1949, நவம்பர் 26 ஆம் தேதி தான், இந்திய அரசியல் நிர்ணய சபையின் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், அரசியல் அமைப்பு சட்டவரைவுக் குழுத் தலைவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் உள்ளிட்ட 284 உறுப்பினர்கள் கையொப்பத்துடன் அரசியல் அமைப்புச் சட்டம் எழுதும் பணி நிறைவு பெற்றது. எனவே இந்த நாள் அரசியலமைப்பு தினமாக கொண்டாடப் படுகிறது. 1949 நவம்பர் 26 அரசியலமைப்பு சட்டம் வரையும் பணி நிறைவுற்றாலும் நடைமுறைக்கு வந்தது 1950 ஜனவரி 26 தான்.
1929 டிசம்பரில் லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் 1930 ஜனவரி 26 முதல் இந்த நாளை ‘இந்திய சுதந்திர தினமாக’ அனுசரிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது முதல் ஆண்டுதோறும் ஜனவரி 26 இந்திய சுதந்திர தினமாக அனுசரிக்கப்பட்டு வந்தது. அதனாலேயே 1950 , ஜனவரி 26 -ஐ அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வரும் தினமாக தேர்ந்தெடுத்தார்கள்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் உலகிலேயே நீளமான அரசியலமைப்புச் சட்டம்.உலகிலேயே மிகச்சிறிய அரசியலமைப்புச் சட்டம்’ அமெரிக்க ஐக்கிய நாடுகள் ‘அரசியலமைப்புச் சட்டம்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் எழுதி முடிக்க 2 ஆண்டுகள் 11 மாதங்கள், 22 நாட்களாகியது; 64 லட்ச ரூபாய் செலவாகியது.அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த போது 395 சரத்துகள், 8 அட்டவணைகள், 22 பகுதிகள் இருந்தது.
இந்திய அரசியலமைப்புச் சட்டமூலநூலில் உள்ள ஓவியங்கள் முழுவதையும் தீட்டியது பிரபல வங்காள ஓவியர் நந்தலால் போஸ் மற்றும் அவர் உதவியாளர்கள்.ஆங்கில மூலப்பிரதியை அழகிய Calligraphy முறையில் எழுதியவர் பிரேம் பெகாரி நாராயண் ராய் சதா(Prem Behari Narain Ray zada).
“இதை எழுதுவதற்கு உங்களுக்கு எவ்வளவு ஊதியம் வேண்டுமென்று” நேரு கேட்க, “எனக்கு ஒரு பைசா கூட வேண்டாம். கடவுள் அருளால் போதிய அளவு என்னிடம் உள்ளது. ஆனால் என்னுடைய பெயரை ஒவ்வொரு பக்கத்திலும் எழுதவும், இறுதிப் பக்கத்தில் என் பெயரோடு எனது பாட்டனார் பெயரையும் எழுத அனுமதி வேண்டும்” என்றிருக்கிறார்.நேரு அதற்கு ஒப்புதல் தந்திருக்கிறார்.
இன்றைய பாராளுமன்ற வளாகத்தில் ஒரு அறை ஒதுக்கப்பட்டு தேவையான வசதிகளை நேரு செய்து கொடுத்திருக்கிறார். 6 மாதத்தில் எழுதி கொடுத்திருக்கிறார். மூல நூலில் அவர் பெயரும் அவர் பாட்டனார் பெயரும் உள்ளது.இந்தி வடிவத்தை வசந்த் கிருஷன் வைத்யா என்பவர் எழுதி கொடுத்திருக்கிறார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் வரைவதில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பெரும் பங்காற்றியிருக்கிறார். அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவரான டாக்டர் ராஜேந்திரசாத், தனது உடல் நலன் சீர்குலைந்து வருவதைப் பொருட்படுத்தாமல், அம்பேத்கார் தன் செயல் திறமையால், வரைவுக் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப் பட்டதை நியாயப்படுத்திய தோடு மட்டுமல்லாமல் தான் வகித்த பொறுப்பிற்கு கௌரவமும் பெற்றுத் தந்தார் என்று பாராட்டியுள்ளார்.
டாக்டர் அம்பேத்கார், இந்திய அரசியல் அமைப்பு சட்டம் தொடர்பான விவாதங்கள் முடிவடைந்தபின் 25.11.1949 அன்று அம்பேத்கர் அளித்த பதிலுரையில் குறிப்பிட்டதை இங்கே குறிப்பிடவேண்டும்.
இந்த அரசியலமைப்புச் சட்டம் சிறந்ததா இல்லையா என்பது இதைச் செயல்படுத்துவோரைப் பொறுத்தே உள்ளது.நாம் நம் சுதந்திரத்தைப் பேணிக்காக்க நமது ரத்தத்தின் கடைசி சொட்டு மிஞ்சியிருக்கும் வரையிலும் முழு முயற்சியுடன் ஈடுபடவேண்டும்.
இந்திய அரசியல் துறையில் தலைவர்களிடம் பக்தி காட்டும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது. மோட்சம் பெருவதற்கு வேண்டு மானால் பக்தி பயன்படலாம். ஆனால் அரசியல் தலைவர் மீது பக்தி ஏற்பட்டால் நமக்குப் பேரழிவு விளையும். இதன் தவிர்க்க முடியாத பின் விளைவாக சர்வாதிகாரம் தோன்றும்..
மூன்றாவது முக்கியமான விஷயம் என்னவென்றால் நாம் அரசியலில் குடியாட்சி முறை கிடைத்துவிட்டதால் மட்டும் திருப்தியடைந்துவிடக் கூடாது. இந்தக் குடியாட்சி முறைக் கொள்கை நமது சமூக வாழ்விலும், பொருளாதார வாழ்விலும் முழுமையாக ஊடுருவிப் பரவியிருக்கவேண்டும்.
நமக்கு அரசியல் ஜனநாயகம் மட்டும் போதாது பொருளாதார மற்றும் சமூக அடிப்படையிலான ஜனநாயகமும் தேவை.”(டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கார், வசந்த் மூன், தமிழாக்கம் டாக்டர் என்.ஸ்ரீதரன். NBT)
இன்றைக்கு இந்தியா வலிமையான , ஒற்றுமைப்பட்ட நாடாக இருப்பதற்கு காரணமே நம் அரசியலமைப்புச் சட்டம்தான். இதை வழங்கிய அனைவருக்கும் நன்றி சொல்வோம்.
சுபாஷ் கஷ்யப் மத்திய அரசில் அமைச்சரவைச் செயலராக பணியாற்றியவர். சிறந்த அரசியலமைப்புச் சட்ட அறிஞர். இந்த நூல், இந்தியாவில் உள்ள அனைவரும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை அறிந்து கொள்ள வேண்டு மென்ற நோக்கில், ஆங்கிலம் மட்டுமல்லாமல் அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ள அனைத்து மொழிகளிலும் நேஷனல் புக் டிரஸ்ட்டால் வெளியிடப் பட்டுள்ளது.
# சா. விஸ்வநாதன்- வாசகர் பேரவை- புதுக்கோட்டை #