Close
ஜூலை 8, 2024 11:28 காலை

புத்தகம் அறிவோம்… கல்வி வள்ளல் காமராஜர்..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

பெரிய பதவி(பொதுக்கல்வி இயக்குனர்) கொடுத்து,அதற்கு மேலாகப் பெரிய உரிமையைக் கொடுத்து, அதற்கு ஆதரவாக, உயர்ந்த மதிப்பையும் கொடுத்த காமராஜரோ என்னிடம் எந்த பரிந்துரையும் சொன்னதில்லை. ஒன்பதாண்டு காலம் எனக்கு ஆணையிடும் உரிமையைப் பெற்றிருந்த முதலமைச்சர் காமராஜர் எந்தப் பரிந்துரையும் செய்ததில்லை. கட்சியை வளர்ப்பதில் ஈடு இணையற்றவர் காமராஜர்.

இருப்பினும் கட்சித் தொண்டர்களுக்குக் கூட எவ்வித பரிந்துரையும் சொல்லவில்லை. தம்முடைய தனிச்செயலர் மூலமும் எதையும் கேட்டிராதவர். பல நூறு மேடைகளில் நான் அவர் உடன் இருந்த போதும், தன்னைச் சார்ந்தவர்களுக்காக எதையும் கேட்காத நெறியாளராக விளங்கினார் காமராஜர்.

“என்னை ஒருமையில் அழைக்க உரிமையுடைய கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியமும் எப்போதும் யாருக்காகவும் எதற்காகவும் என்னிடம் பரிந்துரை செய்யவில்லை.(இப்போது பரிந்துரையின்றி எதுவும் நடப்பதில்லை)(பக்.15)

“அத்தனை பேரும் படிக்கணும் என்றேன். வயிற்றிலே ஈரமில்லாதவன் எப்படிப்படிப்பான்? அவனுந்தானே இந்த தேசத்துக்கு சொந்தக்காரன். ஏழைக்குழந்தைகளுக்கு பள்ளிக்கூடத்திலே சோறு போட்டு படிக்க வைக்கணும். இதைத் தள்ளிப்போட முடியுமா என்ன? இது ‘மிக முக்கியம்.

உடனடியாகத் தொடங்கிவிடனும். பணத்திற்கு எங்கே போவது? இப்படிக் கேட்பீர்கள். வழி இருக்குது. தேவைப் பட்டால் மதிய உணவிற்கு வரி போடத் தயங்க மாட்டேன். எப்படியும் எல்லா ஏழைகளும் படிக்கணும். அவர்களுக் குந்தான் தேசம்.” – காமராஜர்(பக்19).

“அதற்கு முன்,ஒரு நூற்றாண்டில் ஏற்பட்ட வளர்ச்சியை முதலமைச்சர் காமராஜர், எட்டாண்டுகளில் சாதித்துக் காட்டினார். பதினாறு ஆயிரம் தொடக்கப் பள்ளிகளும் அவற்றில் 16 லட்சம் குழந்தைகளும் படித்த தமிழ்நாட்டிற்கு பொறுப்பேற்றார் காமராஜர். தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை முப்பதாயிரமாக வளர்ந்தது. படிப்போர் எண்ணிக்கையோ நாற்பத்தெட்டு லட்சமாக உயர்ந்தது. அதில் பதினாறு லட்சம் பேர்களுக்கு பகல் உணவு கிடைத்தது.

அறுநூற்று அய்ம்பது உயர்நிலைப் பள்ளிகளைக் கொண்டிருந்த தமிழ்நாட்டில் இரண்டாயிரத்து இருநூற்றுக்கு மேற்பட்ட உயர்நிலைப் பள்ளிகள் வளரச் செய்த பெருமை கல்வி வள்ளல் காமராஜருடையதாகும். அவர் பதவி ஏற்ற போது 3.86 லட்சம் மாணவ மாணவியர் உயர்நிலைப் பள்ளிகளில் படித்தார்கள். அந்த எண்ணிக்கையை 13 இலட்சமாக மாற்றி மகிழ்ந்தார்.(பக்.33-34).

தமிழகத்தில் கல்வியை வளர்த்தெடுத்ததில், காமராஜர், சி.சுப்பிரமணியம், நெ.து.சுந்தரவடிவேலு என்ற இந்த “மும்மூர்த்திகளுக்கு” முக்கிய பெரும்பங்குண்டு.காமராசர் முதலமைக்காராக இருந்த காலம் முழுவதும் பொதுக் கல்வி இயக்குனராக இருந்தவர் நெ.து.சு.

காமராஜர் அறிமுகப்படுத்திய அத்தனை கல்வித் திட்டங்களையும் சரியான முறையில் செயல்படுத்தியவர் நெ.து.சு. அதனால் நெ.து.சுவின் இந்த “கல்வி வள்ளல் காமராஜர்”புத்தகம் முக்கியத்துவம் பெருகிறது. காமராஜர் முதலமைச்சர் ஆனதில் தொடங்கி அவர் மறைவு வரையிலான வரலாற்றைச் சொல்லும் சிறிய நூல் இது.

குறிப்பாக காமராஜர் காலத்திய கல்வி வளர்ச்சியைக் சிறப்பாகப் பேசுகிறது. அதோடு காமராஜரின் குணாதிசயங்களையும், அரசு நிர்வாகத்தை நடத்திச் செல்வதில் காட்டிய நேர்வழியையும் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார் நெ.து.சு.கல்வியாளர்கள், ஆசிரியர் கையில் இருக்க வேண்டிய நூல் இது.மங்கை வெளியீடு
9790706549-ரூ.50.

# சா. விஸ்வநாதன்-வாசகர்பேரவை- புதுக்கோட்டை#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top