன்றும் அரிய செய்திகளை நமக்குத் தெறிவிக்கிறது. எல்லாக் கடிதங்களுமே காலத்தால் பழமை யானது. பாரதியின் நூறாண்டுகளைக்கடந்த கடிதமும் இதில் உள்ளது.

இதில் உள்ள 77 -வது கடிதம், சினிமாவில் நடிக்க விரும்பும் தனது நண்பருக்கு எம்.ஜி.ஆர். 19.2.1948 -ல், எழுதிய கடிதம். இதில் சினிமா உலகத்திற்கு வர வேண்டாம் என்பதற்கான காரணங்களைச் சொல்லியதோடு அப்படி வருவதாக இருந்தால் என்னென்ன வேண்டும், எப்படி இருக்கவேண்டும் என்று சொல்லும்போது ஒழுக்கம் எவ்வளவு அவசியம் என்பதையும் கூறுகிறார்.

.”இத்துடன் ஒழுக்கம் முக்கியம். இந்த ஒழுக்கத்தை தற்கால சினிமாவில் எல்லோரிடமும் காண முடியவில்லை. அதுமட்டு மல்ல..  ஒழுக்கம் என்பது வெறும் கேலிக்கூத்து என்றுகூட நினைக்கும், பேசும், நடக்கும் நடிக நடிகையர்களும் இருக்கி றார்கள் என்பதை நடிகர் என்ற முறையில் தலைகுனிவுடன் வெட்கத்துடன் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

ஆனாலும் ஆர்வமுள்ள நேர்மையுள்ள தங்களைப் போன்ற வாலிபர்கள் நடக்கத் தீர்மானித்தால் தற்காலம் உள்ள இழிவான நிலையை மாற்றி நிச்சயம் வெற்றி காணமுடியும். ஆகவே தாங்கள் சினிமாவில் நுழைவதன் முன் ஒழுக்கத்தைப் பற்றி நன்கு உணர்ந்து தாங்கள் எங்கிருந்தாலும் எந்த வேலையிலிருந்தாலும் அதை வாழ்க்கையின் ஒரு பகுதியாக் கிக்கொள்ளச் சிறிதும் தவறக்கூடாது” என்று இப்படி எழுதுகிறார்.

இதில் உள்ள 99  -வது கடிதம் அண்ணா, 10.10.1968 -ல் நியுயார்க் கிலிருந்து பெரியாருக்கு எழுதிய உருக்கமான கடிதம். அதிலிருந்து…”சென்னை மருத்துவமனையிலும், விமான நிலையத்திலும் தாங்கள் கவலையுடனும் கலக்கத்துடனும் இருந்த தோற்றம் இப்போதும் என் கண் முன் தோன்றியபடி இருக்கிறது. ஆகவே தான் கவலைப்பட வேண்டிய நிலை முற்றிலும் நீங்கிவிட்டது என்பதனை விளக்கமாகத் தெரிவித்திருக் கிறேன்.

தங்கள் அன்புக்கு என் நன்றி. தாங்கள் பிறந்தநாள் மலர்க் கட்டுரை ஒன்றில், மனச்சோர்வுடன் துறவியாகி விடுவேனோ என்னவோ என்று எழுதியிருந்ததைக் கண்டு மிகவும் கவலை யுற்றேன். தங்கள் பணி மகத்தான விழிப்புணர்ச்சியை சமூகத்தில் கொடுத்திருக்கின்றது.

நான் அறிந்தவரையில் இத்தனை மகத்தான வெற்றி வேறு எந்த சமூக சீர்திருத்தவாதிக்கும் கிடைத்ததில்லை அதுவும் நமது நாட்டில். ஆகவே சலிப்போ கவலையோ துளியும் தாங்கள் கொள்ளத் தேவையில்லை. எனது வணக்கத்தினை மணி அம்மையார் அவர்களுக்குத் தெரிவிக்கவும். (பக். 159 – 160). இப்படி ஒரு அருமையான கடிதத் தொகுப்பைத் தந்த முல்லை பி.எல்.முத்தையா தந்திருக்கிறார்.வெளியீடு:
முல்லை பதிப்பகம், சென்னை.9840358301.

# சா.விஸ்வநாதன்-வாசகர் பேரவை- புதுக்கோட்டை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top